அரசியல் செய்தி

தமிழ்நாடு

அலட்சியம் செய்வதால் சபாநாயகர் மீது நம்பிக்கை இழப்பு!

Added : நவ 09, 2019
Advertisement

அன்னுார்:அன்னுார் வந்த, சபாநாயகர் தனபாலிடம், மக்கள் ஆர்வமாக மனு கொடுத்தனர். 'என்ன குறை, எந்த துறை' என, எதையும் விசாரிக்காமல், எந்த பரிந்துரையும் செய்யாமல், மக்களை அலட்சியம் செய்யும் வகையில், அருகில் இருந்த ஏதோ ஒரு அதிகாரியிடம், மனுக்களை திணித்தார். இதனால், மனு கொடுத்தவர்கள் அதிருப்தியடைந்தனர்.அன்னுாரில் கூட்டுறவு சங்கங்களில், கட்டப்பட்ட புதிய கட்டடங்கள் திறப்பு விழா நேற்று நடந்தது.இதில், 37 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட கூட்டுறவு பண்டக சாலை கட்டடம், 20 லட்சம் ரூபாயில், கரியாக்கவுண்டனுாரில் கட்டடப்பட்ட கட்டடம் ஆகியவற்றை சபாநாயகர் தனபால் திறந்து வைத்து பேசியதாவது:ஓட்டு கேட்டு வந்த போது, நான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளேன். அத்திக்கடவு திட்டம், 1,500 கோடி ரூபாயில் நடந்து வருகிறது. பல ஆண்டுகளாக முடங்கி கிடந்த மூன்று கோடி ரூபாயிலான மின் மயான பணிகள் துவங்கியுள்ளன.அன்னுார், அவிநாசி, மோப்பிரிபாளையம் பேரூராட்சிகளுக்கு என, 240 கோடி ரூபாயில் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடக்கின்றன. இழுபறியாக இருந்த தாலுகா அலுவலக கட்டுமான பணி முடியும் நிலையில் உள்ளது.அன்னுாரில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க திட்டமிடப்பட்ட கிழக்கு புறவழிச்சாலை, சில காரணங்களால், தாமதமாகியுள்ளது. மறு சீரமைப்புக்கு பிறகு அந்த பணியும் விரைவில் துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.கூட்டுறவு பண்டக சாலை தலைவர் அம்பாள் பழனிச்சாமி, கரியாம்பாளையம் கூட்டுறவு சங்க தலைவர் சாய் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில், தலா, 25 லட்சம் ரூபாயில், தாசபாளையம் மற்றும் செல்லப்பம்பாளையத்தில், கூட்டுறவு சங்க அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு, இரண்டு கோடியே ஒன்பது லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டது. மகளிர் திட்டம் மூலம் குழுக்களுக்கு, 60 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டது.சபாநாயகர் கடந்த ஆக., 17ம் தேதி அன்னுார் வந்திருந்தார். மூன்று மாதங்களுக்கு பிறகு நேற்று வந்ததால் பலர் ஆர்வமாக மனு கொடுத்தனர்.'அன்னுார் அரசு போக்குவரத்து கழக கிளையில் தரைத்தளம் அமைக்க வேண்டும். ஆயிக்கவுண்டன் புதுாருக்கு பாதை அமைக்க வேண்டும். கட்டபொம்மன் நகரில், தார் சாலை, கழிவுநீர் வடிகால் அமைக்க வேண்டும். பழனி கிருஷ்ணா அவென்யூவில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும்' என்பது உள்பட பல கோரிக்கைகளுக்காக மனுக்கள் கொடுத்தனர்.மனு கொடுத்தவர்கள் கூறுவதை சபாநாயகர் கேட்கவில்லை. கையில் வாங்கிய மனுக்களை அருகில் நிற்பவர் யார் என்று கூட பார்க்காமல் அவர் கையில் திணித்தார்.சபாநாயகர் அருகில் நின்றிருந்த கூட்டுறவு துறை அதிகாரி தன்னிடம் கொடுக்கப்பட்ட மனுக்களை என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். அப்போது வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் அந்த மனுக்களை அவரிடமிருந்து வாங்கிச் சென்று விட்டார். மனுதாரர்கள் கூறியதாவது:தாலுகா அலுவலகத்திலும், பேரூராட்சி அலுவலகத்திலும் மனு கொடுத்தும் நடக்காததால், இங்கு மனு கொடுக்க வந்தோம். ஆனால் சபாநாயகர் என்ன குறை, என்று கேட்டு எந்த துறையை சேர்ந்தது என்று விசாரித்து, அந்த அதிகாரியிடம் தராமல், அந்த மனுவில் எந்த பரிந்துரையும் செய்யாமல், அப்படியே மீண்டும் அன்னுார் அதிகாரிகளிடம் கொடுத்து விட்டார்.இதனால் மனுக்கள் மீதான நடவடிக்கை கேள்விக்குறியாக உள்ளது. 50 ஆண்டுகளுக்கு பிறகு நம் தொகுதி வி.ஐ.பி., தொகுதியானது என்று மகிழ்ச்சியாக இருந்தோம். ஆனால் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு இல்லை. சபாநாயகர் மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கையை, அவரே இழக்கச் செய்துவிட்டார்.இவ்வாறு அவர்கள் வருத்தமுடன் கூறினர்.மேடையில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் பெரும்பாலான இருக்கைகளில் உட்கார்ந்து கொண்டனர். இதனால், கூட்டுறவு சங்க செயலாளர்கள் இருக்கையில்லாமல் கடைசி வரை நின்று கொண்டே இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X