நாக்பூர்: வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது 'டுவென்டி-20' போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ் அரை சதம், சகார் 'ஹாட்ரிக்' கைகொடுக்க தொடரையும் வென்றது.

இந்தியா வந்துள்ள வங்கதேச அணி மூன்று 'டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகள் முடிவில், தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது போட்டி மஹாராஷ்டிராவின் நாக்பூரில் நடக்கிறது. 'டாஸ்' வென்ற வங்கதேச அணி கேப்டன் மகமதுல்லா பவுலிங் தேர்வு செய்தார்.
இந்திய அணியில் குர்னால் பாண்ட்யா நீக்கப்பட்டு மணிஷ் பாண்டே இடம்பிடித்தார். வங்கதேச அணியில் மொசாதெக் நீக்கப்பட்டு முகமது மிதுன் வாய்ப்பு பெற்றார்.

ராகுல் விளாசல்
இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் (2) ஏமாற்றினார். ஷிகர் தவான் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். லோகேஷ் ராகுல் எதிரணி பந்துவீச்சை சிதறடித்தார். அரை சதம் விளாசிய இவர் 52 ரன்களில் அவுட்டானார். ஸ்ரேயாஸ் ஐயர் 'மின்னல்' வேகத்தில் ரன் சேர்த்தார். ஆபிப் பந்துவீச்சில் தொடர்ந்து மூன்று சிக்சர் பறக்கவிட்ட இவர் அரை சதம் கடந்தார். சவுமியா சர்கார் பந்தில் ஸ்ரேயாஸ் (62) அவுட்டானார். ரிஷாப் (6) ஒற்றை இலக்கில் திரும்பினார். முடிவில், இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது. மணிஷ் பாண்டே (22), ஷிவம் துபே (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

சகார் அசத்தல்
வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் (9), சவுமியா சர்கார் (0) சொதப்பினர். தீபக் சகார் 'வேகத்தில்' முகமது மிதுன் (27) ஆட்டமிழந்தார். பவுலர்களுக்கு தொல்லை தந்த நயீம் அரை சதம் கடந்தார். ஷிவம் துபே பந்துவீச்சில் முஷ்பிகுர் (0), நயீம் (81) சிக்கினர். சகாரின் பந்துவீச்சில் முஸ்தபிஜுர் (1), அமினுல் (9) ஆட்டமிழந்தனர். வங்கதேச அணி 19.2 ஓவரில் 144 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வீழ்ந்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக சகார் 6 விக்கெட் வீழ்த்தினார். இந்திய அணி தொடரை 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
சகார் 'ஹாட்ரிக்'
தீபக் சகார் வீசிய 18வது ஓவரின் கடைசி பந்தில் சபியுல் (4) அவுட்டானார். கடைசி ஓவரை வீசிய சகாரின், முதலிரண்டு பந்துகளில் முறையே முஸ்தபிஜுர் (1), அமினுல் (9) ஆட்டமிழந்தனர். இதன் மூலம், சர்வதேச 'டுவென்டி-20' போட்டியில் 'ஹாட்ரிக்' சாதனை நிகழ்த்திய முதல் இந்திய பவுலர் என்ற பெருமை பெற்றார்.