புதுடில்லி : 'சட்டத்தில் இருந்து யாருமே விதிவிலக்கல்ல' என்பதை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளது. 'ஆர்.டி.ஐ., எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகமும் வரும்' என, தீர்ப்பு அளித்துள்ளது.
அரசு நிர்வாகம் உட்பட பல்வேறு துறைகள் உள்ளிட்டவை தொடர்பான தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஆர்.டி.ஐ. எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005ல் அமல்படுத்தப்பட்டது. ஆனால் இந்த சட்டத்தில் சில விலக்குகளும் உள்ளன. அவ்வாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் தொடர்பான தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகத்தையும் சேர்க்கக் கோரி எஸ்.சி.அகர்வால் என்ற சமூக ஆர்வலர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம் 2010ல் அளித்த தீர்ப்பில் 'ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்' என தெரிவித்தது. இந்தத் தீர்ப்பு அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி. பாலகிருஷ்ணனுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. ஆர்.டி.ஐ. சட்டத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகத்தை சேர்க்க அவர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
உச்ச நீதிமன்றத்தின் எதிர்ப்பை மீறி அப்போது டில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.ஷா, நீதிபதிகள் விக்ரம்ஜித் சென், எஸ்.முரளிதர் அமர்வு தீர்ப்பை வழங்கியது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் மற்றும் உச்ச நீதிமன்ற மத்திய தகவல் அதிகாரி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்தனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய்.சந்திரசூட், தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது.
நவ., 17ல் ஓய்வு பெறும் நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பல்வேறு வழக்குகளில் தீர்ப்பு அளித்து வருகிறார். அதன்படி இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு அளித்துள்ளனர். அதே நேரத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஒரு தீர்ப்பை அளித்தனர். நீதிபதிகள் ரமணா மற்றும் சந்திரசூட் தனித்தனியாக தீர்ப்பு எழுதியுள்ளனர்.
தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தலைமை நீதிபதி அலுவலகம் ஒரு பொது அமைப்பு. அதனால் ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் இது வரும். அதே நேரத்தில் ஆர்.டி.ஐ. சட்டத்தை ஒரு கண்காணிக்கும் கருவியாக பயன்படுத்தக் கூடாது. வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் என்பதை ஏற்கிறோம்; அதே நேரத்தில் நீதித்துறை சுதந்திரமும் முக்கியம். அதில் சமரசம் செய்ய முடியாது.
நியமனம் உள்ளிட்டவற்றில் 'கொலீஜியம்' எனப்படும் நீதிபதிகள் குழு எடுக்கும் முடிவுகளில் நியமிக்கப்படும் நீதிபதியின் பெயரை மட்டுமே ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் வெளிப்படுத்த முடியும்; அவரைத் தேர்வு செய்ததற்கான காரணத்தை அளிக்க முடியாது. அரசியலமைப்பு பணியில் உள்ளோம் என்பதால் நீதித்துறைக்கு முழு பாதுகாப்பையும் அளிக்க முடியாது என்பதை ஏற்கிறோம்.
அதே நேரத்தில் தனிநபர் சுதந்திரத்துக்கான உரிமையையும் வெளிப்படை தன்மையையும் சமமாக பார்க்க வேண்டும். சட்டத்தில் இருந்து யாருமே விதிவிலக்கல்ல. இவ்வாறு அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்புக்கு ஆர்.டி.ஐ. ஆர்வலர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
வறுத்தெடுத்த வழக்கறிஞர்
வழக்கை தொடர்ந்துள்ள எஸ்.சி.அகர்வால் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் ஆஜரானார். வழக்கின் விசாரணையின்போது அவர் வாதிட்டதாவது: தனக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது; ஆனால் வேறு வழியில்லாமல் இந்த விசாரணை நடைபெறுகிறது. ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் இடம் பெற நீதித் துறை மறுத்து வருவது துரதிருஷ்டவசமானது; வருத்தமளிக்கிறது.
நீதிபதிகள் என்ன வேறொரு உலகத்திலா இருக்கின்றனர்? பல்வேறு மாநில அரசுகள் மற்றும் அமைப்புகள் தொடர்பான வழக்குகளில் 'அவை வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும்' என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் தனக்கென்று வரும்போது அதை ஏற்க மறுப்பது வேடிக்கை.
ஆர்.டி.ஐ. சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள பல்வேறு விலக்குகளுக்கு இந்த நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நீதிமன்றச் சுதந்திரம் என்று கூறுகிறீர்கள். அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது என்பதற்காக தேசிய நீதி பொறுப்புடைமை கமிஷன் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அதற்காக நீதித்துறை என்பது பொதுமக்களின் கண்காணிப்புக்கு அப்பாற்பட்டதல்ல. இவ்வாறு அவர் வாதிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE