சில கருத்தரங்குகளில் தான், மிக அபூர்வமான தகவல்கள் கிடைக்கும். சென்னையில் உள்ள மெட்ராஸ் போட்டோகிராபி சொசைட்டி சார்பாக நடந்த, ஹம்பி பற்றிய புகைப்பட கருத்தரங்கில் தான் அப்படிப்பட்ட, அபூர்வமான பல தகவல்கள் கிடைத்தன.
வரலாற்று சின்னங்களின் ஆய்வாளரும், புகைப்படக் கலைஞருமான வி.ஸ்ரீராம் பேசியதில் இருந்து கிடைத்த விஷயங்களாவது: அமெரிக்காவில் வெளிவரும், 'தி நியூயார்க் டைம்ஸ்' இதழ், உலகில் அவசியம் பார்க்க வேண்டிய, 52 இடங்களை பட்டியலிட்டுள்ளது. இதில், இரண்டாவது இடத்தில் இருப்பது தான் ஹம்பி.
கர்நாடக மாநிலத்தின், வடக்கு பகுதியில், துங்கபத்ரா ஆற்றங்கரையில் உள்ளது ஹம்பி. 1565ம் ஆண்டுகளில், உலகிலேயே செழுமையான பூமியாகவும், பணக்கார நகரமாகவும் சிறந்த கலைநயம் கொண்டதாகவும் அறிவிக்கப்பட்ட விஜய நகர பேரரசின் அழிந்து போன மிச்சங்கள் தான், இன்றைய ஹம்பி.

கலைநயம்:
அழிந்து போன ஒரு பேரரசின் அவலத்தை, புகைப்படங்களால் உலகின் கவனத்திற்கு கொண்டு வந்தவர், பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றிய கிரீன்லா என்பவர் தான். 1856ம் ஆண்டு, அன்றைய காலகட்டத்தில் இருந்த கேமராவை வைத்து, 60க்கும் அதிகமான படங்களை எடுத்தார். அந்த படங்கள் தான், உலகத்தினரின் கவனத்தை ஈர்த்து, இன்று லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஹம்பிக்கு வரவழைத்திருக்கிறது. 16 கி.மீ., சுற்றளவிற்கு கல்லிலே கவிதை வடித்தது போல எழுப்பப்பட்டு இருக்கும் இடிந்த கட்டடங்களின் கலைநயம், காலம் கடந்தும் நிற்கக்கூடியவை.
ஹம்பியின் வரலாறு மிக சுவாரசியமானதாகும். இன்றைய தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவின் பெரும் பகுதிகளை கொண்டு இருந்தது. விஜயநகரப் பேரரசை ஆண்ட மன்னர்களில், கிருஷ்ணதேவராயரின் காலமே பொற்காலமாகும். டில்லி சுல்தான்களின் ஆட்சி தென்பகுதிக்கு விரிவாகாமல் தடுத்து அரணாக இருந்தவர்.

விஜயநகர பேரரசு:
தலைநகரை பார்த்து பார்த்து உருவாக்கினார். மாட மாளிகைகளும், கோபுரங்களும், தாமரை தடாகமும், விருப்பாட்சி மற்றும் விட்டல கோபுரமும், கல்தேரும் லட்சுமி நரசிம்மர் சிற்பமும், இவரது பெயரை இன்னும் பல நுாற்றாண்டுகளுக்கு சொல்லும். இவருக்கு பின் வந்தவர்கள், பாமனி சுல்தான்களால் தோற்கடிக்கப்பட்டனர். விஜயநகர பேரரசின் மீது கடும் பொறாமை மற்றும் வெறுப்பில் இருந்த சுல்தான்கள், தன் படைகளை ஆறு மாத காலம், இங்கேயே இருக்கச் செய்தனர். இந்த படையினருக்கு இட்ட ஒரே கட்டளை, பேரரசின் அனைத்து கட்டடங்களையும் அடித்து இடித்து அழிக்க வேண்டும் என்பது தான்.

அப்படி அழிக்கப்பட்ட விஜயநகரத்தில், அரைகுறையாக எஞ்சி இருப்பதே, இன்றைய ஹம்பி. இதுவே இத்தனை அழகையும் கலைநயத்தையும் கொண்டு இருந்தால், அந்த காலத்தில் எப்படி எல்லாம் இருந்திருக்கும் என்ற ஏக்கம் எழாமல் இருக்காது. 'ஏன் போர் கூடாது?' என்பதற்கு, ஹம்பி நகரமே சாட்சி என்று உணர்ச்சிகரமாக, ஒரு வரலாறை கிரீன்லா எடுத்த புகைப்படங்களைக் கொண்டு சொல்லி முடித்த வி.ஸ்ரீராமிற்கு, மெட்ராஸ் போட்டோகிராபி சொசைட்டியின் தலைவர் டாக்டர் அழகானந்தம், அசோக் கேடியா, வி.விவேகானந்தன் ஆகியோர் பரிசு வழங்கி கவுரவித்தனர்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE