சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவர்களின் பேச்சில் அதிர்ந்தது அரங்கம்

Added : நவ 11, 2019
Share
Advertisement

திருவொற்றியூர்: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, 'சிந்தனை சாரல்' பேச்சரங்கத்தில் பங்கேற்ற மாணவர்கள், அரங்கை அதிர செய்தனர்.திருவொற்றியூர் கிளை நுாலகத்தின், வாசகர் வட்டத்தால், மாதந்தோறும், இரண்டாவது சனிக்கிழமை, 'சிந்தனைச் சாரல்' எனும் கருத்தரங்கு கூட்டம் நடத்தப்படும். இதில், புகழ்பெற்ற பேச்சாளர்கள் பங்கேற்று பேசுவர்.இந்நிலையில், 49வது சிந்தனை சாரல் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் இரவு, கிளை நுாலக அரங்கில் நடைபெற்றது.குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, இம்முறை, மாணவ பேச்சாளர்கள் மட்டுமே பங்கேற்கும், பேச்சரங்கத்திற்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த, 18 மாணவர்கள் பங்கேற்றனர்.நடன பேச்சுதிருவொற்றியூர், சத்தியமூர்த்தி நகர், நகராட்சி பள்ளியைச் சேர்ந்த, 7ம் வகுப்பு மாணவியர் குழு, 'நுாலக பயன்கள்' எனும் நாடகத்தை அரங்கேற்றி, விழாவை துவக்கினர்.ராமநாதபுரம், நகராட்சிப் பள்ளியின், 8ம் வகுப்பு மாணவி சத்தியஸ்ரீ, 'பதிணென் கீழ்கணக்கு' நுால், என்ற தலைப்பில், மேடை பேச்சுக்கே உரிய பாவனைகளுடன், நடனத் தோரணையில் வெளுத்து வாங்கினார்.மாணவி, ரோகிணி, 'கலைஞரின் கவிதைகள்' எனும் தலைப்பில் பேசத் துவங்கி, சில நிமிடத்திலேயே, கண்ணகி சிலம்பை கையில் ஏந்தி, மதுரை வீதிகளில், ஆவேசமாக நடந்து செல்வது போல, அரங்கை ஆக்கிரமித்து, தன் பேச்சாற்றலால், அரங்கை நிசப்தத்திற்குள்ளாக்கினார்.கழுத்து நரம்புகள் புடைத்தெழுந்து, பார்ப்பவர்கள் மிரளும் வகையில், கருத்துகளை கொட்டித்தீர்த்த, தெய்வசிகாமணி நடுநிலைப் பள்ளி மாணவி குஷ்பு, எம்.டி.எம்., பள்ளி மாணவர் யுவனேஷின் பேச்சு, பலரையும் புருவம் உயர்த்த செய்தது.கண்டாங்கி சேலை கட்டி, மாமியார் - மருமகள் சண்டையில், புத்தகம் படிப்பது, திருவொற்றியூர் கிளை நுாலக பயன் மற்றும் வசதிகள் குறித்து, மாணவி, ரித்திகா அழகம்மை நடத்திய நாடக உரையாடல், அனைவரையும் கவனிக்க செய்தது.உடல்மொழி பேச்சுபேச்சில் பலவகை என்பர். அந்த வரிசையில், வெள்ளையன் செட்டியார் பள்ளி மாணவி ஜாஸ்மின், 'அறிவியலும் அப்துல்கலாமும்' எனும் தலைப்பில், பாடல் வகை பேச்சு பாணியில், தன்னம்பிக்கை விதையை சற்றே ஆழமாக ஊன்றினார்.சங்கர வித்யா கேந்திரா மேல்நிலைப்பள்ளியின், 4ம் வகுப்பு மாணவன் பவன்ஸ்ரீ, வள்ளலார் எழுதிய, 'மனுமுறை கண்ட வாசகம்' எனும் சொற்பொழிவு, அரங்கில் பக்தி மணம் கமழச் செய்தது.சக்தி என்ற மற்றொரு மாணவி, 'இந்திய விடுதலையில் வீர இளைஞர்கள்' என்ற தலைப்பில், உணர்ச்சி ததும்ப பேசினார்.பெரம்பூர், புனித மேரி ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஜெய்சக்திவேல், துவக்கம் முதல் அடி பிறழாமல், கட்டப்பொம்மன் வசனம் போல், உடல் மொழியுடன் கூடிய கம்பீர குரலில், நாளைய, 'பாரதம் நமதே' என்ற தலைப்பில், வார்த்தை வாள் வீசினார்.சுமந்து வந்த கருத்துகளை, தடம் மாறாமல் கடத்த, கங்கணம் கட்டி களம் கண்ட, ரேவூர் பத்மநாபா பள்ளி மாணவர் செவ்வேல், கார்கில் நகர், நகராட்சி பள்ளி மாணவி பவிஸ்ரீ, ஆல் இந்தியா ரேடியோ நகர் நகராட்சி பள்ளி மாணவி ரேகா.கன்னியா குருகுலம் அரசு பெண்கள் பள்ளி மாணவி சுபஸ்ரீ என அனைத்து பேச்சாளர்களுக்கும், புத்தகம், பரிசு, பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.வாசகர் வட்ட நிர்வாகிகள், வரதராஜன், துரைராஜ், குரு. சுப்ரமணி, நுாலகர் பேனிக் பாண்டியன் மற்றும் பெற்றோர், வாசகர்கள் என, பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X