சென்னை: துபாய் மற்றும் மஸ்கட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட, 1.35 கோடி ரூபாய் மதிப்பிலான, தங்கம் மற்றும் குங்குமப் பூக்களை, சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான, துபாயில் இருந்து நேற்று முன்தினம் இரவு, 8:10 மணிக்கு, 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' விமானம், சென்னை வந்தது. அதில் வந்த, கேரள மாநிலத்தைச் சேர்ந்த அமீர், 41, மோயாத், 29, ஆகிய இருவரையும், சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.இருவரும் இடுப்பு பகுதியில், பெல்டில் மறைத்து வைத்திருந்த, 71.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1.82 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.மற்றொரு சம்பவத்தில், ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் இருந்து, 'ஓமன் ஏர்' விமானம் நேற்று நள்ளிரவு, 2:00 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த, நாகையைச் சேர்ந்த ஜாவித் முஷர், 22, என்பவரின் உடைமையை சோதனையிட்ட போது, அதன் உள்ளே இருந்து, 63.60 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 26.5 கிலோ, ஈரான் நாட்டின் உயர்ரக குங்குமப் பூக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.தங்கம் மற்றும் குங்குமப் பூக்கள் கடத்தியவர்களை, சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE