பரமக்குடி: ''தமிழகத்தில் இலவசங்களை கொடுத்து மக்களை கெடுத்து விட்டனர். அதை நான் தடுத்தால், 'கிடைப்பதை தடுக்கிறானே' என மக்கள் கோபப்படுவர்'' என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் பேசினார்.
கமல் 65வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தெளிசாத்தநல்லுாரில் அமைக்கப்பட்டு உள்ள திறன் மேம்பாட்டு மையத்தை திறந்து வைத்தார். சுதந்திரப் போராட்டவீரரும், அவரது தந்தையுமான வழக்கறிஞர் சீனிவாசன் சிலை அந்த வளாகத்தில் திறக்கப்பட்டது. கமல் குடும்பத்தினர் பங்கேற்றனர். துணைத்தலைவர் மகேந்திரன் வரவேற்றார். பொருளாளர் சந்திரசேகர், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேசினர். கட்சி கொடி ஏற்றிய கமல் மரக்கன்றுகள் நட்டார்.
கமல் பேசியதாவது: என் தந்தையிடம் சிலர், 'ஐ.ஏ.எஸ்., படிக்க வேண்டிய பையனை கலைஞனாக மாற்ற நினைக்கிறீர்களே' என்றனர். 'முதலில் கலைஞனாகட்டும். பின் ஐ.ஏ.எஸ்., ஆகலாம்' என்பார். 'சொல்லத்தான் நினைக்கிறேன்' படப்பிடிப்பு நடந்த போது. 'மாலை நேர கல்லுாரியில் படித்து ஐ.ஏ.எஸ்., ஆகிவிடு' என்பார். 'பாலச்சந்தர் ஒரு ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். அந்த வழியில் நான் செல்கிறேன். படிப்பெல்லாம் நமக்கு வராது' என்றேன்.

'சங்கீதமாவது கற்றுக்கொள்' என்றார். எனது குடும்பத்தில் அனைவரும் கலைஞர்கள். அவர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல்தான் நான் வெளியேறி சினிமாவுக்கு போனேன். எனது குடும்பத்தில் யாருக்கும் அரசியல் விருப்பம் இல்லை. 'அரசியலுக்கு வர வேண்டும்' என தந்தை மட்டும் தொடர்ந்து சொல்லி வந்தார். அப்போது ஊதாசீனப்படுத்தினோம். 'எங்கள் காலத்தில் சுதந்திரப் போராட்டம் நடந்தது. அதனால் அரசியல் தேவைப்பட்டது. அப்படி ஒரு போராட்டம் வந்தால் என்ன செய்வாய்' என்றார். இன்று அப்படி ஒரு நிலை ஏற்பட்டதால் அரசியலுக்கு வந்துள்ளேன்.
ராணுவத்திற்கு பிள்ளைகளை அனுப்ப மறுக்கும் தாய்மார்கள் உள்ளனர். ராணுவத்தில் போர் செய்து இறந்தவர்களை விட விபத்தில் இறப்பவர்கள் நுாறு மடங்கு அதிகம். இந்த வேலையைத்தான் செய்வேன் என அடம் பிடிக்க கூடாது. 5 வயதில் எனது அண்ணி என் பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது மகிழ்ச்சியாக இருந்தது. அமெரிக்காவில், பாரீசில் கொண்டாடிய போது கிடைக்காத மகிழ்ச்சி இந்த விழாவில் கிடைத்துள்ளது. இவ்வாறு பேசினார்.
'பரமக்குடியில் போட்டியிட விருப்பம்'
* நிகழ்ச்சி துவக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதை நிறுத்தி மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
* கமலை துாக்கி வளர்த்த ராமசாமியை மேடைக்கு அழைத்து கவுரவப்படுத்தினர்.
* பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேசிய போது ரசிகர் ஒருவர் கடவுள் கமல் என கூச்சலிட்டார். பொறுமையாக இருக்க சொல்லியும் கேட்காததால், வெளியேற்றப்பட்டார்.
* சிலையை வெளியே திறப்பதாக இருந்தது. போலீசார் அனுமதிக்காததால் திறன் மேம்பாட்டு மைய கட்டட வளாகத்தில் திறக்கப்பட்டது.
* சீனிவாசன் பரமக்குடி நீதிமன்றத்தில் பணியாற்றியதால், அவரது படம் பார் கவுன்சில் அலுவலகத்தில் திறக்க திட்டமிடப்பட்டது. சில வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
* சிலையை வேன்ஸ் என்பவர் வடிவமைத்தார். அவரை மேடையில் கவுரவப்படுத்தி, 'இந்தியன் 2' படத்தில் கமல் முகத்தை வடிவமைத்தவர் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது.
* இந்தியாவில் டாப் 10 தர வரிசையில் உள்ள செஞ்சூரியன் பல்கலை மூலம் திறன்மேம்பாட்டு மையம் நடத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
* சுஹாசினி தனது மகன் நந்தனை அறிமுகப்படுத்தி, 'அரசியலுக்கு வந்தால் நந்தன் பரமக்குடி தொகுதியில் போட்டியிட விரும்புகிறார்' என்றார்.
சிவாஜியின் திரை வாரிசு கமல்: பிரபு புகழாரம்
கமலின் தந்தை சிலை திறப்பு விழாவில் பங்கேற்றவர்கள் பேசியதாவது:
கமலின் அண்ணன் சாருஹாசன்: அரசியலும், சினிமாவும் மக்கள் தொண்டு. அப்படித்தான் கமலை தயார் செய்தார் தந்தை. திரைத்துறையில் என்னை விட 20 வயது மூத்தவர் கமல். வக்கீலாக பணிபுரிந்த பின் சினிமாவுக்கு வந்தேன். இது போன்ற தம்பிகள் பெருக வேண்டும்.
நடிகர் பிரபு: 5 வயதில் சினிமாவுக்கு வந்தவர் கமல். ''எனது திரை உலக வாரிசு கமல்தான். தொழில்நுட்பத்தில் எனது தோளில் முட்டி போட்டு அண்ணாந்து பார்க்கிறான். அந்த அளவிற்கு என்னை விட தொழில் நுட்பம் தெரிந்தவன் கமல்'' என்றார் எனது தந்தை சிவாஜி.
நடிகை சுஹாசினி: நீங்கள் இல்லை என்றால் சினிமாவில் நான் இல்லை. நடனம், நடிப்பு இல்லாமல் தொழில்நுட்ப பணிகளுக்கு பெண்கள் வர வேண்டும் என திரைப்படக் கல்லுாரி கட்டணத்தையும் அவர் கட்டினார். கணவர் மணிரத்னம் கிடைத்ததும் அவரால்தான்.
நடிகை ஸ்ருதி: பல ஆண்டுகளுக்கு பின் பரமக்குடிக்கு வந்துள்ளேன். எனது அப்பாவின் பெற்றோர் இருந்தால் இப்போது பெருமைப்படுவர். அதே பெருமையை நாங்கள் ஒருநாள் உங்களுக்கு தருவோம். இவ்வாறு பேசினார். நடிகை பூஜா குமார், கவிஞர் சிநேகன் உட்பட கட்சியினர் பங்கேற்றனர்.