ரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நற்சான்று| Dinamalar

'ரபேல்' ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நற்சான்று

Updated : நவ 16, 2019 | Added : நவ 14, 2019 | கருத்துகள் (15)
rafale, supreme court, verdict, ரபேல், ஒப்பந்தம், முறைகேடு, நடக்கவில்லை, மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட், நற்சான்று, தினமலர், dinamalar

புதுடில்லி: 'பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 'ரபேல்' போர் விமானம் வாங்கியதில் முறைகேடில் ஈடுபட்டதாகக் கூறப்படும் புகாரில், எந்த முகாந்திரமும் இல்லை. ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, எப்.ஐ.ஆர்., பதிவு செய்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களிலும், எந்த முகாந்திரமும் இல்லை' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்புக்காக, ஐரோப்பிய நாடான பிரான்சின், 'டசால்ட்' நிறுவனத்திடமிருந்து, அதி நவீன ரபேல் போர் விமானங்களை வாங்க, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான திட்டங்களை வகுத்தது. அப்போது, மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார். ஆனால், இதற்கான ஒப்பந்தம் தொடர்பாக எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்றதும், முந்தைய முயற்சி கைவிடப்பட்டு, 2017ல், டசால்ட் நிறுவனத்திடமிருந்து, 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், 36 விமானங்களை வாங்க, ஒப்பந்தம் கையெழுத்தானது.


தீர்ப்பு:

விமானத்தின் உதிரி பாகங்களை தயாரிக்க, அனில் அம்பானியின், 'ரிலையன்ஸ்' நிறுவனத்துடன், டசால்ட் நிறுவனம் இணைந்து செயல்படவும், மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. 'காங்., ஆட்சியின்போது, ஒரு விமானத்தை, 526 கோடி ரூபாய்க்கு வாங்க, விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், பா.ஜ., அரசு செய்துள்ள ஒப்பந்தத்தில், ஒரு விமானத்தின் விலை, 1,570 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என, குற்றம் சாட்டப்பட்டது. 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல், டி.ஆர்.டி.ஓ., எனப்படும், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை புறக்கணித்து, முன் அனுபவம் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு, விமான உதிரி பாகங்களை தயாரிக்க, 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை அளித்ததிலும் முறைகேடு உள்ளது' என்றும், எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

மத்திய அரசின் ஒப்பந்தத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், எம்.எல்.சர்மா என்ற வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார். அதில், 'ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதால், நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும்' என, தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோரும், 'ஒப்பந்தம் தொடர்பாக, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, தங்கள் மனுவில் தெரிவித்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்தாண்டு டிசம்பரில் தீர்ப்பளித்தது.

தீர்ப்பில், 'ரபேல் விமானம் வாங்குவதற்கான மத்திய அரசின் கொள்கை முடிவு சரியானது தான். ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை' என, கூறப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து, முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஷோரி, யஷ்வந்த் சின்கா, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், வினீத், ஆம் ஆத்மியைச் சேர்ந்த சஞ்சய் சிங் ஆகியோர், சீராய்வு மனு தாக்கல் செய்தனர். தங்கள் மனுவில், 'ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து, எப்.ஐ.ஆர்., பதிவு செய்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை, கடந்த மே, 10ல் முடிவடைந்தது. நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில், நேற்று தீர்ப்பளித்தது. நீதிபதிகள் அளித்த தீர்ப்பு: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 'ரபேல்' போர் விமானம் வாங்கியதில் முறைகேடில் ஈடுபட்டதாகக் கூறப்படும் புகாரில், எந்த முகாந்திரமும் இல்லை. ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, எப்.ஐ.ஆர்., பதிவு செய்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களிலும், எந்த முகாந்திரமும் இல்லை.


அனுமதி:

இந்த வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கு பொருத்தமான கோரிக்கை எதுவும், இந்த மனுக்களில் இல்லை; அதற்கான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை. இது தொடர்பாக, 2018ல் அளிக்கப்பட்ட தீர்ப்பிலேயே தெளிவாக கூறப்பட்டு விட்டது. எனவே, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. கடந்தாண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பில், இந்த வழக்கில், 'என்ன செய்திருக்க வேண்டும்; என்ன செய்ய வேண்டும்' என்பது தொடர்பாக கூறப்பட்ட விஷயங்களில் சில குழப்பங்கள் உள்ளன. அதை திருத்துவதற்கு, நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது.

ரபேல் தொடர்பான ஒப்பந்தம், தற்போதைய அரசில் மட்டுமல்லாமல், அதற்கு முந்தைய அரசிலும் நிலுவையில் இருந்தது. அப்போதெல்லாம், யாருமே, ரபேல் விமானங்களுக்கான தேவை அல்லது அவசியம் குறித்து கேள்வி எழுப்பியது இல்லை. எங்கள் தீர்ப்பில், விமானம் வாங்குவதற்கான முடிவுகளை எடுக்கும் நடைமுறை, விலை, மொத்த தொகை ஆகிய விஷயங்களை மட்டுமே, அதுவும் குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்ட விஷயங்களையே ஆய்வு செய்தோம். விமானம் எப்படி பறக்கிறது, அதற்கான தொழில்நுட்பம் போன்ற விஷயங்களை எல்லாம், நாங்கள் அலசவில்லை; அது பொருத்தமாகவும் இருக்காது.

விமானத்தின் விலையில் மாற்றம் இருந்ததாக மனுதாரர் தரப்பில் கூறப்படுகிறது. அரசு அளித்துள்ள ஆவணங்களை ஆய்வு செய்தபோது, ஆப்பிள் விலையையும், ஆரஞ்சு விலையையும் ஒப்பிடுவது சரியாக இருக்காது என கருதுகிறோம். விமானத்தின் அடிப்படை விலையை, வாங்கும் விலையுடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது. இவ்வாறு, நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இந்த வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதியான, கே.எம்.ஜோசப், தன் தீர்ப்பை தனியாக எழுதியுள்ளார். அதில், 'ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, எப்.ஐ.ஆர்., பதிவு செய்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் எந்த முகாந்திரமும் இல்லை.


சி.பி.ஐ., விசாரணை:

'ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை' என, மற்ற இரு நீதிபதிகளும் தெரிவித்துள்ள கருத்தில், தானும் ஒத்துப் போவதாக தெரிவித்துள்ளார். மேலும், ரபேல் விவகாரத்தில் முறைகேடு நடந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் இருந்தால், சி.பி.ஐ., விசாரணை நடத்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ரபேல் விவகாரத்தை வைத்து, இரண்டு ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் செய்து வந்த அரசியலுக்கு, உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.


ரபேல் வழக்கு கடந்து வந்த பாதை:

2007 : இந்திய விமானப் படைக்கு, 126 ரபேல் போர் விமானங்கள் வாங்க, ஐ.மு., கூட்டணி அரசு டெண்டர் வெளியீடு.

ஜன., 2012 : பிரான்சின் டசால்ட் நிறுவனம், டெண்டரில் குறைந்த விலையை தெரிவித்தது. இதில், 18 விமானங்கள் பறக்கும் நிலையிலும், 108 மத்திய அரசின் எச்.ஏ.எல்., நிறுவனம் தயாரிக்கும் விதத்திலும் ஒப்பந்தம்.

2014 : டசால்ட் - எச்.ஏ.எல்., நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்து. ஆனால், ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை.

ஏப்., 2015 : பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி, 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க முடிவு என அறிவிப்பு.

ஜன., 2016 : பிரான்ஸ் - இந்தியா இடையே ரபேல் விமானம் வாங்க ஒப்பந்தம் கையெழுத்து.

நவ., 2018 : இந்த ஒப்பந்தத்தில் நிகழ்ந்த முறைகேடுகள் குறித்து, எப்.ஐ.ஆர்., பதிய வேண்டும்; நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு.

செப்., : ரபேல் ஒப்பந்தத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்தை தாங்கள் தேர்வு செய்ததாக, டசால்ட் நிறுவனம் விளக்கம்.

அக்., 10 : ரபேல் ஒப்பந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் விசாரணையை துவங்கியது. ரபேல் ஒப்பந்த ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவு.

நவ., 12 : ரபேல் போர் விமானங்களின் விலை உள்ளிட்ட முக்கிய தகவல் அடங்கிய ஆவணங்களை, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது.

டிச., 14 : ரபேல் ஒப்பந்த நடவடிக்கைகளில் சந்தேகப்படும் விஷயம் எதுவும் இல்லை. மத்திய அரசு எடுத்த கொள்கை முடிவு சரி. யாருக்கும் சலுகை காட்டவில்லை என கூறி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, மனுக்களை தள்ளுபடி செய்தது.

மார்ச் 2019 : ரபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்.

மே: தீர்ப்புக்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்.

அக்., 8 : பிரான்சில் நடந்த நிகழ்ச்சியில், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், முதல் ரபேல் விமானம் ஒப்படைப்பு.

நவ., 14 : ரபேல் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X