திருக்கனுார்:கூனிச்சம்பட்டு தாமரை குளம் துார்வாரும் பணியினை கலெக்டர் அருண் பூஜை செய்து துவக்கி வைத்தார்.
புதுச்சேரியில் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை துார்வாரும் பணி 'நீரும் ஊரும்' திட்டத்தின் கீழ் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதன் ஒருபகுதியாக, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன், பூதநாதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 41, 150 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட தாமரை குளம் துார் வாரும் பணி துவக்க விழா நேற்று நடந்தது.கலெக்டர் அருண் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இதில், செல்வம், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார், இந்து சமய அறநிலை துறை ஆணையர் தட்சிணாமூர்த்தி, இளநிலைப் பொறியாளர் சாந்தன், அலுவலக உதவியாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.அப்போது, அப்பகுதி மக்கள் திரவுபதியம்மன் கோவில் எதிரே சேதமடைந்துள்ள பழைய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி மற்றும் சேதமடைந்த ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து கலெக்டரின் உத்தரவின் பேரில், கோவில் எதிரே சேதமடைந்திருந்த கட்டடங்கள் பொக்லைன் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
மேலும், தாமரை குளத்திற்கு கூனிச்சம்பட்டு பெரிய ஏரியில் இருந்து தண்ணீர் வரும் நீர்வரத்து வாய்க்காலை பார்வையிட்ட கலெக்டர், உடனடியாக நீர்வரத்து வாய்க்காலை துார்வாரநடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.தொடர்ந்து, கடந்த 8 ம் தேதி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களின் நிதியுதவியில், துவங்கப்பட்ட இடி விழுந்த குளம் துார்வாரும் பணியினை கலெக்டர் அருண், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார் ஆகியோர் பார்வையிட்டு, அப்பகுதி விவசாயிகளின் நலன்கருதி குளத்தின் கரைகளில் சாலை வசதி ஏற்படுத்தி தர முடிவு செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE