கோவை:தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில், 30 மருத்துவமனைகள் மட்டுமே பதிவு சான்றிதழ் பெற்றுள்ளன. மீதமுள்ள ஆயிரக்கணக்கான மருத்துவ நிறுவனங்களின் தரம், இதனால் கேள்விக்குரியதாகிறது.
அரசு, தனியார் மருத்துவமனைகள், மருத்துவ மையங்கள், பரிசோதனைக்கூடங்கள் ஆகியவற்றை முறைப்படுத்தவும், போலி மருத்துவமனைகள், டாக்டர்களை கண்டறியவும், தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து மருத்துவ நிறுவனங்களும் பதிவு செய்வது கட்டாயம்.இப்படி பதிவு செய்யும் மருத்துவமனைகளை, கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்து, அறிக்கை அளிக்கும். அறிக்கையின்படி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.இந்த சிறப்புக்குழுவில், சுகாதார துறை இணை இயக்குனர், துணை இயக்குனர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீன், இந்திய மருத்துவ சங்கத்தின் மாவட்ட தலைவர், செயலாளர் ஆகியோர் உள்ளனர்.மருத்துவமனைகளில், மனிதவளம், டாக்டர்களின் சான்றிதழ், மருத்துவக் கழிவுகள் கையாளுதல், சுகாதாரம், நோயாளிகளுக்கு தேவையான வசதிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள், ஆய்வின் போது கருத்தில் கொள்ளப்படும்.கோவை மாவட்டத்தில், 3,200 மருத்துவமனைகள் இருக்கும் நிலையில், முதற்கட்டமாக, 30 மருத்துவமனைகளுக்கு மட்டுமே சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில், 'முதற்கட்டமாக, 30 மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவமனைகளுக்கும் நேரில் சென்று, ஆய்வு மேற்கொண்டு சான்றிதழ் வழங்க, அதிக கால அவகாசம் தேவை.
விரைவில் அனைத்து மருத்துவமனைகளிலும், ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்' என்றனர்.வெறும் 30 மருத்துவமனைகளுக்கு மட்டுமே சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள தகவல், பிற மருத்துவமனைகள் தரமற்றவையா, அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் நிலை என்ன என்றெல்லாம் கேள்வி எழும்புகிறது.
அரசு, தனியார் மருத்துவமனைகள், மருத்துவ மையங்கள், பரிசோதனைக்கூடங்கள் ஆகியவற்றை முறைப்படுத்தவும், போலி மருத்துவமனைகள், டாக்டர்களை கண்டறியவும், தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து மருத்துவ நிறுவனங்களும் பதிவு செய்வது கட்டாயம்.