சென்னை: 'மனைவியை சந்திக்க முருகனுக்கு உரிமை உள்ளது; அதேநேரத்தில், வேறு பிளாக்குக்கு மாற்றிய முடிவில் குறுக்கிட முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், வேலுார் சிறையில் உள்ளார். இவரது உறவினரான தேன்மொழி தாக்கல் செய்த மனு:சிறையில் இருக்கும் முருகனை, ௧௫ நாட்களுக்கு ஒரு முறை, அவரது மனைவி நளினி சந்திக்க அனுமதி உள்ளது. தனிமை சிறையில் முருகனை வைத்துள்ளனர். அதிலிருந்து, முருகனை மாற்ற வேண்டும். மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரை சந்திக்க, அவரை அனுமதிக்க வேண்டும். உண்ணாவிரதம் இருக்கும் முருகனுக்கு, மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டீக்காராமன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. அரசு தரப்பில், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், ''தடை செய்யப்பட்ட பொருட்கள், முருகனின் அறையில் இருந்து கைப்பற்றப்பட்டன. தனிமை சிறையில், அவரை அடைக்கவில்லை,'' என்றார்.
இருதரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:சிறை விதிகளின்படி, உரிய விசாரணை நடத்தப்படவில்லை. மனைவியை சந்திக்க முருகன் விரும்புகிறார். அவரும் சிறையில் தான் உள்ளார். மூன்று மாதங்கள் யாரையும் சந்திக்கக் கூடாது என்பதை, ஏற்க முடியாது. முருகனுக்கு இருக்கும் சலுகையை அனுபவிக்க, உரிமை உள்ளது.பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக, அவரை வேறு பிளாக்குக்கு மாற்றுவது என, சிறை நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக கூறுவதை, நாங்கள் ஏற்கிறோம். அந்த பிளாக்கில், முருகன் மட்டுமே இல்லை; 15 பேர் உள்ளனர். மேலும், அங்கு அடிப்படை வசதிகளும் உள்ளன. சிறை நிர்வாகத்தின் முடிவில் குறுக்கிட விரும்பவில்லை.எதிர்காலத்தில், முருகனின் நடத்தை மற்றும் நடவடிக்கையை பொறுத்து, நான்கு மாதங்களுக்கு பின், சிறை அதிகாரிகள் சட்டப்படி மறுஆய்வு செய்வர். உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டாம் என, முருகனிடம் அறிவுறுத்துவதாக, அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். அதனால், மருத்துவ சிகிச்சை கோருவது அவசியமற்றது.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE