கவனமாக இருங்கள்: ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் அட்வைஸ்| Dinamalar

கவனமாக இருங்கள்: ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் அட்வைஸ்

Updated : நவ 15, 2019 | Added : நவ 14, 2019 | கருத்துகள் (72)
ரபேல், ராகுல் காந்தி,ராகுல், உச்சநீதிமன்றம், சுப்ரீம் கோர்ட், அறிவுரை, காங்கிரஸ், காங்.,  Rafale, rahul, rahul gandhi, supreme court, advice, congress, cong,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: நீதிமன்றம் அளித்த தீர்ப்பை திரித்து, காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசியதாக தொடரப்பட்ட அவதுாறு வழக்கை முடித்து வைத்த உச்ச நீதிமன்றம், 'பொறுப்பான பதவியில் இருப்பவர்கள், எதிர்காலத்தில், மிகவும் கவனத்துடன் பேச வேண்டும். ஒரு விவகாரத்தை பற்றிய கருத்து தெரிவிக்கும்போது, உண்மை நிலையை ஆராயாமல் பேசுவது துரதிர்ஷ்டவசமானது' என, அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளது.ரபேல் ஒப்பந்தம் தொடர்பான மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது. அப்போது, 'ராணுவ அமைச்சகத்தில் இருந்து திருடப் பட்ட ஆவணங்கள், ஆதாரங்களாக கொடுக்கப்பட்டுள்ளன. அதை ஏற்கக் கூடாது' என, மத்திய அரசு வாதிட்டது. இந்தாண்டு, ஏப்., 10ல் நடந்த இந்த வாதத்தின்போது, மத்திய அரசின் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்தது. அப்போது, பிரதமர் நரேந்திர மோடியை குறிக்கும் வகையில், இந்த தீர்ப்பு குறித்து, காங்., தலைவராக இருந்த ராகுல் கருத்து தெரிவித்தார். 'சோக்கிதார் எனப்படும் காவலாளி என்று கூறிக் கொள்பவர்கள் திருடர்கள் என்பதை உச்ச நீதிமன்றமே உறுதி செய்துவிட்டது' என, அவர் கூறினார்.அதையடுத்து, ராகுல் மீது, பா.ஜ.,வைச் சேர்ந்த, மீனாட்சி லேகி, அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார்.'நீதிமன்றம் கூறாததை, நீதிமன்றம் கூறியதுபோல் கருத்து தெரிவித்துள்ளது, நீதிமன்ற அவமதிப்பு' என அவர் வழக்கு தொடர்ந்தார். 'மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது வழக்கை சந்திக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் கூறியது.
தன் கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக, ராகுல் கூறியிருந்தார். 'ராகுல் வருத்தம் மட்டுமே தெரிவித்துள்ளார். அதனால் அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர வேண்டும்' என, மீனாட்சி லேகி தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எம்.கே.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று(நவ.,14) தீர்ப்பளித்தது. நீதிபதிகள் அளித்த தீர்ப்பு: உச்ச நீதிமன்றம் கூறாத ஒரு வார்த்தையை பயன்படுத்தி, பிரதமர் மோடியை ராகுல் விமர்சித்தது, கண்டிக்கத்தக்கது. ஒருமுறை மட்டும் கூறவில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட முறை, ராகுல், இவ்வாறு கூறியுள்ளார். அரசியல் பிரச்னைகளுக்குள், நீதிமன்றங்களை இழுப்பது சரியல்ல. உண்மைக்குப் புறம்பாக, இது போன்ற சொற்களைப் பேசியதை, ராகுல் தவிர்த்திருக்க வேண்டும்; கவனமாக இருந்திருக்க வேண்டும். ராகுலுக்கு எதிராக தொடரப்பட்ட அவதுாறு வழக்கு, முடித்து வைக்கப்படுகிறது. பொறுப்பான பதவியில் இருப்பவர்கள், எதிர்காலத்தில், மிகவும் கவனத்துடன் பேச வேண்டும். ஒரு விவகாரத்தை பற்றிய கருத்து தெரிவிக்கும்போது, உண்மை நிலையை ஆராயாமல் பேசுவது துரதிர்ஷ்டவசமானது. இவ்வாறு, நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X