தமிழ்நாடு

அதிருப்தி! பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது விவசாயிகள்...தூர்ந்து கிடக்கும் மேமாத்தூர் பாசன வாய்க்கால்கள்

Updated : நவ 11, 2019 | Added : நவ 11, 2019
Advertisement
 அதிருப்தி! பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது விவசாயிகள்...தூர்ந்து கிடக்கும் மேமாத்தூர் பாசன வாய்க்கால்கள்

விருத்தாசலம்:விருத்தாசலம் மேமாத்துார் அணைக்கட்டு பாசன வாய்க்கால்கள் துார்ந்து கிடக்கும் நிலையில், கோமுகி அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டதால், பொதுப்பணித்துறை நிர்வாகம் மீது விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
விருத்தாசலம் அடுத்த மேமாத்துாரில், 1869ம் ஆண்டில் அணைக்கட்டு கட்டப்பட்டது. கோமுகி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும்போது, மணிமுக்தாறு வழியாக மேமாத்துார் அணைக்கட்டு வந்தடையும். அங்கிருந்து கொடுக்கூர் பெரிய ஏரி, சித்தேரி, சின்னக்குட்டி உடையார், பெரம்பலுார், பரவளூர், தொரவளூர், சாத்துக்கூடல், கோமங்கலம் உட்பட 15 கிராம ஏரிகள் நிரம்புவது வழக்கம். இதன் மூலம், 4,500 ஏக்கர் விளை நிலங்கள் நேரடியாகவும், ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெற்றன. நெல், கரும்பு, வேர்க்கடலை, உளுந்து உள்ளிட்ட வேளாண் விளை பொருட்களை விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர். மேலும், ஏரி, குளங்களில் தண்ணீர் நிரம்பி இருந்தபோது, நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருந்ததால், கிராம மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் இருந்தது இந்நிலையில், பருவமழை பெய்யாமல் மணிமுக்தாறு வறண்டதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்து விவசாயம் மட்டுமல்லாது, குடிநீரும் கேள்விக்குறியானது. அதற்கேற்ப, மேமாத்துார் அணைக்கட்டில் இருந்து பிரிந்து வரும் பாசன வாய்க்கால்கள், ஏரிகளுக்கு செல்லும் பிரிவு வாய்க்கால்களில் சம்பு, கருவேலம், காட்டாமணி செடிகள் மண்டி, துார்ந்து போனது.
இதனால் தண்ணீர் வழிந்தோட முடியாமல், சாலையில் வழிந்தோடும் அவலம் உருவாகியுள்ளது.குறிப்பாக விளாங்காட்டூர், தொரவளூர், பரவளூர், கோமங்கலம், மணவாளநல்லுார், ஆலிச்சிகுடி வழியாக செல்லும் பாசன வாய்க்கால்கள் துார்ந்து, முட்புதர்களாக மாறியுள்ளன. மேலும் துார்ந்து போன வாய்க்கால்களை தனி நபர்கள் ஆக்கிரமித்து, விளை நிலங்களாக மாற்றினர். இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியாகும்போது, பொதுப்பணித்துறை சார்பில் கண்துடைப்பாக வாய்க்கால்களை சீரமைப்பது தொடர்கிறது.
தற்போது பெய்து வரும் கனமழைக்கு, கோமுகி அணை நிரம்பி, முழு கொள்ளளவையும் எட்டியுள்ளது. இதனால் 1,000 கன அடி நீர், மணிமுக்தாற்றில் உபரியாக திறந்து விடப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்யுமானால், மேலும் தண்ணீர் திறந்துவிட வாய்ப்புள்ளது. இதனால் மேமாத்துார் அணைக்கட்டில் இருந்து வழிந்தோடி வரும் தண்ணீர், துார்ந்து கிடக்கும் வாய்க்கால் வழியாக செல்ல முடியாமல் சாலையில் பாய்ந்து வீணாகும் அபாயம் உள்ளது.கடந்த முறை மேமாத்துார் அணைக்கட்டில் தண்ணீர் திறந்து விடப்பட்டபோது, பரவளூர், தொரவளூர் கிராம பாசன வாய்க்கால்களில் இருந்து தண்ணீர் வெளியேறி, விளை நிலங்களிலும் சாலையிலும் வழிந்தோடி வீணானது. தற்போது, அதே நிலை ஏற்படும் என்பதால், பொதுப்பணித்துறை நிர்வாகம் மீது விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
இது குறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில செயலர் சாத்துக்கூடல் சக்திவேல் கூறுகையில், 'கோமுகி அணை முழு கொள்ளளவு எட்டி, பதினைந்து நாட்களாகிறது. தற்போது, 1,000 கனஅடி நீர் உபரியாக திறந்து விடப்பட்டுள்ளது. கூடுதலாக தண்ணீர் திறக்கும்போது, மேமாத்துார் அணைக்கட்டு வழியாக பாசன வாய்க்கால்களில் திறந்து விடப்படும். ஆனால், வாய்க்கால்கள் துார்ந்து கிடப்பதால் கிராம ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து கிடைக்காது. கடந்த முறை தண்ணீர் திறந்தபோது, துார்ந்துபோன பரவளூர் ராஜா வாய்க்கால் வழியாக சாலையில் வழிந்தோடி வீணானது. இந்நிலையில், இதே நிலையில் பாசன வாய்க்கால்கள் இருப்பதால், இந்த முறையும் தண்ணீர் கிடைப்பது சந்தேகமே. இதனால் மேமாத்துார் அணைக்கட்டு தண்ணீரை நம்பியுள்ள விவசாயிகள், பொதுப்பணித்துறை நிர்வாகம் மீது அதிருப்தியடைந்துள்ளோம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X