பொள்ளாச்சி:பொள்ளாச்சிக்கான ரயில் வழித்தடங்களை மின்மயமாக்க ஒப்பந்தப்புள்ளி அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய ரயில்வேயின் மத்திய மின்மயமாக்கல் பிரிவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இந்திய ரயில்வேயின் வழித்தடங்களை மின்மயமாக்கும் பணிகள், 'கோர்' எனப்படும் மத்திய மின்மயமாக்கல் பிரிவு மூலம் மேற்கொள்ளப்படுகிறது.அப்பிரிவு மூலம் திண்டுக்கல் - பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தடம் மற்றும் பொள்ளாச்சி - போத்தனுார் வழித்தடங்களை மின்மயமாக்கும் பணிகள் நடப்பாண்டில் துவங்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதற்கான பூர்வாங்க பணிகளுக்காக, 45 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது.வழித்தடங்கள் மின்மயமானால், ரயில் இயக்கச் செலவு குறையும், ரயில்களின் எண்ணிக்கை மற்றும் வேகம் அதிகரிக்கும் ஆகிய நன்மைகள் கிடைக்கும். இதனால், மின்மயமாக்கல் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என ரயில்வே ஆர்வலர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், ரயில்வேயின் மின்மயமாக்கலுக்காக 'கோர்' பிரிவு நேற்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், திண்டுக்கல் - பொள்ளாச்சி - பாலக்காட்டை இணைக்கும், 179 கி.மீ., தொலைவுள்ள ரயில் வழித்தடம் மற்றும் பொள்ளாச்சி - போத்தனுார் இடையிலான, 40 கி.மீ., ரயில் வழித்தடம் உள்ளிட்ட எட்டு வழித்தடங்களை மின்மயமாக்கல் பணிகளுக்கு ஒப்பந்த புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.இதன் மூலம், தெற்கு ரயில்வேயின் முக்கிய பகுதிகள் மின்சார ரயில்களால் இணைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இத்தகவல், பொள்ளாச்சி மக்கள் மற்றும் ரயில்வே ஆர்வலர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE