மஹாராஷ்டிராவில் ஜனா திபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா சார்பில் நேற்று முன் தினம் மனு தாக்கல்செய்யப்பட்டது.
அதில் 'ஆட்சி அமைப்பதற்கு தேவையான அவகாசத்தைக் கொடுக்க கவர்னர் தவறி விட்டார். அவரது முடிவு சட்டவிரோதமானது; பாரபட்சமானது. ஜனநாயக கடமையை நிறைவேற்றாமல் மத்திய அரசின் உத்தரவுக்கு ஏற்ப செயல்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது; இதை ரத்து செய்ய வேண்டும்' என கூறப்பட்டது.இந்த மனுவை அவசர மனுவாக ஏற்று உடனடியாக விசாரிக்கும்படியும் சிவசேனா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த மனுவை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நேற்று மீண்டும் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்ய சிவசேனா முடிவு செய்தது. ஆனால் கடைசி நேரத்தில் இந்த மனு தாக்கல் செய்யப் படவில்லை. 'புதிய மனு தாக்கல் செய்யப்படுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை' என சிவசேனா தரப்பு வழக்கறிஞர் சுனில் பெர்னான்டஸ் நேற்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு சென்றால் உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்பதால் காங். - தேசியவாத காங். உடனான கூட்டணி முடிவாகும் வரை அமைதிகாக்க சிவசேனா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
டில்லியில் பேச்சு!
சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பது தொடர்பாக குறைந்த பட்ச செயல்திட்டம் உள்ளிட்ட கொள்கை முடிவுகள் எடுப்பது குறித்து காங். மூத்த தலைவர்களுடன்தேசியவாத காங். தலைவர் சரத் பவார்,பிரபுல் படேல், சுனில் தாட்கரே ஆகியோர் டில்லியில் சந்தித்து அடுத்த நான்கு நாட்களுக்கு பேச்சு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங். சார்பில் இந்த பேச்சில் கலந்து கொள்ள இருக்கும் தலைவர்களை அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா முடிவு செய்வார் என கூறப் படுகிறது.