பொது செய்தி

தமிழ்நாடு

கலையும், விளையாட்டும் கலப்பது மகிழ்ச்சி: சென்னை வீராங்கனை சுஜனிதா

Updated : நவ 11, 2019 | Added : நவ 11, 2019
Advertisement

சர்வதேச மற்றும் தேசிய அளவில், 'ஆர்ட்டிஸ்டிக்' ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டில், தொடர்ந்து பல்வேறு சாதனைகளை செய்து வருபவர், சென்னை வீராங்கனை, சுஜனிதா, 19.

''இந்த விளையாட்டை பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கும். நான் போட்டியில் பங்கேற்று விளையாடும் போது, அத்தனை அழகாகவும், மகிழ்வாகவும் உணர்கிறேன்,'' என்கிறவரிடம் வாழ்த்துகள் கூறி பேசினோம்.

உங்களை குறித்து?
என்னோட பூர்வீகம் சென்னை. தற்போது, சென்னை, மேற்கு மாம்பலத்தில் வசிக்கிறோம். அப்பா ரகுநாதன் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். அம்மா நந்தினி இசை ஆசிரியர்.என்னுடைய அக்கா, பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில், மைக்ரோ பயாலஜி துறையில் பணிபுரிகிறார். நான் நுங்கம்பாக்கம், எம்.ஓ.பி., வைஷ்ணவா கல்லுாரியில், தற்போது பி.காம், இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன்.ரோலர் ஸ்கேட்டிங்கில் ஆர்வம் வந்தது எப்படி?என்னுடைய, 6வது வயதில், பெற்றோர், 'ரோலர் ஸ்கேட்' வாங்கி கொடுத்தனர். அதை நான், காலில் போட்டபடி, வீட்டில் சுற்றி திரிந்து கொண்டிருப்பேன்.என்னுடைய 9 வயதில், முறையான பயிற்சி ஆரம்பமானது. நான் துவக்கத்தில், அதை உடற்பயிற்சி போல தான் செய்தேன்.ஆனால், நாட்கள் செல்ல செல்ல, சக்கரங்கள் சுழல்வதிலும், அதன் மீது பாதங்கள் பதித்து, நகர்ந்தபடி நடனம் ஆடும் அழகிலும், எனக்கு பெரிய மயக்கம் பிறந்து விட்டது.நான்காம் வகுப்பு படிக்கும் போது, மாவட்ட அளவிலான போட்டியில், முதன் முறையாக தங்கம் வென்றேன். அதே ஆண்டில் தேசிய அளவில், எட்டாவது ரேங்க் பெற்றேன். அதன்பின், அடுத்தடுத்து தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்கள் வெல்ல ஆரம்பித்தேன்.

இந்த விளையாட்டில், நிறைய பிரிவுகள் இருக்கும்போது, 'ஆர்ட்டிஸ்டிக்'கை தேர்ந்தெடுத்தது ஏன்?
ரோலர் ஸ்கேட்டிங்கில், 'ஸ்பீடு' உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. ஆனால், 'ஆர்ட்டிஸ்டிக்' ரோலர் ஸ்கேட்டிங் தான், எனக்கு பிடித்திருந்தது. இது ஒரு வித்தியாசமான, நுணுக்கமான விளையாட்டு. சக்கரங்களை சுழற்றுவது, காற்றில் குதிப்பது, காலை துாக்குவது, நடனமாடுவது உள்ளிட்ட, பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியது.பொதுவாக விளையாட்டு என்பது ஒரு பிரிவாகவும், கலை என்பது ஒரு பிரிவாகவும் தானே இங்கு இருக்கிறது. ஆனால், 'ஆர்ட்டிஸ்டிக்'கை பொறுத்தவரை, கலையும், விளையாட்டும் கலந்த ஒரு கலவை.இது விளையாட்டாகவே இருந்தாலும், இதில் நடனமும் இருக்கிறது. விளையாட்டில் நடனமும், நடனத்தில் விளையாட்டும் இணையும் புள்ளியும் உள்ள அழகியல், என்னை வசீகரித்து, வழி நடத்தி கொண்டிருக்கிறது.

இந்த விளையாட்டில் உள்ள சவால்கள்?
இந்த விளையாட்டை மிக மிக கவனமாக விளையாட வேண்டும். கொஞ்சம் தப்பினாலும், நிறைய அடிபடுவதற்கு வாய்ப்புள்ளது. வாழ்நாள் முழுக்க, எழுந்திருக்கவே முடியாத அளவில் கூட காயங்கள் ஏற்படலாம்.அதனால், அதிகபட்ச விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம். பிளஸ் 2 படிக்கும் போது, சர்வதேச போட்டிக்கான பயிற்சியின் போது, காலில் அடிபட்டு விட்டது. அதில் இருந்து மீள சில மாதங்கள் ஆகின.இந்த சவால்களை எல்லாம் எப்படி சமாளிக்கிறீர்கள்?எந்த விளையாட்டாக இருந்தாலும், அடிபடுவதும், காயம்படுவதும் தவிர்க்க இயலாதது. அதுமட்டுமில்லாமல், இங்கு கஷ்டப்படாமல், அடிபடாமல் நிச்சயம் எதையும் சாதிக்க முடியாது.எனக்கு இந்த விளையாட்டு மிகவும் பிடித்திருக்கிறது. நான் அதிகம் யாரிடமும் பேச மாட்டேன். எனக்கு நடனம் ஆடத் தெரியாது. ஆனால், போட்டிகளில் பங்கேற்கும் போது, நான் முற்றிலும், வேறு ஒரு ஆளாக மாறி விடுகிறேன். அது எனக்கு மிகப்பெரிய பூரிப்பை அளிக்கிறது. அப்போது நான், அதிக தன்னம்பிக்கையை உணர்கிறேன்.

மற்ற விளையாட்டுகளுக்கும், இதற்கும் உள்ள வித்தியாசம்?
சில விளையாட்டுகளில் தனியாக விளையாடலாம் அல்லது குழுவுடன் இணைந்து விளையாடலாம். குழு விளையாட்டில், தனிநபராக மட்டுமே பங்கேற்க முடியாது இல்லையா?ஆனால், ஆர்ட்டிஸ்டிக் ரோலர் ஸ்கேட்டிங்கை பொறுத்தவரை, தனியாக விளையாடலாமா அல்லது ஜோடியாக இணைந்து விளையாடலாமா அல்லது குழுவாக விளையாடலாமா என்பதை எல்லாம், நாமே தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.அதேபோல, மற்ற விளையாட்டுகளில், ரன்கள் அடிப்பது, கோல் போடுவது என்று இருக்கும். ஆனால், இந்த விளையாட்டை பொறுத்தவரை, நம்முடைய செயல்பாடு களுக்கு தான் மதிப்பெண். இது மற்ற விளையாட்டுகளுடன் ஒப்பிடுகையில், முற்றிலும் வித்தியாசமான விளையாட்டு.இந்த விளையாட்டுக்கென, தனியாக விதி புத்தகம் உள்ளது. அதன்படி தான், விளையாட வேண்டும். ஆனால், இசை, ஸ்டைல் உள்ளிட்ட விஷயங்களை, நம்முடைய ரசனைக்கேற்ப வடிவமைத்து கொள்ளலாம். இதுபோல நிறைய வித்தியாசங்கள் உள்ளன.இதுவரை பங்கேற்ற போட்டிகளும், வென்ற பதக்கங்களும்?சர்வதேச அளவில், 2018ம் ஆண்டு, செப்டம்பரில், தென் கொரியாவில் நடந்த, ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில், வெண்கலப்பதக்கம் வென்றேன். அதே ஆண்டு டிசம்பரில், விசாகப்பட்டினத்தில் நடந்த, தேசிய போட்டியில், ஒரு தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினேன்.பள்ளிக்காலம் துவங்கி, தற்போது வரை, தேசிய அளவில், தங்கம் உட்பட, எட்டு பதக்கங்களை வென்றுள்ளேன். மாநில அளவில், 30 பதக்கங்களும், மாவட்ட அளவில், 35க்கும் மேற்பட்ட பதக்கங்களும் வென்றுள்ளேன்.விளையாட்டு பயணத்தில் உள்ள தடைகளாக எதை பார்க்கிறீர்கள்?இந்த விளையாட்டில் பங்கேற்போருக்கு, அரசின் ஒத்துழைப்பு மிக மிக குறைவாக உள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் பங்கேற்க, நிறைய பணம் செலவழிக்க வேண்டி இருக்கிறது.சர்வதேச அளவில் நடக்கும் போட்டிகளில், இந்தியா சார்பில் பங்கேற்கும், வீரர் -- வீராங்கனையருக்கு கூட, பயண செலவு, உணவு, தங்கும் விடுதிக்கான செலவுகள் வழங்கப்படுவதில்லை.இது போன்ற நிறைய தடைகள் இருக்கவே செய்கின்றன. என்னை பொறுத்தவரை, அரசு வழங்க வேண்டிய முதற்கட்ட மிகப்பெரிய ஒத்துழைப்பு, நிதி சார்ந்த ஒத்துழைப்பு தான்.

அடுத்தகட்ட திட்டம்?
இந்தாண்டு இறுதியில், தேசிய அளவிலான போட்டி, விசாகப்பட்டினத்தில் நடக்க உள்ளது. அதில் திறமையை வெளிப்படுத்த வேண்டும். வரும் ஆண்டில், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று, பதக்கம் வென்று, இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X