பொது செய்தி

தமிழ்நாடு

இளநரையை 100 சதவீதம் தடுக்க முடியாது

Updated : நவ 09, 2019 | Added : நவ 09, 2019
Advertisement


இளநரை என்பது என்ன?ஆசிய மக்களுக்கு, 25 வயதிலிருந்து, நரை முடி வருவது இயற்கையான விஷயம்.
இந்த வயதிற்கு முன், நரை முடிகள் வந்தால், அதை இளநரை என்று சொல்வோம். தலைமுடி நரைக்க துவங்குவது, அமெரிக்கர்களுக்கு, 20 வயதில் ஆரம்பிக்கிறது. உலகிலேயே, தாமதமாக நரைக்க ஆரம்பிப்பது, ஆப்ரிக்க மக்களுக்கு தான். 30 வயதிற்கு மேல் தான், அவர்களுக்கு நரைக்க துவங்குகிறது.


இளநரை ஏற்பட காரணம்?தோலில் உள்ள, 'மெலனோசைட்ஸ்' என்ற நிறமி தான், தலை முடி, தோலுக்கு நிறம் தருவது. இந்த நிறமியின் உற்பத்தி குறைய துவங்கினால், தலைமுடி நரைக்க ஆரம்பிக்கும். மரபியல் காரணிகள், சுற்றுச்சூழலில் உள்ள மாசு, ஊட்டச்சத்து குறைபாடு, குறிப்பாக, பி12, பி6 புரதம், இரும்பு, தாமிரம் போன்றவை குறைவதால், இளநரை வரலாம்.சிலருக்கு, தைராய்டு
ஹார்மோனுக்கும், இளநரைக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

சுவாச கோளாறுகள், ஆஸ்துமா, சிகரெட் பழக்கம், மன அழுத்தம், அதிக நேரம் சூரிய வெளிச்சத்தில் இருப்பதால், அதிலிருந்து வரும் புற ஊதா கதிர்களின் பாதிப்பு, புற்றுநோய், மலேரியா உட்பட சில நோய்களுக்கு சாப்பிடும் மருந்துகள் என, இள நரை ஏற்பட பல காரணங்கள் உள்ளன.


இளநரை வந்தால் என்ன தீர்வு?ரத்தப் பரிசோதனை செய்து, என்ன ஊட்டச்சத்து குறைபாடு இருக்கிறது என்பதை கண்டறிந்து, அதற்கான வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடலாம். குறிப்பிட்ட ஊட்டச்சத்து அதிகம் உள்ள உணவை, சாப்பிட வேண்டும். பல நேரங்களில், இன்ன காரணத்தினால் தான் சராசரி வயதிற்கு முன், இளநரை வருகிறது என்பதை, குறிப்பாக சொல்வது கடினம்.பொதுவாகவே நம் தினசரி உணவில், பால், முட்டை, கடல் உணவுகள், உலர் கொட்டைகள், பச்சை காய்கறிகள் சேர்த்து கொள்வது, இளநரையை தடுக்க உதவும்.

இளநரை வந்துவிட்டால், அதை மாற்ற முடியாது. ஒரு சிலருக்கு, குறைபாட்டை கண்டறிந்து, அதற்கேற்ற வைட்டமின் மாத்திரைகள் கொடுத்தால், சரியாவதற்கான வாய்ப்பு உள்ளது.
பொதுவாக, இளநரை வந்துவிட்டால், நிரந்தரமாக இருக்கும்.


எந்த வயதில் பொதுவாக இளநரை வர ஆரம்பிக்கும்?மரபியல் காரணிகள் இருப்பதால், இந்தியர்களுக்கு, 25 வயதிற்கு முன், எந்த வயதிலும் நரை
வரலாம். ஏழு, எட்டு வயது பள்ளி குழந்தைகளுக்கே, நரைமுடி இருப்பதை பார்த்திருக்கிறேன். இளநரை வருவதற்கான வாய்ப்பு உள்ளவர்களுக்கு, நிறைய நல்ல மருந்துகள், மாத்திரைகள், தலைமுடியில் தடவுவதற்கான லோஷன்கள் உள்ளன. ஆனால், 100 சதவீதம் தடுக்க முடியாது. மூன்று மாதங்களுக்கு பயன்படுத்தி, தீர்வு இல்லாவிட்டால், மருந்து, மாத்திரைகளின்
பயன்பாட்டை நிறுத்தி விடுவதே நல்லது.


ஷாம்பு, ஹேர் - டை போன்றவற்றை பயன்படுத்தலாமா?சல்பேட் இல்லாத ஷாம்புகள், அமோனியா, பிபிடி கலக்காத ஹேர் - டை போன்றவற்றை
பயன்படுத்தலாம்.அதைவிட, இயற்கை பொருட்களில் தயாரான ஷாம்புகள், இயற்கை
முறையில் விளைந்த மருதாணி, அவுரி இலையை காய வைத்து பொடியாக்கி, கலரிங் செய்ய பயன்படுத்தலாம்.வேதிப் பொருட்களின் பயன்பாட்டை, வழக்கமாகக் கொள்ளாமல், திருமணம், பார்ட்டி, பண்டிகை போன்ற விசேஷ நாட்களில் அவசியம் என்றால், பயன்படுத்திக்
கொள்ளலாம்.

வாழ்க்கை முறை மாற்றம் தான், முக்கியமாக கவனிக்க வேண்டியது. பெண்களுக்கு மாதவிடாயின் போது, அதிக ரத்தப்போக்கு இருந்தால், ரத்த சோகை உள்ளதா என, பார்க்க வேண்டும. சத்தான உணவுகளையே சாப்பிட வேண்டும். தினமும் உடற்பயிற்சி அவசியம். இது, ரத்த ஓட்டத்தை சீராக்கஉதவும்.

வாரத்திற்கு மூன்று முறையாவது, தலைக்கு குளிக்க வேண்டியது அவசியம். ஷாம்பு பயன்படுத்தினால், கண்டிஷனரையும் பயன்படுத்துவது, வெளிப்புற துாசி, மாசிலிருந்து தலை முடியை பாதுகாக்கும்.தலைக்கு குளித்த பின், எண்ணெய் தடவக் கூடாது. ஹேர் - டிரையர் பயன்படுத்துவது, அடிக்கடி அழகு நிலையம் செல்வதை தவிர்க்க வேண்டும். இளம் சூடான நீரில், தலைமுடியை கழுவ வேண்டும்.


டாக்டர்

தீபிகா லுானாவட்,தோல் மருத்துவர்,

போர்டிஸ் மலர் மருத்துவமனை, சென்னை

99625 99933, 91761 15900


Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X