உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில், நான்காம் கட்டமாக ஆய்வு நடத்திய 'ஜல் சக்தி அபியான்' திட்டக்குழு, நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதாக, பாராட்டியுள்ளது.வறட்சி மாவட்டங்களில், 'ஜல் சக்தி அபியான்' குழுவினர், தொடர் ஆய்வு நடத்தி, மழைநீர் சேகரிப்பு, குளம், குட்டைகளில் நீர் சேகரித்தல், மரம் வளர்ப்பு திட்டங்கள் மூலமாக, நிலத்தடி நீர் செறிவூட்டலை மேம்படுத்த வழிகாட்டியுள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், ஜூலை மாதம், 'ஜல் சக்தி அபியான்' திட்டக்குழு ஆய்வு நடத்தியது.இதுகுறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன் சங்கர்ராஜ் கூறியதாவது:நான்காம் கட்டமாக, 'ஜல்சக்தி அபியான்' திட்டக்குழுவினர், திருப்பூர் வந்துள்ளனர். கடந்தமுறை பார்த்த பகுதிகளை மீண்டும் சென்று பார்த்து, குளம், குட்டை, தடுப்பணைகளில் மழைநீர் தேங்கியுள்ளதை பாராட்டினர்.மாவட்டத்தில் வறட்சி பாதித்திருந்த பகுதிகளில், நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.கடந்த, 2017 ஆண்டு, நிலத்தடி நீர் மட்டம், சராசரி ஆழம், 16.74 மீட்டர் இருந்தது;2018 ல், 10.51 மீட்டராக உயர்ந்தது; தற்போதைய கணக்கெடுப்பில், 8.7 மீட்டராக உயர்ந்துள்ளது என, ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.சிறு தடுப்பணைகளில் மழைநீரை தேக்கியதாலும், பயன்படாத போர்வெல்லை, மழைநீர் கட்டமைப்பாக மாற்றியதாலும், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக, 'ஜல் சக்தி அபியான்' திட்டக்குழுவினர் பாராட்டினர்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE