சென்னை: பலத்த எதிர்பார்ப்புகளுடனும், ‛பஞ்ச்' டயலாக்குகளுடனும் தீபாவளிக்கு வெளியான விஜய் நடித்த பிகில், எந்த எதிர்பார்ப்பும் பரபரப்பும் பஞ்ச் டயலாக்கும் இல்லாமல் வெளியான, கார்த்தி நடித்த ‛கைதி' படத்திடம் தோற்றுப்போனது. இது அரசியல் ஆசையில் இருக்கும் விஜய்க்கும் அவரது ‛அன்பு' அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விஜய்யுடன் போட்டி போட்டால் கார்த்தி காணாமல் போய்விடுவாரே என கார்த்தி ரசிகர்கள் கலங்கிப் போய் இருந்தனர். இருப்பினும் 'கைதி' படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிரீம் வாரியர் பிக்சர்ஸ். தங்கள் படத்தின் மீதும் கதை மீதும் நம்பிக்கை வைத்திருந்ததால், விஜய் படத்துடன் மோத தயாரானது.
பஞ்சர் ஆன ‛பஞ்ச்'
'பிகில்' படத்தின் பட்ஜெட் 180 கோடி என அதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி படம் வெளிவருவதற்கு முன்பு பல பேட்டிகளில் ‛பெருமையாக' தெரிவித்தார். அடிக்கடி படம் பற்றி டுவீட் வேறு செய்தார்.
ஆனால், படம் வெளிவந்த பின் வசூலைப் பற்றி எந்த டுவீட்டையும் அவர் செய்யவில்லை. படம் வெளியாகும் முன்பு இசை வெளியீட்டில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசி தனது படத்திற்கு விளம்பரத்தை தேடினார் விஜய். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.
இரண்டு படங்களும் வெளிவந்து இரண்டு வாரங்கள் முடிந்துவிட்டது. மூன்று சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் கடந்துவிட்டன. இத்தனை நாட்களில் 'பிகில்' படம் வசூலித்த தொகை அதிகமாக இருந்தாலும் கூட அது தராத லாபத்தை 'கைதி' படம் கொடுத்துள்ளதாக திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

எடுப்படாத பப்ளிசிட்டி
'பிகில்' படத்தின் வசூலைப் பற்றியும், வரவேற்பு பற்றியும் சில குறிப்பிட்ட நபர்கள் தொடர்ந்து டுவிட்டரில் உண்மையற்ற தகவல்களைக் கொடுத்து வந்தனர். அதே சமயம் 'கைதி' படத்திற்கு அப்படி யாரும் எந்த தகவலையும் கொடுக்கவில்லை. மாறாக, படம் பார்த்த ரசிகர்களே படத்தைப் பாராட்டி சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பாசிட்டிவ் தகவல்கள் படத்தின் வசூலை நாளுக்கு நாள் அதிகரிக்க வைத்தது.
முதலில் தமிழ்நாட்டில் 250 தியேட்டர்களில் வெளியான 'கைதி', தொடர்ந்து கிடைத்த மக்களின் ஆதரவால் மூன்றாவது வாரத்தில் 350 ஆக அதிகரித்தது. 'பிகில்' படத்தின் தியேட்டர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்ததால் அது பற்றி சம்பந்தப்பட்டவர்கள் மூச்சே காட்டவில்லை.
பிகில் நஷ்டம்
விசாரித்த வகையில், ரூ.180 கோடி செலவில் எடுக்கப்பட்ட 'பிகில்' படம் உலகம் முழுவதும் 250 கோடி வரை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், வெறும் ரூ.27 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட 'கைதி' படத்தின் வசூல் 100 கோடியைத் தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
'பிகில்' வசூல் 250 கோடி என்று சொன்னாலும் தியேட்டர்காரர்களுக்கு சில லட்சங்கள் மட்டுமே லாபம் இருக்கும் என்றும், 'கைதி' படம் மூலம் கிடைக்கும் லாபம் பல லட்சங்கள் இருக்கும் என்கிறார்கள்.

180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 250 கோடி வசூல் பெரிதா அல்லது 27 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 100 கோடி வசூல் பெரிதா என்பதை புரிந்து கொள்ளலாம். தியேட்டர் வசூல் அல்லாது 'கைதி' படத்தின் மற்ற உரிமைகள் மேலும் 25 கோடி ரூபாயைப் பெற்றுத்தரும் என்கின்றனர். இவற்றையும் சேர்த்துப் பார்த்தால் 'கைதி' படத்தின் லாப விகிதம் மேலும் அதிகரிக்கும்.
'பிகில்' படத்தின் வசூல் தொகையைப் பற்றி விசாரித்த போது தியேட்டர்காரர்களுக்கும், தமிழ்நாடு உரிமையை வாங்கியவருக்கும் மட்டுமே லாபம் தரும் என்கிறார்கள். ஏரியா வாரியாக வாங்கி வெளியிட்ட வினியோகஸ்தர்களுக்கு ரூ.10 முதல் 15 கோடி வரை நஷ்டம் வர வாய்ப்புள்ளதாகவும். தீபாவளிக்கு ஓரிரு படங்கள் கூடுதலாக வெளியாக வந்திருந்தால் ‛பிகில்' படம் கடும் நஷ்டத்தை சந்தித்து இருக்கும் என்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.

'பிகில்' சத்தத்தைக் குறைத்த 'லாரி' சத்தம்
பிரம்மாண்ட கமர்ஷியல் படம், விஜய் ஹீரோ, நயன்தாரா ஹீரோயின் ஏ.ஆர்.ரகுமான் இசை என 'பிகில்' படத்தில் இருந்த எதுவுமே 'கைதி' படத்தில் இல்லை. படத்தில் நாயகி இல்லை, பாடல்கள் இல்லை, எந்த பிரமாண்டமும் இல்லை. முக்கியமாக பஞ்ச் டயலாக் இல்லை. அப்படியும் படம் பிரமாதமாக ஓடுகிறது.
எனவே, இதன் பிறகாவது, சும்மா ‛பஞ்ச்' டயலாக் பேசியே ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று கற்பனை உலகில் மிதக்கும் நடிகர்கள், உண்மையான உலகத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.