இந்த செய்தியை கேட்க
சென்னை: மிசா சட்டத்தின் கீழ் திமுக தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டாரா, இல்லையா என்பது தொடர்பாக அதிமுக - திமுக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை திமுக விட்டாலும், அதிமுக விடாமல் ஆதாரங்களுடன் நிரூபித்தே தீருவோம் அடம் பிடித்து வருகிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது பேட்டி அளித்த அமைச்சர் மாபா பாண்டியராஜன், மிசா அமலில் இருந்த போது ஸ்டாலினை எதற்காக அடித்தார்கள், என்ன காரணத்திற்காக கைது செய்யப்பட்டார் என்பது பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.
இதனால் பாண்டியராஜனுக்கு எதிராக திமுக.,வினர் போராட்டம் நடத்தி வந்தனர். ஆனால் போராட வேண்டாம் என என ஸ்டாலின் திமுக.,வினரை கேட்டுக் கொண்டார்.
திமுக.,வினரின் போராட்டத்தை அடுத்து சென்னை அண்ணாநகரில் உள்ள பாண்டியராஜனின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திமுக.,வினரை போராட வேண்டாம் என ஸ்டாலின் கூறியதால், இந்த பிரச்னை ஓய்ந்தது என கருதப்பட்டது.

இந்நிலையில், வீரமாமுனிவரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாண்டியராஜன், ஸ்டாலினின் தியாக வரலாற்றில் மிசா சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டு, சிறைக்கு சென்றது முக்கியமானதாக கருதப்பட்டது. அது பற்றி ஷா கமிஷன் அறிக்கையில் ஏதும் குறிப்பிடப்படவில்லை எனவும், தனக்கு அது பற்றிய தெரியாது என தனியார் டிவி நிகழ்ச்சியில் பொன்முடி கூறினார். அதனால் தான் அது பற்றிய எனது சந்தேகத்தை கூறினேன்.
எதற்காக கைதானேன் என்பதற்கு ஸ்டாலினே ஆதாரங்களை வெளியிடலாமே? ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதானது பற்றி அதிமுக கேள்வி எழுப்பவில்லை. ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதானது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என பொன்முடி கூறியதால் தான் இந்த பிரச்னையே ஏற்பட்டது.

ஆதாரங்களை முன் வைத்து விளக்காமல், ஒரு தனி மனிதனுக்கு எதிராக இத்தனை போராட்டங்கள், கொடும்பாவி எரிப்புக்கள் தேவையற்றது. மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டாரா, இல்லையா என்பது பற்றி 2 நாட்களில் ஆதாரங்களுடன் ஸ்டாலினுக்கு பதில் அளிக்கப்படும். மிசா சட்டசத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கான காரண குறிப்புக்கள் ஏதும் இல்லை. என்னை பற்றி ஸ்டாலின் சொன்ன கருத்துக்களுக்கு கட்சி ரீதியாக 2 நாட்களில் பதிலளிக்கப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது பற்றி எந்த கமிஷனின் அறிக்கையிலோ அல்லது அது பற்றிய புத்தகங்களிலோ குறிப்பிடப்படவில்லை. மிசா அமலில் இருந்த காலத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கான எந்த குறிப்பும் இல்லை. ஆளுங்கட்சி தரப்பில் ஒரு கேள்வி எழுப்புகிறோம். காரணங்கள் உள்ளது என்றால் அது பற்றி விளக்க வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலினுக்கு உண்டு. இஸ்மாயில் கமிஷன், ஷா கமிஷன், செழியன் எழுதிய மிசா பற்றிய புத்தகத்தில் ஸ்டாலின் பற்றி ஏதும் குறிப்பிடப்பிடாதது ஏன் என முதலில் ஸ்டாலின் விளக்க வேண்டும் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE