சென்னை : மகாத்மா காந்தியடிகளின், 150வது பிறந்த நாளையொட்டி, துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, அமெரிக்காவில் சிறப்பு பதக்கம் வழங்கப்பட்டது.
துணை முதல்வர் பன்னீர்செல்வம், 10 நாள் அரசு பயணமாக, அமெரிக்கா சென்றுள்ளார்.நேற்று, அமெரிக்காவின் நெபர்வல்லியில் உள்ள, மூத்த குடிமகன்களுக்கான, 'மெட்ரோபாலிட்டன் ஏஷியா பேமிலி சர்வீசஸ்' மையம் சார்பில், காந்தியடிகள் பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது.
விழாவில், காந்தியடிகளின், 150வது பிறந்த நாளையொட்டி, துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, 'மகாத்மா காந்தி மெடலியன் ஆப் எக்ஸலன்ஸ்' பதக்கம் வழங்கப்பட்டது. பதக்கத்தை, 86 வயதான பிரதாப் சிங் வழங்கினார். துணை முதல்வரின் மகனும், தேனி எம்.பி.,யுமான ரவீந்திரநாத் குமாருக்கு, மகாத்மா காந்தி சக்ரா மற்றும் பாக்கெட் கடிகாரம், நினைவுப் பரிசாக வழங்கப் பட்டது. அதேபோல, சிகாகோ நகரில் உள்ள, இந்திய துாதரகத்தில் நடந்த கலந்துரையாடலில், துணை முதல்வர் பங்கேற்றார்.
தமிழகத்தில் தொழில் துவங்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து எடுத்துரைத்த அவர், தொழில் துவங்க தமிழகம் வருமாறு, முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.இந்நிகழ்ச்சியில், இந்திய துாதரக அதிகாரி சுதாகர் தலேலா, தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன், சிகாகோ தமிழ் தொழில் முனைவோர் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE