இந்த செய்தியை கேட்க
சென்னை: சென்னையில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில், கருணாநிதி போல் எனக்கு பேச, எழுத தெரியாது. எதையும் முயற்சி செய்யும் துணிவு உண்டு என அக்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறினார்.
சென்னை, ராயப்பேட்டை ஓய்.எம்.சி.ஏ., திடலில் உள்ள அரங்கில், இன்று(நவ.,10) திமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. கட்சியின் ஆக்கப்பணிகள், உள்ளாட்சி தேர்தல், கட்சியின் சட்ட திருத்தம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
* 2020ம் ஆண்டுக்குள் திமுக உட்கட்சி தேர்தலை நடத்தி முடிப்பது எனவும்
* வாக்குச்சாவடிக்கு 10 பேர் கொண்ட உட்குழு அமைக்கப்படும்
* 10 ஊராட்சிகளுக்கு ஒரு ஒன்றிய கழகம் அமைப்பதற்கும்
* திருநங்கைகளை திமுக உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு விதிகளில் திருத்தம் செய்வது
* இணையதளம் மூலம் உறுப்பினர்களை சேர்க்க விதிகளில் திருத்தம் செய்வது
* வெளிநாடுவாழ் இந்தியர்களை திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்க விதிகளில் மாற்றம் கொண்டு வருவது
* உள்ளாட்சி தேர்தல் நடக்கும் வரை தற்போதைய நிர்வாகிகள் அதே பொறுப்பில் நீடிப்பது
* இளைஞரணி உறுப்பினர்களுக்கான வயது வரம்பு 18 வயதில் இருந்து 35 வயது வரை என நிர்ணயித்தும்
* மருத்துவர் அணி என்பதை மருத்துவ அணி திருத்தம் செய்தும்
* பருவநிலை மாற்றங்கள் தொடர்பாக மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
* தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்
* நாடு முழுவதும் நதி நீர் இணைப்பு திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும்
* உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்திட வேண்டும்
* அழிவு சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து இரும்பு கரம் கொண்டு அடக்கிட வேண்டும்
* மத்திய அரசு நிறுவனங்களில் 90 சதவீத தமிழக இளைஞர்களை நியமித்திட வேண்டும்
* அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூடுதல் அதிகாரம்
திமுகவில் நிர்வாகிகளை நீக்கவும், சேர்க்கவும், பொது செயலர் அன்பழகனிடம் இருந்த அதிகாரம், அக்கட்சி தலைவர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. இதற்கான முடிவு அக்கட்சி பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

விகிதாச்சாரம்
திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: கூட்டாட்சி அமைப்பு முறையை தான் திமுக வலியுறுத்தி வருகிறது. மாநில அரசின் சில அதிகாரங்களை மத்திய அரசு தன் வசம் வைத்துள்ளது. தனியார் வேலைவாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடு தர வேண்டும். தேர்தலில் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவ முறை கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அவர், என்னுடைய சக்தியையும் தாண்டி நான் உழைத்து வருகிறேன். கருணாநிதி போல் எனக்கு பேச எழுத தெரியாது. எதையும் முயற்சி செய்யும் துணிவு உண்டு. அமைச்சர்கள் அதிகாரத்தை பயன்படுத்தியதால், இடைத்தேர்தலில் வெற்றி கிடைத்தது. வெற்றி சாதாரணமாக கிடைக்காது. கிடைக்கவும் விட மாட்டார்கள். திமுக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என, மாநில அரசு மட்டுமின்றி மத்திய அரசும் செயல்பட்டு வருகிறது. ஒற்றுமையின்றி செயல்பட்டால் வெற்றி கிடைக்காது. மாவட்ட செயலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். முரசொலியை மூடுவோம் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகிறார். அதை பூட்டு போட விட்டு விடுவோமா? எனக்கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE