கடலுார்:கடலுார் வட்டாரத்தில் தென்பெண்ணை ஆற்றுப்பாசன பகுதிகளில் நீர்வள நிலவளத்திட்டத்தில் காய்கறி பயிர் செய்ய விவசாயிகளுக்கு, தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலக செய்திக்குறிப்பு:தோட்டக்கலை துறையின் மூலம், கடலுார் வட்டாரத்தில் தென்பெண்ணை ஆற்றுப்பாசன பகுதிகளில், நடப்பு 2019-20ம் ஆண்டில் நீர்வளத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பெண்ணையாற்றின் ஆயக்கட்டு பகுதிகளில் தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி பரப்பினை அதிகப்படுத்துவதோடு, வருமானத்தை 3 மடங்காகவும் உயர்த்துவது முக்கிய நோக்கமாகும். நடப்பு ஆண்டில் பெண்ணையாற்றின் பாசன பகுதிகளான உள்ளேரிப்பட்டு, திருப்பானாம்பாக்கம், களையூர், துாக்கனாம்பாக்கம், பள்ளிப்பட்டு, காரணப்பட்டு, புதுக்கடை, நல்லாத்துார், தென்னம்பாக்கம் ஆகிய கிராமங்களில் நீர்வள நிலவளத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இத்திட்டத்தில் வெண்டை, கத்தரி, மிளகாய் மரவள்ளி ஆகிய பயிர்கள் சாகுபடி செய்வதற்கு வீரிய ரக விதைகள், உரங்கள் மற்றும் பின் செய் நேர்த்தி மானியமும் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
மேற்கூறிய அனைத்து பயிர்களுக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதம் மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும், சொட்டுநீர் பாசனம் அமைத்து கொடுக்கப்பட உள்ளது.பொது பிரிவு, மகளிர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் தோட்டக்கலை உதவி இயக்குனர், குண்டுசாலை, கடலுார் என்கிற முகவரியில் தொடர்பு கொண்டு பயனடையலாம்.