மும்பை : 'மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து காங்கிரஸ் தலைவர்களுடனான பேச்சு சரியான திசையில் செல்கிறது; உரிய நேரத்தில் முடிவு அறிவிக்கப்படும்' என அக்கட்சி தலைவர்களை சந்தித்து பேசிய பின் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று தெரிவித்தார்.
மஹாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ. 105 தொகுதிகளிலும்; அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. எதிர்க்கட்சி கூட்டணியில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளிலும்; காங்கிரஸ் 44 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை தொகுதிகளில் பா.ஜ. - - சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றிருந்தாலும் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. முதல்வர் பதவியை சுழற்சி முறையில் தங்களுக்கு ஒதுக்கும்படியும் அமைச்சரவையில் 50 சதவீத ஒதுக்கீடு அளிக்கும்படியும் சிவசேனா பிடிவாதம் பிடித்தது.
இதனால் தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களுக்குப் பின்னரும் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. தனிப் பெரும் கட்சியான பா.ஜ.வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தும் அக்கட்சி மறுத்து விட்டது. இதையடுத்து சிவசேனா தேசியவாத காங். கட்சிகளிடம் ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார். ஆனால் அக்கட்சிகளின் தலைவர்கள் கூடுதல் கால அவகாசம் கேட்டதால் கவர்னர் மறுத்தார்.
இந்நிலையில் 'மஹாராஷ்டிராவில் அரசியல் சட்ட நடைமுறைப்படி புதிய மற்றும் நிலையான அரசு அமைவதற்கான சூழல் நிலவவில்லை என்பது தெளிவாக தெரிவதால் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாம்' என மத்திய அரசுக்கு அறிக்கை வாயிலாக கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி பரிந்துரை செய்தார்.
இதையடுத்து மஹாராஷ்டிராவில் நேற்று முன் தினம் மாலை முதல் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது. இதற்கிடையே காங். மூத்த தலைவர்கள் அகமது படேல் கே.சி.வேணுகோபால் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் நேற்று முன் தினம் மும்பை வந்தனர். சிவசேனா ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிப்பது குறித்து தேசியவாத காங். தலைவர்களுடன் அவர்கள் பேச்சு நடத்தினர். இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநில காங். தலைவர் பாலாசாஹேப் தோரட்டை சிவசேனா தலைவர் உத்தாவ் தாக்கரே நேற்று சந்தித்து பேசினார்.
மும்பையின் புறநகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் நடந்த இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது. சந்திப்புக்கு பின் செய்தியாளர் களிடம் பேசிய உத்தவ் தாக்கரே கூறுகையில் ''எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கிறது. ஆட்சி அமைப்பதற்கான பேச்சு சரியான திசையில் செல்கிறது. உரிய நேரத்தில் முடிவு அறிவிக்கப்படும்'' என்றார்.
மஹாராஷ்டிரா காங். தலைவர் பாலாசாஹேப் தோரட் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. இந்த சந்திப்பே ஆக்கப்பூர்வமான செய்தியை சொல்கிறது. தேசியவாத காங். தலைவர்களுட மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான காங். மூத்த தலைவர்கள் நேற்று முன் தினம் நடத்திய பேச்சின் தொடர்ச்சியாக இந்த சந்திப்பு நிகழ்ந்தது. காங். - தேசியவாத காங். இடையே சில விவகாரங்களில் சுமுக தீர்வும் தெளிவும் எட்டப்பட வேண்டி இருக்கிறது. அதன் பின் தேவைபட்டால் சிவசேனா தலைவர்களை தொடர்பு கொண்டு பேசுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
கோர்ட்டை அணுக தயக்கம்!
மஹாராஷ்டிராவில் ஜனா திபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா சார்பில் நேற்று முன் தினம் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் 'ஆட்சி அமைப்பதற்கு தேவையான அவகாசத்தைக் கொடுக்க கவர்னர் தவறி விட்டார். அவரது முடிவு சட்டவிரோதமானது; பாரபட்சமானது. ஜனநாயக கடமையை நிறைவேற்றாமல் மத்திய அரசின் உத்தரவுக்கு ஏற்ப செயல்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது;
இதை ரத்து செய்ய வேண்டும்' என கூறப்பட்டது. இந்த மனுவை அவசர மனுவாக ஏற்று உடனடியாக விசாரிக்கும்படியும் சிவசேனா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த மனுவை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நேற்று மீண்டும் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்ய சிவசேனா முடிவு செய்தது. ஆனால் கடைசி நேரத்தில் இந்த மனு தாக்கல் செய்யப் படவில்லை. 'புதிய மனு தாக்கல் செய்யப்படுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை' என சிவசேனா தரப்பு வழக்கறிஞர் சுனில் பெர்னான்டஸ் நேற்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு சென்றால் உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்பதால் காங். - தேசியவாத காங். உடனான கூட்டணி முடிவாகும் வரை அமைதிகாக்க சிவசேனா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
டில்லியில் பேச்சு!
சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பது தொடர்பாக குறைந்த பட்ச செயல்திட்டம் உள்ளிட்ட கொள்கை முடிவுகள் எடுப்பது குறித்து காங். மூத்த தலைவர்களுடன் தேசியவாத காங். தலைவர் சரத் பவார், பிரபுல் படேல், சுனில் தாட்கரே ஆகியோர் டில்லியில் சந்தித்து அடுத்த நான்கு நாட்களுக்கு பேச்சு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங். சார்பில் இந்த பேச்சில் கலந்து கொள்ள இருக்கும் தலைவர்களை அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா முடிவு செய்வார் என கூறப் படுகிறது.