பிரேசிலியா: சீனாவுடனான இந்திய உறவானது புது பாதையிலும், புது உத்வேகத்துடன் செல்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி பிரேசில் சென்றுள்ளார். பிரேசிலியா நகரில், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தார். கடந்த அக்., 11 - 12 தேதிகளில், சென்னையில் இரு தலைவர்களும் சந்தித்து பேசிய நிலையில், மீண்டும் மோடி - ஜின்பிங் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இந்த சந்திப்பின் போது, இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடந்தது.

இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடி கூறுகையில், மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த நாட்களை பின்னோக்கி பார்த்தால், உங்களை முதன்முறையாக பிரேசிலில் தான் சந்தித்தேன். அதன் முதல் நமது பயணம் தொடர்கிறது. தெரியாத நபர்களுக்கு இடையிலான பயணம், தற்போது நெருங்கிய நட்பாக வளர்ந்தள்ளது. பல அமைப்புகள் கூட்டங்களில் சந்தித்துள்ளோம். எனது சொந்த மாநிலத்திற்கு வந்துள்ளீர்கள். என்னை உங்களது சொந்த கிராமத்திற்கு அழைத்து சென்றீர்கள். வூஹான் நகரில் வந்து என்னை வரவேற்றீர்கள். கடந்த 5 ஆண்டுகளில், இரு நாடுகளுக்கு இடையிலான நட்பு நம்பிக்கைக்குரியதாக மாறியுள்ளது. நீங்கள் கூறியபடி, சென்னையில் நடந்த சந்திப்பானது, நமது பயணத்தில் புது பாதையையும், புது சக்தியையும் அளித்துள்ளது. எந்த திட்டமும் இல்லாமல், இரு தரப்பு பிரச்னை, சர்வதேச நிலவரம் ஆகியவை குறித்து விவாதித்துள்ளோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.