இந்த செய்தியை கேட்க
புதுடில்லி: கர்நாடகாவின் ம.ஜ.த. - காங்கிரசை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கர்நாடகாவில் காங்கிரஸ் - ம.ஜ.த. கூட்டணி அரசின் மீது ஏற்பட்ட அதிருப்தியால் இரு கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். அவர்களை அப்போதைய கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் ஜூலையில் தகுதி நீக்கம் செய்தார்.
சபாநாயகர் முடிவை எதிர்த்து 17 பேரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையில் இரு தொகுதிகளை தவிர மற்ற 15 சட்டசபை தொகுதிகளுக்கு அக். 21ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கான மனுத் தாக்கலும் துவங்கி ஐந்து நாட்கள் நடந்தது. இதை எதிர்த்து தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து இடைத்தேர்தலை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. ஆனால் டிச. 5ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுமென தேர்தல் ஆணையம் மீண்டும் அறிவித்தது.
இந்த நிலையில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கு மீதான இறுதி விசாரணை அக். 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்னிலையில் நடந்தது. பின் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா சஞ்சீவ் கஹானா கிருஷ்ண முராரி ஆகியோர் இன்று(நவ.,13) தீர்ப்பு வழங்கினர்.
நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்கள் தங்கள் கட்சி கொறடா உத்தரவை மீறியதால் அவர்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். அதனால் 17 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யும் சபாநாயகரின் உத்தரவு செல்லும். இதுபோன்ற வழக்குகளில் எம்எல்ஏக்கள் முதலில் உயர் நீதிமன்றத்தையே அணுகி இருக்க வேண்டும். அதேசமயம் அவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும். கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் வரை அவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது. அதுபோலவே இடைத் தேர்தலில் போட்டியிடும் எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றால் அவர்கள் அமைச்சர் உட்பட வேறு எந்த அரசு பதவியை வகிக்கவும் தடையில்லை. இது சபாநாயகரின் அதிகாரத்தின் கீழ் வராது.எனக்கூறினர்.
எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்ததை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததை தொடர்ந்து, வரும் டிச.,5ம் தேதி கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE