சென்னை: தேர்தலுக்காக விருப்ப மனு அளிப்பவர்களிடம் கட்டணமாக வசூலிக்கும் பணத்தின் மூலம் கட்சிகள் பல கோடிகளை அள்ளுகின்றன.
தேர்தல் அறிவிப்பு வந்தாலே, வாக்காளர்களை விட, கட்சிகள் தான் அதிக குஷியாகின்றன. வெற்றி, தோல்வி ஒருபுறம் இருந்தாலும், தேர்தலை வைத்து விருப்ப மனு என்ற பேரில் கட்சி நிர்வாகிகளிடம் வசூலிக்கும் பணத்தில் பல கோடிகளை அள்ளுகின்றனர்.
விருப்ப மனுவின் கட்டணமாக ரூ.100க்குள் இருந்தாலும் அவர்கள் விரும்பும் பதவிக்கு செலுத்தும் தொகை ஆயிரங்களில் உள்ளன. அதாவது, தற்போது அறிவிக்கப்பட உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு இப்போதிருந்தே கட்சிகள் விருப்பமனு பெற தொடங்கிவிட்டன.

இதில், மாநகராட்சி மேயர் பதவிக்கு ரூ. 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையும், நகர்மன்ற தலைவர் பதவிக்கு ரூ.10,000 முதல் 25 ஆயிரம் வரையும் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு பதவிகளுக்கும் கட்டணம் வசூலிக்கின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள நுாற்றுக்கணக்கான உள்ளாட்சி அமைப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களிடம் இருந்து மொத்தமாக கோடி கணக்கில் அள்ளுகின்றன. இத்தனை பேரிடம் கட்டணம் பெற்றாலும், குறிப்பிட்ட சிலருக்கே வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

மற்றவர்களுக்கு அவர்கள் செலுத்திய கட்டணம் அவ்வளவு தான். சிலருக்கு மட்டும் பணம் திருப்பி தரப்படுவதாக கூறப்படுகிறது. இந்த வசூல் வேட்டை உள்ளாட்சி மட்டுமல்ல, சட்டசபை, மக்களவை தேர்தல்களில் பதவிக்கான கட்டணம் பல மடங்கு அதிகம். இதன்மூலம் கிடைக்கும் பணத்தை கட்சியின் தேர்தல் செலவிற்கு பயன்படுத்துகிறார்களா அல்லது அவர்களின் செலவிற்கு ஒதுக்கிறார்களா என்பது விடைத்தெரியாத கேள்வி.