திருச்சி: சென்னையில் இருந்து நண்பரின் திருமணத்திற்கு வந்தவர், துறையூர் பெரிய ஏரி அருகே உள்ள தெப்பக்குளத்தில் மூழ்கி பலியானார்.
தர்மபுரி, ந.மல்லாபுரத்தை சேர்ந்தவர் சண்முகம், 27. சென்னையில் கார் ஓட்டுனராக வேலை செய்தார். உடன் வேலை செய்யும் அவரது நண்பரான, துறையூர் அருகே மெய்யம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு திருமணத்துக்கு, நேற்று காலை துறையூர் வந்தார். அவருடன் வந்த, சென்னையைச் சேர்ந்த நண்பர்கள் அசோக், 30, ஜெயகுருநாதன், 36, பாஸ்கர், 40, ஜோசப், 40, ஆகியோருடன், துறையூர் தெப்பக்குளம் அருகே உள்ள திருமண மண்டபத்திற்கு சென்றார். அப்போது திருமண மண்டபத்திற்கு எதிரே உள்ள தெப்பக்குளத்தில், உள்ளூர் இளைஞர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த சண்முகம் மற்றும் அவரது நண்பர்கள், குளத்தில் இறங்கி குளித்தனர். அப்போது சண்முகம், மைய மண்டபத்தை நோக்கி நீந்திச் சென்றார். பாதிக்கு மேல் மூச்சடக்கி, நீந்த முடியாமல் நீரில் மூழ்கினார். நண்பர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேடி, சண்முகம் உடலை மீட்டு, துறையூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE