சென்னை: சென்னையில், காற்றின் வேக குறைவு மற்றும் வெப்பநிலை முரண்பாடு காரணமாக, காற்றில் கலந்த மாசு, கடலுக்குள் செல்லாமல் நிற்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை, அக்., 16ல் துவங்கியது; 10 நாட்கள் பரவலாக மழை பெய்தது. பருவ மழையின் தாக்கம், அரபி கடலில், 'கியார் மற்றும் மஹா' புயலாக மாறியது. அதனால், தமிழகத்தில் மழை குறைந்தது. இதையடுத்து, வங்க கடலில் உருவான, 'புல் புல்' புயல், அந்தமான் அருகில் இருந்து, ஒடிசாவை நோக்கி சுழல்கிறது. இதன் காரணமாகவும், தமிழகத்தில் மழை குறைந்து, வறண்ட வானிலை நிலவுகிறது.
அதிர்ச்சி
இந்நிலையில், சென்னையின் நகர பகுதிகளில், மூன்று நாட்களாக, வானில் காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. உச்சகட்டமாக, நேற்று காலை முதல் மாலை வரை, புகை மூட்டமாக வானம் காணப்பட்டது. காலையில், சூரிய உதயத்தின் போது, சூரிய கதிர்களே பரவ முடியாத அளவுக்கு, காற்றில் மாசு அதிகரித்து, புகை மூட்டம் போல தோன்றியது. இந்த புகை மூட்டம், நேற்று பிற்பகல் வரை, கலையாமல் இருந்ததால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டில்லியில், காற்று மாசு உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னையில் அதேபோன்ற நிலை ஏற்பட்டதால், பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த காற்று மாசு, வானில் நீடிக்க காரணம் என்னவென்று, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:தமிழகத்தை பொறுத்தவரை, இன்னும் பனிப்பொழிவு துவங்கவில்லை. வங்க கடலில், புல் புல் புயல் சுழல்வதால், தமிழகத்தை நோக்கி, தென்மேற்கில் இருந்து வரும் காற்று தடைபட்டுள்ளது. வடகிழக்கு காற்றும் வலுவிழந்து காணப்படுகிறது. வழக்கமாக, சென்னையில் தரை பகுதியின் வெப்பநிலையும், வானில், 500 மீட்டருக்கு மேலான வெப்பநிலையும், ஒரே அளவில் இருக்கும். அப்போது, தொழிற்சாலை மற்றும் வாகனங்களில் இருந்து வரும் புகை மற்றும் காற்று மாசு ஆகியன, மேலே இழுத்து செல்லப்படும், பின், காற்றின் வீச்சில் கடல் பகுதிக்குள் சென்று விடும். காற்றின் வேகம்ஆனால், சென்னையில் மூன்று நாட்களாக, காற்றின் வீச்சு குறைந்து, 'இன்வேர்ஷன்' எனப்படும், தலைகீழ் நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது, தரைப்பகுதி வெப்பநிலை குறைவாகவும், 500 மீட்டருக்கு மேல் வெப்பநிலை அதிகமாகவும் உள்ளது.
அதனால், காற்றில் கலந்த மாசு நகர முடியாமல், வளி மண்டலத்தில் மிதக்கிறது. கடல் காற்றின் வேகம் அதிகரித்தால், இந்த நிலை மாறி விடும். இவ்வாறு, அவர் கூறினார்.அபாய கட்டத்தில் சென்னைசென்னையில் உள்ள காற்று மாசு, நேற்று டில்லியின் காற்று மாசு அளவை எட்டும் அளவுக்கு காணப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி, ஒரு கன சதுர மீட்டரில், 272 நுண் துகள்கள் இருந்தன. இயல்பாக, 142க்குள் மட்டுமே இருக்க வேண்டும். இது குறித்து விசாரித்தபோது, சென்னையில் போக்குவரத்து புகை, சீரமைக்கப்படாத மண் கலந்த சாலைகள், குப்பை எரிப்பதால் வரும் புகை, வாகன புகை, சென்னையின் புறநகர்களில் இயங்கும் தொழிற்சாலைகளின் புகை போன்றவற்றால், காற்றில் மாசு அதிகரித்து காணப்படுகிறது.
இந்த காற்று மாசு, இவ்வளவு நாளாக காற்றின் வேகத்தால், கடலுக்குள் தள்ளி செல்லப்பட்டு, வெளியே தெரியாமல் இருந்துஉள்ளது. தற்போது, வானிலை மாற்றம் காரணமாக, சென்னையின் உண்மையான காற்று மாசு வெட்ட வெளிச்சமாகியுள்ளது என, சூழல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதை, வெறும் வானிலை மாற்றமாக, அரசு துறைகள் எடுத்து கொள்ளக் கூடாது. மாறாக, காற்று மாசுவின் அபாயமாக கருதி, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கைகளை, சென்னையில் மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE