மஹா., மக்கள் பணம் ரூ.900 கோடி வீண்! அமலானது ஜனாதிபதி ஆட்சி

Updated : நவ 13, 2019 | Added : நவ 12, 2019 | கருத்துகள் (45)
Share
Advertisement
மும்பை: 'மஹாராஷ்டிராவில் புதிய அரசு அமைவதற்கு வாய்ப்பு இல்லை' என கவர்னர் அறிக்கை அளித்ததை அடுத்து நேற்று ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் சட்டசபை தேர்தல் நடத்துவதற்காக செலவிடப்பட்ட 900 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.மஹாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ. 105 தொகுதிகளிலும்; அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 56
மஹா., ரூ.900 கோடி, வீண், அமலானது, ஜனாதிபதி ஆட்சி

மும்பை: 'மஹாராஷ்டிராவில் புதிய அரசு அமைவதற்கு வாய்ப்பு இல்லை' என கவர்னர் அறிக்கை அளித்ததை அடுத்து நேற்று ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் சட்டசபை தேர்தல் நடத்துவதற்காக செலவிடப்பட்ட 900 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ. 105 தொகுதிகளிலும்; அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. எதிர்க்கட்சி கூட்டணியில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளிலும்; காங்கிரஸ் 44 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை தொகுதிகளில் பா.ஜ. - சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றிருந்தாலும் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

முதல்வர் பதவியை சுழற்சி முறையில் தங்களுக்கு ஒதுக்கும்படியும் அமைச்சரவையில் 50 சதவீத ஒதுக்கீடு அளிக்கும்படியும் சிவசேனா பிடிவாதம் பிடித்தது. இதனால் தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களுக்கு பின்னரும் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

மகாராஷ்ட்ராவில் முதல்வர் பதவிக்காக பா.ஜ., சிவசேனா இடையே சண்டை உண்டானதால் அரசு அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மெஜாரிட்டி இல்லாததால் ஆட்சி அமைக்க விருப்பமில்லை என பா.ஜ. அறிவித்தது. சிவசேனா ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்து, கவர்னர் கோஷ்யாரியை சந்தித்தது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுக் கடிதம் இல்லாததால் சிவசேனாவின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் காங்கிரஸ், தேசியவாத காங். ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பதற்காக அந்த கட்சி தலைவர்களுடன் சிவசேனா தலைவர்கள் பேச்சு நடத்தினர். இதனால் ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் அரசு அமைக்க பா.ஜ.வுக்கு கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். சிவசேனாவுடன் நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து கவர்னரை சந்தித்த பா.ஜ. தலைவர்கள் 'ஆட்சி அமைக்கும் எண்ணம் எதுவும் எங்களுக்கு இல்லை' என தெரிவித்தனர்.

அடுத்ததாக இரண்டாவதாக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற சிவசேனாவுக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார். நேற்று முன் தினம் மாலை கவர்னரை சந்தித்த சிவசேனா தலைவர்கள் காங்கிரஸ், தேசியவாத காங்., கட்சிகளின் ஆதரவு கடிதம் கிடைக்காததால் கூடுதலாக இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டனர். அதை ஏற்க மறுத்த கவர்னர் மூன்றாவதாக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற தேசியவாத காங்கிரசுக்கு அழைப்பு விடுத்தார்.

இதையேற்று தேசியவாத காங். தலைவர்கள் கவர்னரை சந்தித்தனர். அவர்களிடம் ஆட்சி அமைக்க விருப்பம் உள்ளதா என்பதையும் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் கடிதத்தையும் நேற்றிரவு 8:30 மணிக்குள் ஒப்படைக்கும்படி கவர்னர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் தேசியவாத காங். தலைவர் சரத் பவார் நேற்று காலை தொலைபேசியில் பேசினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வேணுகோபால், அஹமது படேல், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை சரத் பவாருடன் பேச்சு நடத்துவதற்காக சோனியா மும்பைக்கு அனுப்பி வைத்தார். இவர்கள் மும்பை வந்து சேருவதற்குள் மஹாராஷ்டிரா அரசியலில் திருப்பம் ஏற்பட்டது. 'மஹாராஷ்டிராவில் அரசியல் சட்ட நடைமுறைப்படி புதிய மற்றும் நிலையான அரசு அமைவதற்கான சூழல் நிலவவில்லை என்பது தெளிவாக தெரிவதால் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாம்' என மத்திய அரசுக்கு அறிக்கை வாயிலாக கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி பரிந்துரை செய்தார்.

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி பிரேசில் சுற்றுப் பயணத்துக்கு புறப்படுவதற்கு முன் அவசரம் அவசரமாக மத்திய அமைச்சரவை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். இதில் மஹாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்வது என முடிவு எடுக்கப்பட்டு அதன் அறிக்கை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த பரிந்துரையை ஏற்று மஹாராஷ்டிராவில் சட்டசபையை முடக்கி வைப்பதற்கும் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று மாலை ஒப்புதல் அளித்தார். இதையடுத்து மஹாராஷ்டிராவில் நேற்று மாலை முதல் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது. கடந்த 20 நாட்களாக மஹாராஷ்டிரா அரசியலில் நிலவி வந்த பரபரப்பும் ஓய்ந்துள்ளது. இதற்கிடையே நேற்று மும்பை வந்த மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங். மூத்த தலைவர்கள் சிவசேனா ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிப்பது குறித்து தேசியவாத காங். தலைவர்களுடன் பேச்சு நடத்தினர்.

மஹாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலுக்காக மக்களின் வரிப் பணம் 900 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. ஓட்டு எண்ணிக்கை இயந்திரங்கள், ஓட்டளித்ததை உறுதி செய்யும் சீட்டு வழங்கும் இயந்திரங்கள் உள்ளிட்டவற்றுக்காக அதிக பணம் செலவிடப்பட்டது. கடந்த 2014ல் நடந்த சட்டசபை தேர்தலுக்கு 421 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. தற்போதைய தேர்தலுக்கு அதை விட இரண்டு மடங்கு அதிக பணம் செலவிடப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் சுய நலம் காரணமாகவும், பதவி வெறி காரணமாகவும் இந்த பணம் முழுவதும் வீணடிக்கப் பட்டுள்ளது. இது தவிர அரசு ஊழியர்கள் போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களின் உழைப்பும் வீணடிக்கப்பட்டு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


ஜாவடேகருக்கு கூடுதல் பொறுப்பு:

பா.ஜ.வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மத்திய அமைச்சரவையிலிருந்து சிவசேனா வெளியேறியது. மத்திய கனரக தொழில் துறை அமைச்சராக இருந்த சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் நேற்று முன்தினம் தன் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பிரதமர் மோடியின் பரிந்துரையை ஏற்று மத்திய சுற்றுச்சூழல் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சரான பா.ஜ.வைச் சேர்ந்த பிரகாஷ் ஜாவடேகருக்கு கூடுதலாக கனரக தொழில் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மாளிகை நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா வழக்கு:

மஹாராஷ்டிராவில் நடந்த பரபரப்பான அரசியல் திருப்பங்கள் பதவிக்காக ஆசைப்பட்ட சிவசேனா தலைவர்களுக்கு சரியான பாடத்தை புகட்டியுள்ளன. 105 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ.வுக்கு முதல்வர் பதவியை விட்டுத் தராமல் 56 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற தங்களுக்கு முதல்வர் பதவியை கேட்டு சிவசேனா தலைவர்கள் பிடிவாதம் பிடித்தனர்.

இவர்களது பதவி ஆசையை நன்றாக புரிந்த தேசியவாத காங்கிரசும், காங்கிரசும் சரியான நேரத்தில் 'ஆட்டம்' காட்டின. ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு கடிதத்தை சிவசேனாவுக்கு கொடுக்காமல் கடைசி வரை இழுத்தடித்தன. இதனால் சிவசேனாவால் ஆட்சியில் அமர முடியாமல் போனது. இதை சிவசேனா தலைவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. தற்போது ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட நிலையில் மத்திய அமைச்சரவையிலிருந்தும் அவசரப்பட்டு வெளியேறி 'வடை போச்சே' கதையாக பரிதாபமாக நிற்கின்றனர் சிவசேனா தலைவர்கள்.

இதற்கிடையே ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் 'ஆட்சி அமைப்பதற்கு தேவையான அவகாசத்தைக் கொடுக்க கவர்னர் தவறி விட்டார். அவரது முடிவு சட்டவிரோதமானது; பாரபட்சமானது. ஜனநாயக கடமையை நிறைவேற்றாமல் மத்திய அரசின் உத்தரவுக்கு ஏற்ப செயல்பட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியுள்ளார்; இதை ரத்து செய்ய வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவசர மனுவாக ஏற்று உடனடியாக விசாரிக்கும்படியும் சிவசேனா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த மனுவை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. இதையடுத்து இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
13-நவ-201922:42:15 IST Report Abuse
bal எத்தனையோ தடவை இது மாதிரி நடந்திருக்கிறது...இப்போ மட்டும் என்ன விழிப்புணர்வு.
Rate this:
Cancel
13-நவ-201922:25:16 IST Report Abuse
நக்கல் பிஜேபி ஆட்சி அமைக்கும் அல்லது கவர்னர் ஆட்சி..
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
13-நவ-201918:53:23 IST Report Abuse
Darmavan நாட்டில் சட்டம் சரியாக இல்லை .
Rate this:
13-நவ-201922:24:13 IST Report Abuse
நக்கல்தெரியும்.. பிஜேபி சரி இல்லாத சட்டங்களை மாற்றும், கொஞ்சம் பொறுமையா இருங்க.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X