சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

'தீதும் நன்றும் பிறர் தர வாரா' உண்மை தானே!

Added : நவ 08, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' உண்மை தானே!

ஆர்.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மஹாராஷ்டிர மாநிலம், சாதரா பகுதியைச் சேர்ந்த, 56 வயதான தனஞ்ச் ஜெக்தலே என்பவர், தன் சொந்த பணி காரணமாக, தாகிவாடி பகுதிக்குச் சென்று, ஊர் திரும்ப பஸ் நிறுத்தம் வந்துள்ளார். ஒரே கட்டில், 40 ஆயிரம் ரூபாய் கீழே கிடந்தது. அதை எடுத்த அவர், 'அது யாருடையது' என, வினவ, பதற்றத்துடன் அவரை அணுகினார், ஒருவர். 'பணம் என்னுடையது; மனைவியின் அறுவைச் சிகிச்சைக்காக எடுத்துச் செல்கிறேன்' என, சரியான அடையாளங்களை கூற, ஜெக்தலே பணத்தை, அவரிடம் ஒப்படைத்துள்ளார்.

பணத்தை பெற்ற அவர், ஜெக்தலேவின் நேர்மைக்கு பரிசாக, 1000 ரூபாய்- அளித்துள்ளார். ஆனால், ஜெக்தலேவோ, 'எனக்கு, 7 ரூபாய்- மட்டும் கொடுத்தால் போதும்' எனக் கூறி, அதை மட்டுமே பெற்றுக் கொண்டாராம். அதற்கு அவர் கூறிய காரணம் தான் அனைவரையும் நெகிழச் செய்தது... தன் ஊர் திரும்ப பஸ் கட்டணம், 10 ரூபாயாம். அவர் கையில் இருந்ததோ, 3 ரூபாய். அந்த நிலையிலும், அவர் ஆயிரத்திற்கு ஆசைப்படவில்லை. இவரைப் போன்றோரால் தான், நாட்டில் மழை பெய்கிறது, போலும்.

தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம், அப்துல்பூரமெட் தாசில்தாராகப் பணியாற்றியவர் விஜயா ரெட்டி. தன் நில பத்திரப் பதிவு தொடர்பாக சுரேஷ் என்பவர் தாசில்தாரை அணுக, அவர் லஞ்சம் கேட்டுள்ளார். வெறுப்படைந்த சுரேஷ், தான் கொண்டு வந்த பெட்ரோலை, தாசில்தார் மீது ஊற்றித் தீயிட்டுள்ளார். பற்றி எரிந்த தாசில்தாரை, காப்பாற்ற ஓடி வந்த அலுவலக ஊழியர்களும், பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர்; தாசில்தாரோ தீயில் கருகி பலியாகியுள்ளார்.

அரசு சம்பளத்துடன் கார், அவருக்கு கீழ் பணியாட்கள் என, அதிகப்படியான சலுகைகளுடன் வலம் வந்த தாசில்தார் விஜயா ரெட்டியின் லஞ்ச புத்தி காரணமாக, அவர், தன் இன்னுயிரை இழந்துள்ளார். ஆனால், ஊருக்கு திரும்பி போக, 7 ரூபாய் கூட இல்லாத நிலையிலும், உடனடியாக கிடைத்த, 40 ஆயிரம் ரூபாயை அபகரிக்க மனமில்லாமல் இருந்தவர். தனக்கு கொடுத்த, 1,000 ரூபாய் பரிசையும் பெற மறுத்து, 'மக்கள் நேர்மையாக வாழ வேண்டும் என்பதே, தான் பரப்ப விரும்பும் செய்தி' என்று கூறி, அதைத் தன் செய்கை வாயிலாக நிரூபித்துள்ளார், ஜெக்தலே!

தாசில்தாரை போல் அல்லாமல், ஜெக்தலேவை போன்று நேர்மையானவர் வழியை பின்பற்ற அனைவரும் முன் வர வேண்டும். அவரின் நேர்மை நம் நெஞ்சங்களை நெகிழச் செய்துள்ளது. 'தீதும் நன்றும், பிறர் தர வாரா' என்பது, உண்மை தானே!

****


பொய்யான தகவலை கூறியே பிழைப்பு நடத்துகின்றனர்!

மு.பெரியண்ணன், சின்னியம்பாளையம், ஈரோடு மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'பொய் சொன்னாலும், பொருந்த சொல்லணும்' என்ற தலைப்பில், நடிகர் சரத்குமார் அரசியலுக்கு நுழைந்தது எப்படி என்பது குறித்து, இதே பகுதியில் வாசகர் ஒருவர், கருத்து கூறியிருந்தார். நான், இதை படிக்கும் போது, எங்கள் தாத்தா கூறிய பொய் கதை, என்னை சிரிக்க வைத்தது தான் நினைவுக்கு வந்தது. அண்டப்புளுகு, ஆகாசப் புளுகு என்ற இருவர், பெரிய மலை அடிவாரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அண்ட புளுகு, 'டேய், மலை மேலே, ஒரு சிறிய எறும்பு போய்க் கொண்டிருக்கிறது, தெரிகிறதா' என்றானாம்.

அதற்கு, ஆகாசப்புளுகு, 'அந்த எறும்புக்கு பின், அதன் குட்டியும் போகிறது தெரிகிறதா' என, பதிலுக்கு இப்படி கூறினானாம். இன்று அரசியல் நிலவரம், அப்படி தான் போய்க் கொண்டிருக்கிறது. தற்கால அரசியலின் அளவுகோல், இது தான் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அரசியலை பற்றி, மக்கள் நன்கு புரிந்தவர்கள். அரசியல்வாதிகள் கதை விட வேண்டுமானால், பொருத்தமாக விட வேண்டும். நடிகர் சரத்குமார், 'கல்லுாரியில் படிக்கும் காலத்திலேயே, எம்.ஜி.ஆருடன் கவர்னர் மாளிகைக்கு போனேன்' என்றாராம். 'பூனை கண்ணை மூடிக் கொண்டால், உலகம் இருண்டது' என நினைத்துக் கொள்ளுமாம். மக்கள் எல்லாம் முட்டாள்கள் என நினைத்து, சரத்குமார் இப்படி எல்லாம் சொல்கிறாரா என, தெரியவில்லை.

ஒரு வகையில் பார்த்தால், அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட அனைவரும், பொய்யான தகவலை கூறியே, பிழைப்பு நடத்துகின்றனர் என்பது, சரத்குமார் பேச்சின் வாயிலாக அறிய முடிகிறது. பழத்தை அளித்த தாய் மரத்திற்கு, நன்றிக்கடனாக, அதன் கொட்டைகளை வாரிசுகள் உருவாக, அதன் அடியிலேயே போட்டு முளைக்க செய்வதற்கு சமம்; இதை இப்படியும் எடுத்து கொள்ளலாம்!

****


சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொள்வாரா, முதல்வர்!

ஏ.காதர் மைந்தன், ராமநாதபுரத்திலிருந்து எழுது கிறார்: தமிழகத்தில், இஸ்லாமிய சிறுபான்மை இன மக்கள் வாழும் பல பகுதிகளில், இன்னமும், சவ அடக்கத்துக்கான, 'கபர்ஸ்தான்' என்ற புதைகுழி மயானம் இல்லாத நிலை நீடித்து வருகிறது. அப்படிப்பட்ட பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை, மயான பயன்பாட்டுக்காக, பட்டா வழங்கி தர வேண்டுமென தமிழக அரசுக்கு, ஐமாஅத் நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

'சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள வக்பு நிலங்களை, 'கபர்ஸ்தான்' பயன்பாட்டுக்காக உபயோகித்துக் கொள்ளலாம்' என, அறிவுறுத்தி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 'வக்பு வாரிய சொத்துகளை பொருத்தவரை, அது கட்டடமோ அல்லது வேறு எதுவாயினும், எந்த நோக்கத்துக்காக, அவை அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளதோ அதை தவிர்த்து, மாறாக மக்கள் விரும்பும் நோக்கத்துக்கு பயன்படுத்த முடியாது' என, மத்திய வக்பு சட்டத்தில் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

அப்படி வேறு நோக்கத்துக்கு, அது உபயோகிக்கப்பட்டால், வக்பு வாரிய நோக்கத்துக்கு முரணாக அமைந்து விடும். வக்பு நிலங்களை, 'கபர்ஸ்தான்' மயானமாக உபயோகப்படுத்த, வக்பு சட்டத்தில் இடமில்லை. இதை சிந்தித்து, அரசின் கைவசம் உள்ள உபயோகமற்ற புறம்போக்கு நிலங்களை எங்கெல்லாம், 'கபர்ஸ்தான்'கள் தேவைப்படுகிறதோ, அத்தகைய இடங்களில் பட்டா போட்டு வழங்க முன்வருமானால், அதை, சிறுபான்மையினர் உபயோகித்து கொள்ள ஏதுவாக அமையும்.

அதை விடுத்து, 'வக்புகளுக்கு சொந்தமான நிலங்களை, சவ அடக்கத்துக்கு கபர்ஸ்தானாக பயன்படுத்திக் கொள்ளலாம்' என்பது, 'கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல்' என்ற சொற்றொடரை நினைவு படுத்துகிறது. சிறுபான்மையினரின் நலன் கருதி, முதல்வர் இ.பி.எஸ்., இதை கனிவோடு பரிசீலிக்க வேண்டும்!

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
09-நவ-201921:18:35 IST Report Abuse
Natarajan Ramanathan ராமநாதபுரம் காதர்தான், புறம்போக்கு நிலம் எனும் கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்க வழி சொல்கிறார். வக்பு வாரியத்திடம் தமிழகம் எங்கும் ஏக்கர் கணக்கில் ஏராளமான பட்டா நிலங்கள் இருக்கின்றன. அதை தங்களது மதத்தினர் பிணத்தை புதைக்க கொடுக்கா விட்டால் பிறகு எதற்கு அந்த நிலங்கள்??
Rate this:
Share this comment
Cancel
raja - Kanchipuram,இந்தியா
09-நவ-201918:16:13 IST Report Abuse
raja ஆர்.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி, காஞ்சிபுரம் அவர்களுக்கு மிக்க நன்றி இதை போன்ற செய்திகள் பார்ப்பதே அரிதாகி விட்ட உலகில் இது போன்று நல்லவர்களை பற்றி எழுதி உள்ளீர்கள். இதை படிக்கும் இந்த தலைமுறையினர் நல்ல மனதுடன் வாழ வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
09-நவ-201910:01:16 IST Report Abuse
Bhaskaran சிலநாட்கள் பயப்படுவார்கள் பிறகு பழையபடி லஞ்சம் வாங்க ஆரம்பித்து விடுவார்கள் அரசு ஊழியர்களும் லஞ்சமும் உடன் பிறந்தது விதிவிலாக்கு அபூர்வமாக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X