இந்த செய்தியை கேட்க
புதுடில்லி : விவசாயிகள் தற்கொலை விவகாரத்தில் உண்மையை பார்த்து பா.ஜ., அரசு பயப்படுவதாக காங்., பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா குற்றம்சாட்டி உள்ளார்.

ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வரும் தேசிய குற்றப்பதிவு பணியக (NCRB) அறிக்கையில் தற்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் முதல் முறையாக, மாநில வாரியாக விவசாயிகள் தற்கொலை குறித்த புள்ளிவிபரம் குறிப்பிடப்படவில்லை. இது தொடர்பாக மத்திய அரசை, பிரியங்கா கடுமையாக தாக்கி பேசி உள்ளார்.

பிரியங்கா தனது டுவீட்டில், உண்மையை பார்த்து பா.ஜ., அரசு ஏன் பயப்படுகிறது? பா.ஜ., அரசின் ஆட்சியில் விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். விவசாயிகளின் பிரச்னைகளை தீர்ப்பதற்கு பதில், விவசாயிகள் தற்கொலைகளை மூடி மறைப்பதிலேயே பா.ஜ., அரசு கவனமாக உள்ளது. விவசாயிகளுக்கு உரிய விலையை தர வேண்டும். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து, அவர்களை மதிக்க வேண்டும். விவசாயிகளை நாதியற்றவர்களாக மாற்றி விடாமல், பலப்படுத்துங்கள் என குறிப்பிட்டுள்ளார்.