சென்னை: 'ஏர்வாடியில், மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணிடம், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட, ஏழு பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணை, மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டும்' என, தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் முஸ்தபா கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்காவில் தங்கி, மனநல பாதிப்பிற்காக சிகிச்சை பெற்று வந்த பெண்ணை, 17 வயதிற்கு உட்பட்ட, ஏழு சிறுவர்கள், பாலியல் பலாத்காரம் செய்ததாக, அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த பெண்ணிற்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்யாமல், மீண்டும் இரும்பு சங்கிலியால், மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.தர்காவில், 2001ல் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து, யாரையும் இரும்பு சங்கிலி போட்டு கட்டக்கூடாது என, அரசு அறிவித்தது. அரசு உத்தரவு, காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.ஏர்வாடி தர்காவில், மீண்டும் தலைதுாக்கியுள்ள இந்த செயலை, உடனடியாக, அரசு தடுத்து நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். அந்த பெண்ணை மன நல காப்பகத்தில் சேர்க்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.