உடுமலை:உடுமலை திருமூர்த்திமலைப்பகுதிகளில், 'தாகம்' தன்னார்வ அமைப்பு சார்பில், 140 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.உடுமலை அருகே, மேற்கு தொடர்ச்சிமலைத்தொடரில் அமைந்துள்ள திருமூர்த்திமலையில், பஞ்சலிங்கம் அருவி, திருமூர்த்தி அணை, வண்ண மீன் பூங்கா, மலையடிவாரத்தில், பாலாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் என, சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாக உள்ளது.பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து, தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மலைக்கு வரும் பொதுமக்கள், பஞ்சலிங்கம் அருவியில், தங்களது உடைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை விடுகின்றனர். அதே போல், கோவில் வளாகத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பவர்கள், பாலாற்றில் நேரடியாக, கழிவுகளை கலந்து வருகின்றனர். இதனால், பஞ்சலிங்கம் அருவி, பாலாறு மற்றும் திருமூர்த்தி அணையில், துணிகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட ஏராளமான கழிவுகள் தேங்கி, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. சுற்றுச்சூழல் காக்கும் வகையில், உடுமலை 'தாகம்' அமைப்பு சார்பில், மாதத்தின் முதல் சனிக்கிழமை மற்றும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை, துாய்மைப்பணி நடக்கிறது. ஏராளமான தன்னார்வலர்கள் பங்கேற்று, கழிவுகளை சேகரிக்கின்றனர். நேற்று, ஒரே நாளில், 750 கிலோ, துணி, பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள்அகற்றப்பட்டுள்ளன.இந்த அமைப்பு சார்பில், இதுவரை, 75 வாரமாக, கழிவுகள் அகற்றும் பணி நடந்துள்ளதில், 140 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. திருமூர்த்திமலைக்கு வரும், சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கழிவுகளை உரிய, குப்பை தொட்டியில் போட வேண்டும். நீர் நிலைகளில், துணி உள்ளிட்ட பொருட்களை விடக்கூடாது, என்ற விழிப்புணர்வு இல்லாததே, திருமூர்த்திமலை மாசுபடுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.அடிப்படை வசதி இல்லை திருமூர்த்திமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு, கழிப்பறை மற்றும் உடை மாற்றும் அறை இல்லை. இதனால், பாலாறு, பஸ் ஸ்டாண்ட் மற்றும் பஞ்சலிங்கம் அருவிக்கு செல்லும் வழித்தடங்கள், திறந்த வெளி கழிப்பிடமாக மாற்றப்பட்டு, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. எனவே, பொதுமக்களுக்கு இலவசமாக, கழிப்பிடம் மற்றும் உடை மாற்றும் அறைகள் அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE