டாக்டர்கள் மீது, நோயாளிகளின் உறவினர்கள் நடத்தும் தாக்குதல்கள், மருத்துவ சேவைக்கு நேர்ந்துள்ள அவமானம். சமீப காலமாக, இந்த அவமானம் அதிகரித்துள்ளது, கவலை அளிக்கிறது. மருத்துவர்களின் பாதுகாப்பு, கேள்விக்குறியாக இருக்கிறது என்பதே நிதர்சனம்.மிக மோசமான நிலையில் இருக்கும் நோயாளிகளை, அவர்களின் உறவினர்கள், மருத்துவமனைக்கு எடுத்து வருகின்றனர். சிகிச்சையில் அவர்கள் முழுமையாக நலம் பெறுவர் என, அப்போது அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பும், கணிப்பும் நிறைவேறாத போது, டாக்டர்கள் மீது கோபம் கொள்கின்றனர்.அது போலவே, டாக்டர்களும், நோயாளியின் உடல் நிலை குறித்த, உண்மை நிலவரத்தை, நோயாளியின் உறவினர்களுக்கு தெளிவாக எடுத்துக் கூற வேண்டும். சிகிச்சையின் முடிவில், பலன் எவ்வாறு இருக்கலாம் என்ற கணிப்பையும் தெளிவாக விளக்கிக் கூற வேண்டும். அதற்கு அவர்கள், சம்மதம் தெரிவித்தால் சிகிச்சையை தொடரலாம்.இத்தகைய வெளிப்படையான தகவல் பரிமாற்றம், சரியான படி நடைபெறாத நிலையில் தான், டாக்டர்கள் - நோயாளிகளின் உறவினர்கள் மோதல், தாக்குதல், குழப்பங்கள் ஏற்படுகின்றன.மருத்துவம் என்பது, ஆழ்ந்த விருப்பத்துடனும், சேவை மனப்பான்மையுடனும், மன அழுத்தம் இல்லாத சூழலிலும் செய்ய வேண்டிய இனிமையான சேவை. மாறாக, பாதுகாப்பின்மை, பய உணர்வோடு செய்யக் கூடியது அல்ல. அப்படி செய்தால், அது சிறக்கவும் முடியாது.டாக்டர்கள் மீதும், மருத்துவமனைகள் மீதும் நடத்தப்படும், நுகர்வோர் நீதிமன்ற வழக்கு என்பன போன்ற தாக்குதல்களும் நடக்கின்றன. இதனால், இளம் தலைமுறை டாக்டர்கள் பலர், சிகிச்சை அளிக்கவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. வெளியே இருந்து வரும் அச்சுறுத்தல்களையும், தாக்குதல்களையும் தாங்கும் திறனற்றவர்களாக, இவர்கள் உள்ளனர்.உயிருக்கும், உடைமைக்கும் வரும் அச்சுறுத்தலால் நேரும், சாதகமற்ற சூழ்நிலைகள், நோயாளியின் நலனுக்கு உகந்த சிகிச்சை வழங்கும் முடிவுகளை பெரிதும் பாதிக்கும்.பல சமயங்களில், ஒரு நோயாளிக்கு, சிறிய மருத்துவமனையில் கூட, சிறப்பான சிகிச்சை அளிக்க இயலும் என்றாலும், நோயாளிகள், பின்னாளில் வழக்கு தொடுத்தால் என்ன செய்வது என்று பயந்து, வேறு பெரிய மருத்துவமனைக்கு பரிந்துரைத்து அனுப்புவதும் நடக்கிறது.
இதனால், எல்லா நோயாளிகளையும் ஒரு சந்தேகத்தோடும், பயத்தோடும் பார்க்கிற நிலை நிலவுகிறது.இது, என்றுமே யாருக்குமே நல்லதல்ல. மக்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது. இத்தகைய சூழல், மருத்துவ துறையில் தொடர்ந்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என, பொறுப்புள்ள மக்கள் சிந்திக்க வேண்டிய தருணமும் இது தான்.இந்நிலை தொடர்ந்தால், ஆர்வமும், திறமையும் கொண்ட மாணவர்கள், மருத்துவ துறையை தேர்ந்தெடுக்கவே தயங்குவர். திறமையும், அறிவும் மிக்க டாக்டர்கள், தங்கள் பாதுகாப்பையும், நல்ல பணிச் சூழலையும் கருதி, வெளிநாடுகளுக்கு செல்வர். இது, இன்றும் நடந்து கொண்டுதானிருக்கிறது. இதனால், நம் நாட்டுக்கும், சமூகத்திற்கும், நல்ல டாக்டர்கள் கிடைக்காமல் போகும் ஆபத்தை உருவாக்கும்.தொலைநோக்கு பார்வையில் பார்த்தால், இவையெல்லாம் நம் நாட்டிற்கும், மக்களுக்கும் பெரும் இழப்பாகத் தான் அமையும்.நிலைமை இவ்வாறு இருக்க, மருத்துவ பட்டம் பெற்றவர்களுக்கு, சரியான வேலைவாய்ப்பு இல்லை என்ற நிலை தோன்றி, நீண்ட நாட்களாகின்றன.
அதே நேரத்தில், 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மேற்படிப்புக்கான, 3,833 இடங்களில், 691 இடங்கள், முதல் சுற்றிலேயே, எடுப்பாரின்றி காலியாக உள்ளன.இதில் குறிப்பாக, இதய அறுவை சிகிச்சை, குழந்தைகள் அறுவை சிகிச்சை, இதய சிகிச்சை போன்ற படிப்புகளுக்கான இடங்கள், பெரும்பாலும் காலியாக உள்ளன.காரணம், இவை எல்லாம் மிக கடினமான, சிரமமான படிப்புகள். இவற்றை எடுத்துப் படிக்க ஆளில்லை.ஆகவே, எம்.பி.பி.எஸ்., படித்து முடித்த பின், மூன்று ஆண்டுகள், எம்.எஸ்., அல்லது எம்.டி., பட்ட மேற்படிப்பும் முடித்து, அதன் பின், மேலும் மூன்று ஆண்டுகள் சிரமப்பட்டு, எம்.சி.எச்., போன்ற, சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பதாலும் பெரிய அளவில், இப்போது வேலை கிடையாது.மேலும், கடினமான பணியில், பாதுகாப்பு குறைபாடு உள்ளது என்ற நிலை ஏற்படுவதால், மருத்துவம் படிக்கவே பலர் தயங்குகின்றனர்.இவையெல்லாம் எதை காட்டுகிறது... பண்டைய நாட்களில் இருந்தது போல, மருத்துவம் என்பது, மக்களால் பெரிதும் போற்றப்பட்ட, பெருமையான, உயர்வாக, மதிக்கப்பட்ட தொழிலாக இன்று கருதப்படவில்லை, என்பதைத் தான் காட்டுகிறது எனலாம்.
இப்போதிலிருந்து, 25 ஆண்டுகளுக்கு முன், மருத்துவ கல்வியை தனியார் மயமாக்கியதன் மூலம், ஒரு பெரிய சமூக அநீதியை அரசு இழைத்தது. இதனால், போதிய மதிப்பெண்கள் பெறாத நிலையிலும், செல்வந்தர்களின் பிள்ளைகள், பல லட்சங்கள் முதல், கோடி ரூபாய் செலவு செய்து, தனியார் மருத்துவ கல்லுாரிகளில் சேர்ந்து, மருத்துவம் பயிலும் வாய்ப்பு ஏற்பட்டு விட்டது.'தினமலர்' வாரமலரில், 20 ஆண்டுகளுக்கு முன், அந்துமணி கேள்வி- - பதில் பகுதியில் இடம்பெற்ற, ஒரு கேள்வி, பதிலை இங்கே பதிவிட விரும்புகிறேன்.கேள்வி: 30 லட்சம் ரூபாய் கொடுத்து, தனியார் மருத்துவ கல்லுாரியில் சேர்ந்து, மேலும் பல லட்சம் ரூபாய் செலவு செய்து, மருத்துவ பட்டம் பெறுவது பற்றி?பதில்: 30 லட்சம் ரூபாய் கொடுத்து மருத்துவ பட்டம் பெற்று வந்தால், அப்பல்லோ ஆஸ்பத்திரியில், 5,000 ரூபாய்க்கு வேலை கிடைக்கும்.
இன்றும் நிலைமை அது தான்!
மருத்துவத் துறையின் நிலை இவ்வாறு இருக்க, மாணவர்களின் பெற்றோருக்கு மருத்துவ கல்வியின் மீது, கண்மூடித்தனமான ஈர்ப்பு இருக்கிறது. அவர்களது முதல் தேர்வு, மருத்துவ கல்வி தான். ஆனால், ஒரு மருத்துவ மாணவன், நல்ல மருத்துவராக உருமாற, எவ்வளவு சிரமங்களையும், இடர்பாடுகளையும் தாங்கி வளர வேண்டும் என்பதை, வெறும் வார்த்தைகளால் விளக்க முடியாது.மருத்துவ கல்லுாரியில், ஐந்து ஆண்டு படித்து வெளியே வந்தவுடன், 'பிராக்டிஸ்' செய்து, பணத்தில் கொழிக்கலாம் என்பதெல்லாம், அதீதமான கற்பனை. அவர்களுடைய மனச்சுமை, கவலைகள், நேரம் காலம் பாராது அதிக நேரம் உழைக்க வேண்டிய பணிச்சுமை ஆகிய காரணங்களால், பெரும்பான்மையான டாக்டர்கள், தங்கள் உடல் நலனைக் கூட பேண முடியாது என்பது தான் உண்மை.மேலும், பட்ட மேற்படிப்பு என்பது மிகவும் கடினமானது; மூன்றாண்டுகள் படிக்க வேண்டும். அதற்கும் மேல், சூப்பர் ஸ்பெஷாலிட்டி என்றால், மேலும் மூன்றாண்டுகள், மிக கடினமான படிப்பு. ஒரு நல்ல ஸ்பெஷலிஸ்டாக உருவாக, குறைந்தது, 11 ஆண்டுகள் கடுமையாக படிக்க வேண்டும்.மேலும், அடிக்கடி மாறும், நவீன அறிவியல் தகவல்களுக்காக, வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்த விபரங்கள் எல்லாம், மருத்துவ கல்வியை விரும்பும், ஒரு சராசரி மாணவனுக்கும், அவனின் பெற்றோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
டாக்டர் கனவு காணும், 17 வயது மாணவன், தான் வாழ் நாள் முழுவதும் செய்ய வேண்டிய பணி குறித்த படிப்பை, தானாக தேர்வு செய்யும் மனப் பக்குவமும், போதிய அறிவும் பெற்றிருக்க வாய்ப்பில்லை.எனவே, பெற்றோரும், ஆசிரியர்களும், அவனுடைய விருப்பம், தகுதி ஆகியவற்றை தெரிந்து, அவனுக்கு பொருத்தமான சில படிப்புகளை எடுத்துக் கூறி, விளக்கமளித்து, சரியான படிப்பை தேர்ந்தெடுக்க உதவ வேண்டும்.இப்படி கஷ்டப்பட்டு படித்து, டாக்டர்கள் ஆவோர் மீது பழி சுமத்துவதற்கு முன், மக்களும் சில விஷயங்களை, மனதில் கொள்ள வேண்டும்.
ஒரு கருவியில் ஏற்பட்ட பழுதை நீக்குவதற்குக் கூட, இரண்டு வல்லுனர்கள் ஒரே மாதிரி அணுகுமுறையை கையாளுவதில்லை.இந்நிலையில், இறைவன் படைத்த, எண்ணிலடங்காத வித்தியாசங்களை கொண்ட மனித உடலையும், மனதையும் சிகிச்சை செய்வது, அவ்வளவு சுலபமானதல்ல என்பதை நாம் உணர வேண்டும்.ஒரே மருந்து, ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதை யாரால் மறுக்க முடியும்?டாக்டர்களும் மனிதர்கள் தானே... அவர்கள் அறிவையும், திறமையையும் மீறி, மனிதனால் சீர்செய்ய முடியாத, தீவிர சங்கடங்கள் நேரும். அப்போது, அவற்றை சரி செய்ய முடியவில்லையே என்ற மன வலியும், ஆதங்கமும், சோகமும் தாக்கி, மன அழுத்தத்தையும் துன்பத்தையும் டாக்டர்களுக்கு தரும்.கண் முன்னே ஒரு தவிர்க்க முடியாத மரணம் நிகழ்ந்த போதும், அத்தோடு சோர்ந்து போய் விடாமல், பிற நோயாளிகளின் நலனை அக்கறையோடு கவனித்து, சிகிச்சை அளிப்பது என்பதும் அவ்வளவு எளிதல்ல.இத்தகைய துன்பமான, மன அழுத்தம் நிறைந்த சூழலில் தான், பெரும்பான்மையான டாக்டர்கள் பணியாற்றுகின்றனர் என்பதையும் மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
இது மாதிரியான, ஒரு பணியை ஏற்று, வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து செய்ய, மிக அதீதமான மன வலிமை வேண்டும்.எல்லாரும் கைவிட்டு, நம்பிக்கையே இல்லாத சூழ்நிலைகளிலும் கூட, நுாற்றுக்கணக்கான நோயாளிகளை, எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று, இரவு பகல், நேரம் காலம் பாராது, சிகிச்சை அளிப்பது தான் டாக்டர்கள் கடமை. அத்தகைய நோயாளிகள் பிழைத்துக் கொள்ளும் போது, அவர்களின் உறவினர்களில் பலர், டாக்டர்களுக்கு நன்றி கூட கூறத் தெரியாமல் தான் உள்ளனர்.
அதனால், நோயின் தீவிரத்தால், பலத்த போராட்டத்திற்கு பிறகும் நோயாளி இறக்க நேர்ந்தால், டாக்டரை குறை கூறி, தாக்குவதும், தாக்க முயல்வது என்ன நியாயம்... அத்தகைய கொடுஞ் செயல்கள் செய்வோர், இனிமேலாவது மனம் மாறட்டும்.டாக்டர்களின் பணி, எப்போதும் அமைதியாகவும், அர்ப்பணிப்புடனும் தொடர, ஏற்ற சூழல்கள் உருவாகட்டும் என்ற பிரார்த்தனையை முன் வைப்போம். அதற்கு, டாக்டர்களும், மக்களும் இணைந்து பாடுபட வேண்டும்!
தொடர்புக்கு: 98421 68136இ - மெயில்: ahanathapillai@gmail.comடாக்டர்எஸ்.ஏகநாத பிள்ளைமுன்னாள் பேராசிரியர்