மும்பை: 'சிவசேனா கட்சியை சேர்ந்த ஒருவர், மஹாராஷ்டிரா முதல்வராவார் என பால் தாக்கரேவுக்கு சத்தியம் செய்துள்ளேன். அதனை நிறைவேற்ற அமித் ஷாவோ, பட்னாவிஸோ தேவை இல்லை' என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
பட்னாவிஸின் பேட்டியை தொடர்ந்து, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பட்னாவிஸ் பேச்சை கேட்டதும் பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தாக்கரே குடும்பம் பொய் சொல்வதாக முதல்முறை குற்றம்சாட்டப்படுகிறது. உண்மையுடன் நிற்க வேண்டும் என்ற எனது தந்தையின் வழியில் நான் நிற்கிறேன்.
நிச்சயம் ஒருநாள் சிவசேனாவை சேர்ந்த ஒருவர் முதல்வராவார் என, எனது தந்தையிடம் சத்தியம் செய்துள்ளேன். அந்த சத்தியத்தை நான் நிறைவேற்றுவேன். அதற்கு அமித் ஷாவோ, பட்னாவிசோ தேவை இல்லை.

முதல்வர் பதவி குறித்து அமித்ஷாவிடம் தெளிவாக கூறிவிட்டோம். நல்ல நண்பர் என்பதால் பட்னாவிசை ஆதரித்தோம். சிவசேனா பொய்யர்களின் கட்சி அல்ல. பா.ஜ., எதிரி அல்ல. ஆனால், அக்கட்சி பொய் சொல்வதை நிறுத்த வேண்டும். பா.ஜ., அதிகாரத்திற்காக அலைகிறது. நாங்கள் ஹிந்து கட்சியா இல்லையா என்பதை ஆர்.எஸ்.எஸ்., தெளிவுபடுத்த வேண்டும். முதல்வர் பதவி குறித்து பொய் சொன்னதை, பா.ஜ., ஒப்புக் கொள்ள வேண்டும்.
அதிகார பகிர்வு குறித்து தெளிவுபடுத்தாத வரை பா.ஜ., உடன் பேச மாட்டோம். ஆட்சி அமைக்க உரிமை உள்ளது என்றால், அக்கட்சி உரிமை கோரட்டும். மாநிலத்தில் வறட்சி நிலவி வரும் நிலையில், இங்கு நிலையான ஆட்சி தேவைப்படுகிறது. அமித்ஷா மற்றும் அவரது கட்சியினரை நம்ப மஹாராஷ்டிரா தயாராக இல்லை. தவறான நபர்களுடன் கூட்டணி வைத்துள்ளதாக உணர்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE