புதுடில்லி: பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் சீனாவுக்கு, 'செக்' வைக்கும் வகையில், தென் அமெரிக்க நாடான பிரேசிலில் நடக்கும், 'பிரிக்ஸ்' மாநாட்டில், இந்தப் பிரச்னையை எழுப்ப, பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார்.
உலகின் மிக முக்கியமான பொருளாதார நாடுகளான, பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகியவை அடங்கியது, பிரிக்ஸ் அமைப்பு. இந்த ஐந்து நாடுகளும் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளாகும். உலகின் மொத்த மக்கள் தொகையில், 42 சதவீதம் பேர் இந்த நாடுகளில் உள்ளனர். இதைத் தவிர, ஜி.டி.பி., எனப்படும், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 23 சதவீதம் கொண்டவை.
11வது மாநாடு:
பொருளாதாரம் உட்பட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து, இந்த அமைப்பு ஆண்டுதோறும் சந்தித்து ஆலோசனை நடத்துகிறது. அதன்படி, 11வது பிரிக்ஸ் மாநாடு, தென் அமெரிக்க நாடான பிரேசிலில், இன்றும், நாளையும் நடக்கிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக, டில்லியில் இருந்து நேற்று புறப்பட்டார்.
இந்த மாநாட்டுக்கு இடையே, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோவையும் அவர் சந்திக்கிறார். அதைத் தவிர, சீன அதிபர் ஸீ ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் ஆகியோரையும் சந்தித்து, இரு தரப்பு உறவுகள் மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்து பேச உள்ளார்.
'புதுமையான எதிர்காலத்துக்கான பொருளாதார வளர்ச்சி' என்ற தலைப்பு, இந்த ஆண்டுக்கான மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. டிஜிட்டல் பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. இதைத் தவிர, பிரிக்ஸ் வர்த்தக அமைப்பின் சார்பில், பொருளாதார மாநாடும் நடத்தப்பட உள்ளது. மேலும், பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே உதவும் வகையில், புதிய வளர்ச்சி வங்கியை உருவாக்குவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
பிரிக்ஸ் மாநாட்டில் ஆறாவது முறையாக மோடி பங்கேற்கிறார். பிரேசில் புறப்படும் முன், இந்தப் பயணம் குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளதாவது: இந்த பிரிக்ஸ் மாநாடு, அதில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என, நம்புகிறேன்.
எதிர்பார்க்கிறேன்:
மேலும், ஒவ்வொரு நாடுகளுடனான உறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தும் என, உறுதியாக எதிர்பார்க்கிறேன். இந்த மாநாட்டின்போது, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகள் உள்ளிட்டவற்றில் எவ்வாறு இணைந்து செயல்படுவது என்பதற்கான திட்டம் உருவாக்கப்படும். இதைத் தவிர, டிஜிட்டல் பொருளாதாரம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. மிகவும் முக்கியமாக, உலகை அச்சுறுத்தும் பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்துவதில் எவ்வாறு இணைந்து செயல்படுவது என்பதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். இதை வலியுறுத்த உள்ளேன்.
பிரிக்ஸ் நாடுகளுடனான நம் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் மிகவும் முக்கியமானவை. அதே நேரத்தில் பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்துவதிலும் அதே ஒற்றுமை, ஒத்துழைப்பு ஏற்படும் என, நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
வாய் திறக்குமா சீனா?
நம் அண்டை நாடான பாக்., தொடர்ந்து பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது; இந்தியாவில் தாக்குதல் நடத்தும்படி துாண்டி வருகிறது. ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, இந்தியா - பாக்., இடையேயான உறவு மிகவும் மோசமடைந்துள்ளது. பாக்., பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் தீவிரமாக உள்ளது.
'பாக்., பயங்கரவாதி மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும்' என, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உட்பட பல நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தன. ஆனால், அப்போதெல்லாம் பாக்.,குக்கு ஆதரவாக, சீனா செயல்பட்டது. சீன அதிபர் ஸீ ஜின்பிங், சமீபத்தில், தமிழகத்தின் மாமல்லபுரம் வந்திருந்தார். அப்போதும், அவரிடம் பிரதமர் மோடி, பயங்கரவாத பிரச்னைகள் குறித்து பேசியதாக தெரிகிறது. ஆனால், அது தொடர்பாக ஜின்பிங் எந்த கருத்தையும் வெளியிடவில்லை.
சர்வதேச அமைப்புகளில் பேசும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், பயங்கரவாதத்தை தடுப்பது குறித்து பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. தற்போது பிரிக்ஸ் மாநாட்டிலும் இந்தப் பிரச்னையை எழுப்ப மோடி திட்டமிட்டுள்ளார். இனியாவது, சீனா வாயைத் திறக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE