ரேபரேலி: ரேபரேலியில் உள்ள காந்தி சேவா நிகேதனில், பெண் ஆசிரியையை, மாணவர்கள் சூழ்ந்து, நாற்காலியை கொண்டு தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உ.பி., மாநிலம் ரேபரேயில் உள்ள காந்தி சேவா நிகேதனில், பணியாற்றி வருகிறார் மம்தா துபே. இவர் காந்தி சேவா நிகேதன் குழுமத்தில் குழந்தைகள் நல அலுவலராக உள்ளார். இந்நிலையில் வகுப்பறையில், மம்தா துபேயை வம்பிழுக்கும் சில மாணவர்கள், அவரது கைப்பையை தூக்கி வீசுகின்றனர். அதனை எடுத்து வரும் ஆசிரியையிடம் வாக்குவாத்திலும் ஈடுபட்டனர். அடுத்த சில நொடிகளில் அதில் ஒரு மாணவன், ஆசிரியையை சேரை கொண்டு தாக்கத் துவங்கினார். இது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. அந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியை மம்தா துபே கூறுகையில், இரு நாட்களுக்கு முன்பு கைகழுவும் அறையில் வைத்து, காந்தி சேவா நிகேதன் மாணவர்கள் சிலர் என்னை பூட்டிவிட்டனர். இதுகுறித்து மேலாளரிடம் புகார் கொடுத்த போது, மாணவர்கள், அவர்கள் நினைத்ததை தான் செய்வார்கள் என அலட்சியமாக பதிலளித்தார். அடுத்த இரு நாட்களில் மாணவர்களால் நான் தாக்கப்பட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த மேலாளர், குழந்தைகளை அடிக்கடி அனாதைகள் என திட்டியதால், மம்தா துபேயை மாணவர்கள் சிலர் தாக்கியதாக கூறினார். இதுகுறித்து மம்தா துபே, மேலாளர் மீது அளித்துள்ள புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.