பொது செய்தி

இந்தியா

உலக அமைதியை வலியுறுத்திய குரு!

Updated : நவ 13, 2019 | Added : நவ 11, 2019 | கருத்துகள் (1)
Advertisement
உலக அமைதி,குரு,வெங்கையா நாயுடு, துணை ஜனாதிபதி

மிகப் பெரும் ஞானியும், சிறந்த ஆன்மிகவாதியான குருநானக்கின், 550வது பிறந்த நாளை கொண்டாடுகிறோம். இந்த நேரத்தில், உலக அமைதி, சமத்துவம், அனைவருக்கும் வளர்ச்சி போன்றவை குறித்த அவருடைய எண்ணங்கள், சிந்தனைகள், போதனைகள், முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போதைய காலகட்டத்துக்கு மிகவும் பொருத்தமாக உள்ளன.

மிகவும் குறுகிய பார்வை, மதவெறி மற்றும் பிடிவாதம் ஆகியவை அதிகரித்து வரும் நிலையில், தனிநபர், சமூகம் மற்றும் நாடுகளை மறைத்திருக்கும், அச்சுறுத்தலாக இருக்கும் இருளை அகற்றுவதற்கு, குருநானக் போன்ற குருமார்களின் வழியை நாம் பின்பற்ற வேண்டும்.குருநானக் போன்றோரின், எந்த காலத்துக்கும் ஏற்ற, நம்பிக்கை பாதையை காட்டும் அறிவுரைகள், உபதேசங்கள், இந்த உலகம் குறித்து நமக்கு விரிவான பார்வையை அளிப்பதாக அமைந்துள்ளன.நம்மைப் போன்ற சாதாரண மக்கள் பார்க்காததை, குருநானக் போன்ற ஆன்மிக தலைவர்கள் பார்த்துள்ளனர். தங்களுடைய தொலைநோக்குப் பார்வை, உபதேங்கள் மூலம் மக்களின் வாழ்க்கைக்கு அவர்கள் ஒளியூட்டியுள்ளனர்.

இதுதான், 'குரு' என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம். வாழ்க்கைக்கான ஒளியைக் காட்டி, சந்தேக இருளைப் போக்கி, நாம் செல்ல வேண்டிய பாதையைக் காட்டுபவர்தான், குரு.நாம் ஒவ்வொருவரும், எந்தத் துறையில், எந்த நிலையில் இருந்தாலும், மிகவும் உயர்ந்த குருநானக்கின் போதனைகளில் இருந்து நிறைய கற்க வேண்டியுள்ளது. சமத்துவத்துக்காகப் போராடிய மாபெரும் ஞானி அவர். மதம், மொழி, இனம், ஜாதி ஆகியவற்றின் அடிப்படையில் மக்களை வேறுபடுத்தி பார்ப்பதை அவர் ஏற்றதில்லை.'ஜாதி என்பது போலித்தனமானது; பிறப்பால் வேறுபடுத்தி பார்ப்பது வீணானது' என்பதே அவருடைய எண்ணம். ஜாதிகள் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதே அவருடைய விருப்பமாக இருந்தது.பெண்களை மதிப்பது மற்றும் பாலின சமநிலை ஆகியவை, குருநானக்கின் வாழ்க்கை நமக்கு கற்றுத் தரும் பாடமாகும்.

பெண்கள் குறித்து கூறுகையில், 'ஆண்களை பெற்றெடுக்கும் பெண்கள் எப்படி ஆண்களை விட கீழானவர்களாக இருக்க முடியும். கடவுளின் படைப்பில், ஆண்களும், பெண்களும் சமம்' என்று குருநானக் கூறியுள்ளார்.அவரைப் பொறுத்தவரை, 'இந்த உலகம் கடவுள் சிருஷ்டித்த ஒன்று; அதில் பிறப்பால் அனைவரும் சமம். ஒருவனே உலகத்தை உருவாக்கியவர்.' சமஸ்கிருதத்தில் கூறப்படுவதைப் போல, 'வசுதைவ குடும்பகம்' எனப்படும் இந்த உலகமே ஒரு குடும்பம் என்பதை குருநானக் வலியுறுத்தி வந்தார்.குருநானக் மேலும் கூறுகையில், 'எனது, உனது என்பதை ஒருவர் மறந்தால்எவரும் அவரிடம் கோபப்பட மாட்டார்கள். எனது எனது என்ற வார்த்தையுடன்ஒட்டியிருந்தால் ஒருவருக்கு ஆழ்ந்த பிரச்னை தான். ஆனால், படைத்தவரை உணர்ந்தால் வேதனையில் இருந்து விடுதலை கிடைக்கும்' என்றார்.ஒற்றுமையாக இருக்க வேண்டும்; நல்லிணக்கத்துடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்பவை, அவருடைய பாடல்களில் இழையாக ஊடுருவியிருக்கும்.

குருநானக்கின் சிறப்புகளில் முதன்மையானது, சீக்கிய மதத்துக்கான அடிப்படைகளை உருவாக்கியது மட்டுமல்ல; சகிப்புத் தன்மையை ஏற்படுத்தும் அவருடைய போதனைகளே.சமத்துவம் என்ற கோட்பாட்டை, வாழ்க்கையில்நடைமுறைபடுத்தும் வகையில், 'லாங்கர்' எனப்படும், சமூக உணவு முறையை உருவாக்கியுள்ளார். ஜாதி, மதம், மொழி, இன பாகுபாடு இல்லாமல், அனைத்துத் தரப்பினரும், 'பங்கட்' எனப்படும் வரிசையில் அமர்ந்து, அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவே வழங்கப்படும். அவர்கள் சந்திக்கும் இடம், 'தர்மசால்' என்றழைக்கப்படுகிறது. இது, மிகவும் புனிதமான இடமாக கருதப்படுகிறது. 'சங்கத்' எனப்படும் அவர்களுடைய மதக் கூட்டத்தில் அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம்.இது போன்ற, அவர்களுடைய வழிபாட்டு வழிமுறைகள் அனைத்தும்,சமத்துவம், பாகுபாடின்மை ஆகிய குருநானக்கின் தொலைநோக்கு பார்வையை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.ஹிந்து, முஸ்லிம் இடையே வேறுபாடு இல்லை என்பதில் இருந்தே, சமத்துவம் என்ற அவர்களுடைய கோட்பாடு துவங்குகிறது.

இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், 16வது நுாற்றாண்டிலேயே, மதங்களுக்கு இடையேயான பேச்சை, குருநானக் நடத்தியுள்ளார். பல்வேறு மதத் தலைவர்களுடன் அவர் பேசியுள்ளார்.உலக அமைதி, ஸ்திரத்தன்மை, ஒத்துழைப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு தரப்பினர் இடையே பேசக்கூடிய இவரைப் போன்ற ஆன்மிகத் தலைவர்கள் தற்போதைக்கு தேவை.குருநானக்கின் தொலைநோக்கு பார்வை என்பது முழுமையானதாகவும், நடைமுறைக்கு உகந்ததாகவும் உள்ளது. பற்றற்ற நிலையில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தாமல், முழு மனதுடன் ஈடுபட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.ஒரு பக்கம் ஆத்திகமும் மறுபக்கம் நாத்திகமும் பேசப்பட்ட நிலையில், அவற்றுக்கு இடைப்பட்ட பாதையை, அதாவது, 'கிருஹத்ச ஆசிரமம்' எனப்படும் குடும்ப வாழ்க்கையுடன் கூடிய பயணம் என்ற பாதையை அவர் தேர்ந்தெடுத்தார். சமூக, பொருளாதார மற்றும் ஆன்மிக ரீதியில்வளர்ச்சி என்ற நல்வாய்ப்பை அளிப்பதால், இந்த முறையை அவர் தேர்ந்தெடுத்திருக்கலாம்.

வேலை செய், வழிபடு, பகிர்ந்து கொள் என்பதை வாழ்க்கையின் நெறியாக, அவர் நிர்ணயித்தார். ஒவ்வொருவரும் நேர்மையாக வேலை செய்ய வேண்டும்; தேவைப்படுவோருக்கு உதவிட வேண்டும் என்பதே அவருடைய வழிகாட்டுதல். ஒருவன் தன்னுடைய வளர்ச்சியை பற்றி மட்டும் பார்க்காமல், தேவைப்படுவோருக்கு உதவிட வேண்டும் என்பதே அவருடைய பாடம். தன் வருவாயில், 10ல் ஒரு பகுதியை தானமாக அளிக்க வேண்டும் என, அவர் வலியுறுத்தினார். பல்வேறு மதங்களில் உள்ள, ஆன்மிக நடைமுறைகளில் உள்ள சிறப்புகளை தொகுத்துள்ள, மிகச் சிறந்த ஆன்மிகவாதியாக விளங்குகிறார்.இந்த நேரத்தில், தன் வாழ்நாளில், கடைசி, 18 ஆண்டுகளை அவர் வாழ்ந்த, பாக்.,கின் கர்தார்பூரில் உள்ள குருத்வாராவுக்கு, பஞ்சாப் மாநிலத்தின் குருதாஸ்பூரில் இருந்து சிறப்பு பாதை அமைக்கப்பட்டுள்ளது. அது யாத்ரீகர்களுக்கு திறந்துவிடப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்கிறேன்.குருநானக்கின் கொள்கைகள், கோட்பாடுகள், போதனைகள் போன்றவை, 500 ஆண்டுகளுக்கு முன் கூறப்பட்டவை.

ஆனாலும், அவற்றுக்கு கால எல்லை என்பது கிடையாது; தற்போதைய சூழ்நிலைக்கும் உகந்தவை.அவருடைய செய்திகளை நாம் நம்முடைய வாழ்க்கையில் கடைப்பிடித்து, நம் நடவடிக்கைகளை மாற்றிக் கொண்டால், அமைதி மற்றும் நீடித்த வளர்ச்சி உள்ள புதிய உலகை படைக்க முடியும்.(இன்று குருநானக்கின், 550வது பிறந்த நாள்)

வெங்கையா நாயுடு,
துணை ஜனாதிபதி

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh M - COIMBATORE,இந்தியா
12-நவ-201920:10:19 IST Report Abuse
Ramesh M இதுதான், 'குரு' என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம். வாழ்க்கைக்கான ஒளியைக் காட்டி, சந்தேக இருளைப் போக்கி, நாம் செல்ல வேண்டிய பாதையைக் காட்டுபவர் தான், குரு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X