புதுடில்லி: முஸ்லிம்களில் நடைமுறையில் இருந்த, 'முத்தலாக்' எனப்படும் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெறுவதை குற்றமாக்கும் மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் பதிலளிக்க, மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
'முத்தலாக் செல்லாது' என, உச்ச நீதிமன்றம், 2017, ஆக.,ல் தீர்ப்பு அளித்தது. ஆனாலும், முஸ்லிம்களில் இந்த நடைமுறை தொடர்ந்தது. அதையடுத்து, முத்தலாக் கூறி விவாகரத்து பெறுவதை குற்றமாக்கும், முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டம், பார்லி.,யில் நிறைவேறியது.

இந்த சட்டத்தின்படி, மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெற்றால், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப் படும். இந்த சட்டத்தை எதிர்த்து, பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு இதை விசாரித்து வருகிறது. இந்த நிலையில், ஷீராத் உன்நபி அகாதெமி என்ற அமைப்பு, புதிய மனுவை தாக்கல் செய்தது.
இதற்கு, அமர்வு கூறியதாவது: ஒரு பிரச்னை குறித்து எத்தனை வழக்குகள் தாக்கல் செய்யப்படும். இதுவரை, 20க்கும் மேற்பட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஒருவேளை, 100 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால், 100 ஆண்டுகள் இந்த வழக்கை விசாரிக்க வேண்டுமா. இவ்வாறு, அமர்வு கேள்வி எழுப்பியது. இந்நிலையில், 'முத்தலாக் சட்டம், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது' என, அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் வாரியம் தொடர்ந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய, மத்திய அரசுக்கு, அமர்வு உத்தரவிட்டுள்ளது.