பொது செய்தி

தமிழ்நாடு

கவலை! மணிமுக்தா அணை நிரம்பாததால் விவசாயிகள்...அதிகாரிகள் அலட்சியத்தால் விரயமாகும் மழைநீர்

Added : நவ 11, 2019
Advertisement
 கவலை! மணிமுக்தா அணை நிரம்பாததால் விவசாயிகள்...அதிகாரிகள் அலட்சியத்தால் விரயமாகும் மழைநீர்

கல்வராயன் மலையில் கன மழை பெய்தும், மணிமுக்தா அணைக்கு தண்ணீர் வராததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அணைக்கு வரும் தண்ணீர் வழியில் விரயமாவதை தடுக்க பொதுப்பணித் துறையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் மணி மற்றும் முக்தா ஆகிய இரு ஆறுகள் இணையும் சூளாங்குறிச்சி அருகே அணை கட்டப்பட்டுள்ளது.இங்கிருந்து மணிமுக்தா நதியாக உருவெடுத்து, கடலூர் மாவட்டத்தின் வழியே சென்று வெள்ளாற் றுடன் இணைந்த, வங்கக் கடலில் கலக்கிறது.கள்ளக்குறிச்சி பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மணிமுக்தா அணை 36 அடி உயரமாகும். இதில் 736 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்க முடியும். அணையில் இருந்து 15 கிலோமீட்டர் நீளத்திற்கு பிரதான பாசன வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் 20 கிராமங்களில் 5,493 ஏக்கர் ஆயக்கட்டு நிலம் நேரடி பாசன வசதி பெறுகிறது.
அதேபோல் மீன்வளர்ப்பு தொழிலை நம்பி 200 குடும்பங்கள் இங்கு உள்ளன. கனமழை காலங்களில் உபரி நீரை முழுமையாக வெளியேற்ற வசதியாக ரூ.71.16 கோடி மதிப்பில் கூடுதலாக புதிதாக 3 ஷெட்டர் அமைக்கப்பட்டுள்ளது.அணையின் பிரதான நீர்வரத்து ஆதாரமாக மணி ஆறு உள்ளது. கல்வராயன் மலையில் பெருக்கெடுக்கும் காட்டாற்று வெள்ளம் அரசம்பட்டு, சங்கராபுரம் வழியே அணையை சென்றடைகிறது.இதற்கிடையே மேல்சிறுவலூர் மற்றும் ராமராஜபுரம் ஆகிய இடங்களில் 2 தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளது. தடுப்பணைகளில் தேக்கப்படும் தண்ணீரைக் கொண்டு சுற்று வட்டாரத்தில் உள்ள 15 க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு நீர்வரத்து கிடைக்கிறது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மேல்சிறுவலூர் மற்றும் ராமராஜபுரம் ஆகிய இரு தடுப்பணைகளும் பொதுப்பணித் துறையினரால் தலா 2 அடி உயர்த்தப்பட்டது.இதனால் மணிமுக்தா அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்துவிட்டது.அதிக அளவு மழை பெய்தால் மட்டுமே அணை நிரம்பும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.கோமுகி அணையை பொறுத்தவரை மலை அடிவாரத்திலேயே அமைந்துள்ளது. இதனால் கல்படையாற்றில் இருந்து வெளியேறும் தண்ணீர் முழுமையாக அணை நிரம்புவதற்கு பயன்படுகிறது.ஆனால் கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் மணி ஆறு 40 கி.மீ., தொலைவிலுள்ள மணிமுக்தா அணைக்கு செல்வதற்குள் தண்ணீர் பலவகையில் விரயமாகி வருகிறது.
இதனால் கடந்த 2017ம் ஆண்டு கோமுகி அணை நிரம்பிய போதும் மணிமுக்தா அணை நிரம்பவில்லை.கடந்த மூன்று ஆண்டுகளாக மணிமுக்தா அணை முழு கொள்ளளவை எட்டவில்லை.கடந்த ஒரு மாதமாக கல்வராயன் மலையில் கனமழை பெய்து கோமுகி அணை நிரம்பி உபரிநீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.ஆனால் மணிமுக்தா அணைக்கு இதுவரை 23 அடிக்கு மட்டுமே தண்ணீர் வரத்து கிடைத்துள்ளது. இது ஆயக்கட்டு விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.மணியாற்றில் உள்ள தடுப்பணைகள் உயர்த்தப்பட்டதும், வழியில் தண்ணீர் விரயமாவதும் மணிமுக்தா அணைக்கு நீர்வரத்து வராததற்கு முக்கிய காரணமாக உள்ளது.
இவ்விஷயத்தில் பொதுப்பணித் துறையினர் அலட்சியமாக உள்ளனர் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.கடந்த இரு ஆண்டுகளாக பருவமழை பொய்த்து அணை நிரம்பாமல் அப்பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளது.இந்நிலையில் தற்போது பெய்து வரும் பருவமழை வெள்ளம் மணிமுக்தா அணைக்கு முழுமையாக கிடைக்காமல் வீணாகி வருகிறது.பருவமழை காலங்களில் அணை முழு கொள்ளளவை எட்டுவதற்குண்டான நடவடிக்கையை அதிகாரிகள் விரைவில் எடுக்க வேண்டும் என்பதே ஒட்டு மொத்த விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

-நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X