மதுரை: பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், முகிலனுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனை ஜாமின் அனுமதித்தது.
முகிலன், 'மன்மத வியூகத்தில்' மாட்டிக் கொண்டதாக, நீதிபதி கருத்து தெரிவித்தார். ஈரோடு, சென்னிமலையைச் சேர்ந்தவர் முகிலன், 53. ஸ்டெர்லைட் பிரச்னை தொடர்பாக, சென்னையில், பிப்., 15ல் பேட்டியளித்தவர் மாயமானார். ஜூலை, 6ல் திருப்பதியில் முகிலன் மீட்கப்பட்டார்.
கைது
ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, பாலியல் பலாத்காரம் செய்ததாக, கரூர், சி.பி.சி.ஐ.டி., போலீசார், முகிலனை கைது செய்தனர்.திருச்சி மத்திய சிறையில் உள்ள முகிலன், 'அரசியல் உள்நோக்கில் பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஜாமின் அனுமதிக்க வேண்டும்' என, உயர் நீதிமன்றக் கிளையில் மனு செய்தார். மேலும், பிப்., 15 முதல் ஜூலை, 6 வரை எங்கு இருந்தேன் என்பது குறித்து, முகிலன் தாக்கல் செய்த மனு:கடத்தல்பிப்., 15ல், சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு ரயிலில் புறப்பட்டேன். ரயில் செங்கல்பட்டு வந்தபோது, இரவு துாங்கி விட்டேன். என் கண்கள் துணியால் கட்டப்பட்டு, காரில், இருவரால் கடத்தப்பட்டேன்.அவர்கள், 'ஸ்டெர்லைட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்' என மிரட்டி, தாக்கினர். மயக்க நிலையில், லாரியில் கொண்டு வந்து ஒரு கிராம மரத்தடியில் கிடத்திச் சென்றனர். நாடோடிகள் மருத்துவ உதவிகள் செய்தனர்.தொடர்ந்து, ஜார்க்கண்ட் உட்பட பல இடங்களுக்கு சென்றேன். திருப்பதி ரயில்வே ஸ்டேஷன் வந்தபோது, ஆந்திராபோலீசார், என்னை தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.இவ்வாறு, மனுவில் கூறியிருந்தார்.
நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதன் உத்தரவு:மனுதாரர் முகிலனுக்கு திருமணமாகி, குழந்தை உள்ளது புகார்தாரருக்கு தெரியும். அப்பெண், கிராமத்து பெண் அல்ல. அவருக்கு வயது, 37; உயர் தகுதிகள் உள்ளவர். அப்பெண், ஐ.டி., துறையில், சிங்கப்பூரில் வேலை செய்துள்ளார்.சக்கர வியூகம்அவரது சம்மதத்துடனே மனுதாரருடன் உடல் ரீதியான உறவு இருந்துள்ளது. 2017ல் இருந்து உறவு இருந்தும், 2019ல் புகார் அளித்தது கேள்விக்குள்ளாகிறது.மனுதாரர், ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம், ஜல்லிக்கட்டு போராட்டம் உட்பட பல போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். மகாபாரத போரில், அபிமன்யு சக்கர வியூகத்தில் மாட்டிக் கொண்டது போல், மனுதாரர், 'மன்மத வியூக'த்தில் மாட்டிக் கொண்டுள்ளார்.அவர் மாயமான காலத்தில் எங்கு இருந்தார் என்பது குறித்து, விவரித்து ஒரு கதையை தெரிவித்துள்ளார். அது, 'காது குத்துவது' போல் உள்ளது. மனுதாரரை தொடர்ந்து சிறையில் வைப்பதால், எந்த பயனும் ஏற்படப் போவதில்லை.வழக்கில் விசாரணை முடிந்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரருக்கு ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. அவர், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, கரூர், சி.பி.சி.ஐ.டி., போலீசில் காலை, 10:30 மணிக்கு ஆஜராக வேண்டும். கரூர் நீதிமன்றத்தில் ஜாமின் உத்தரவாதம் தாக்கல் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றம், விசாரணையை விரைவில் முடிக்க பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE