இந்த செய்தியை கேட்க
இஸ்லாமாபாத் : பயங்கரவாதிகள் தான் பாக்.,ன் ஹீரோ எனவும், இந்திய ராணுவத்திற்க எதிராக சண்டையிட காஷ்மீர் மக்களுக்கு தாங்கள் பயிற்சி அளிப்பதாகவும் பாக்., முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார்.

முஷாரப் அளித்த பேட்டியில், "இந்திய ராணுவத்திற்கு எதிராக போரிட காஷ்மீரை சேர்ந்தவர்களுக்கு முஜாஹிதீன் அமைப்பினரை போன்று பயிற்சி அளித்தோம். பயங்கரவாதிகள், பாக்.,ன் ஹீரோக்கள். ஒசாமா பின்லேடன், அய்மான் அல் ஜவாஹிரி, ஜலாலுதீன் ஹக்கானி போன்றோரும் பாக்.,ன் ஹீரோக்கள்.
காஷ்மீரில் இருந்து பாக்.,க்கு வருவோருக்கு ஹீரோவுக்கு வழங்கப்படுவது போன்ற வரவேற்பு அளிக்கப்படும். அவர்களுக்கு பயிற்சி அளித்து, பயன்படுத்திக் கொண்டோம். அவர்களுக்கு ஆதரவும் அளித்தோம். அவர்களை முஜாஹின்களை போன்று கருதி, இந்திய ராணுவத்துடன் மோத வைப்போம். பிறகு லக்ஷர் இ தொய்பா போன்ற பெரிய பயங்கரவாத அமைப்புகளுக்கு அவர்களை அனுப்புவோம்.

1979ம் ஆண்டு ஆப்கானில் அறிமுகம் செய்யப்பட்ட மத ரீதியிலான பயங்கரவாதம், பின் பாக்.,லும் , சோவியத் நாடுகளிலும் பரவியது. உலகம் முழுவதிலும் இருந்து முஜாஹிதீன்களை அழைத்து வந்து, நாங்கள் பயிற்சி அளித்துள்ளோம். அவர்களுக்கு ஆயுத சப்ளையும் செய்துள்ளோம்.
தாலிபன்களை போன்ற பயிற்சிகளும் அவர்களுக்கு அளித்துள்ளோம். அவர்கள் எங்களின் ஹீரோக்கள். பிறகு உலகின் சூழல் மாறியது. அவர்களை வேறுவிதமான பார்வைகளை கொண்டு பார்க்க துவங்கினர். அதனால் எங்களின் ஹீரோக்கள் வில்லன்களாக மாறினர்". இவ்வாறு முஷாரப் தெரிவித்துள்ளார்.
முஷாரப்பின் இந்த பேட்டியை பாக்., அரசியல்வாதியான பர்ஹத்துல்லா பாபர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆனால் முஷாரப் இந்த பேட்டியை எந்த தேதியில் அளித்தார் என்பது பற்றி எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை.