புதுடில்லி : கர்நாடகாவைச் சேர்ந்த, எம்.எல்.ஏ., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, காங்., மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த, 17 பேர் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது.
கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்கு, காங்., ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த குமாரசாமி முதல்வராக இருந்தார். அப்போது, அரசுக்கு எதிராக, காங்., மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த, 17 பேர் போர்க்கொடி துாக்கினர். தங்களுடைய எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தனர். ஆனால், இவர்களுடைய ராஜினாமாவை ஏற்காமல், அப்போது சபாநாயகராக இருந்த ரமேஷ் குமார், இவர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதற்கிடையே, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. அதையடுத்து, எடியூரப்பா முதல்வரானார்.
இந்த, 17 தொகுதிகளில், 15 தொகுதிக்கான இடைத்தேர்தல், டிச., 5ல் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய, வரும், 18 கடைசி நாளாகும். இந்த நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, 17 பேரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதை விசாரித்த, நீதிபதிகள் என்.வி.ரமணமா, சஞ்சிவ் கன்னா மற்றும் கிருஷ்ண முராரி அமர்வு, அக்., 25ல், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படும் என, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.