ஹிந்து பெண்களுக்கு மட்டுமானது இல்லை! பொது கொள்கை வகுக்க சுப்ரீம் கோர்ட் முடிவு

Updated : நவ 16, 2019 | Added : நவ 15, 2019 | கருத்துகள் (16)
Share
Advertisement
sabarimala, supreme court, verdict, Hindu, ஹிந்து பெண், பொது கொள்கை, வகுக்க, சுப்ரீம் கோர்ட், முடிவு

புதுடில்லி: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள், அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை, ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மொத்தம் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வில், மூன்று பேர், இந்த மாற்றத்துக்கு பரிந்துரை செய்தனர். மீதமுள்ள இரண்டு நீதிபதிகள், மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இந்நிலையில், ஏழு பேர் அடங்கிய அமர்வு மறு ஆய்வு செய்து தீர்ப்பு வழங்கும் வரை, சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல, தடை இல்லை என, நீதிபதிகள் தெரிவித்தனர்.

கேரளாவில், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள், 10 முதல், 50 வயது வரையிலான பெண்கள் செல்ல, அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.


வன்முறை:


இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு, செப்., 28ல் தீர்ப்பு அளித்தது. அதில், 'அனைத்து வயது பெண்களும், எந்தப் பாகுபாடுமின்றி சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லலாம்' என, கூறப்பட்டது. இந்த தீர்ப்புக்கு, நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. தீர்ப்பை செயல்படுத்த மாநில அரசு முயன்றது. ஆனால், பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்தன.

கடந்தாண்டு மண்டல கால பூஜையின் போது, சபரிமலை கோவிலுக்கு செல்ல, பல பெண்கள் முயன்றனர். ஆனால், அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால், பல இடங்களில் வன்முறை வெடித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், 65 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்களை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல், இந்தாண்டு, பிப்., 6ல் ஒத்தி வைத்தது.


மண்டல பூஜை:


சபரிமலையில், இந்த ஆண்டுக்கான மண்டல கால பூஜைகள், நாளை மறுநாள் துவங்க உள்ளன. இந்நிலையில், சீராய்வு மனு மீதான தீர்ப்பு, நேற்று வழங்கப்பட்டது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: மதம் மற்றும் நம்பிக்கைகள் குறித்து, விரிவான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் என, மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மற்ற மத வழிபாடுகள் குறித்தும், மனுதாரர்கள் விளக்கி உள்ளனர். தனிநபர் உரிமை மற்றும் வழிபாட்டு உரிமைகளுக்கு இடையே, இந்த வழக்கு உள்ளது. இந்த நீதிமன்றம், கடந்த ஆண்டு வழங்கிய தீர்ப்பை, ஹிந்து பெண்களுக்கு மட்டுமானது என வரையறுத்துவிட முடியாது.


அனுமதி:


பெண்கள் செல்ல தடை விதிக்கும் நடைமுறை, சபரிமலையில் மட்டுமல்ல, மசூதி உட்பட, பல்வேறு மத கோவில்களிலும், பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. தாவூதி போரா சமூகத்தில், பெண்களின் பிறப்புறுப்பு சிதைக்கப்படும் வழக்கம் உள்ளது. எனவே, சபரிமலை விவகாரம் என்று மட்டுமல்லாமல், அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பெண்களுக்கான அனுமதி மற்றும் உரிமைகள் மறுக்கப்படுவது குறித்து, இந்த நீதிமன்றம் பொதுவான கொள்கையை வகுக்க வேண்டும். எனவே, இந்த சீராய்வு மனுக்கள், ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்படுகின்றன. அதுவரை, அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலுக்கு செல்லலாம் என்ற முந்தைய தீர்ப்புக்கு தடை இல்லை. இந்த ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பு அளிக்கும் வரை, அனைத்து சீராய்வு மனுக்களும் நிலுவையில் இருக்கும். இவ்வாறு, நீதிபதிகள் தெரிவித்தனர்.


மாறுபட்ட தீர்ப்பு:


வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், ஏ.எம்.கன்வில்கர், இந்து மல்கோத்ரா ஆகியோர், இந்த வழக்கை ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தனர். மற்ற இரு நீதிபதிகளான ஆர்.எப்.நாரிமன், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர், சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து, மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர்.சபரிமலை வழக்கு - ரீவைண்ட்


* 1991 மகேந்திரன் என்பவர், சபரிமலை கோவிலில் பெண்களுக்கான தடையை எதிர்த்து, கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு.

* ஏப்., 5 மனுவை, கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

* 2006 கன்னட நடிகை ஜெயமாலா, சபரிமலைக்கு, 1987ல், 28 வயதில் சென்றதாக கூறினார். இது குறித்து போலீசார் விசாரிக்க, கேரள அரசு உத்தரவு. சில மாதங்களில் இவ்வழக்கு கைவிடப்பட்டது.

* ஆக., 4 பெண்களுக்கான தடையை நீக்கக் கோரி, கேரளாவின் இளம் வழக்கறிஞர்கள் சங்கம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு.

* 2008 பெண்களுக்கான தடையை எதிர்த்து தாக்கல் செய்த மனுவுக்கு, கேரள கம்யூனிஸ்ட் அரசு ஆதரவு.

* மார்ச் 7 வழக்கு, உச்ச நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்.

* ஜன., 11, 2016 ஏழு ஆண்டுகளுக்குப் பின், வழக்கு விசாரணைக்கு வந்தது.

* பிப்., 6 பக்தர்களின் நம்பிக்கைக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, காங்கிரஸ் அரசு வாதம்.

* நவ., 7 அனைத்து பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என, கம்யூனிஸ்ட் அரசு வாதம்.

* பிப்., 20, 2017 வழக்கு, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்.

* ஜூலை 17, 2018 ஐந்து நீதிபதிகள் முன் விசாரணை துவக்கம்.

* விசாரணையில் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க, எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என, கம்யூனிஸ்ட் அரசு தெரிவிப்பு. கோவில் நிர்வாகம் எதிர்ப்பு.

* ஆக., 1, 2018 விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு.

* செப்., 28 சபரிமலையில், அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதி அளித்து, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

* பிப்., 6, 2019 தீர்ப்பை எதிர்த்த சீராய்வு மனுக்கள் மீது, உச்ச நீதிமன்றம் விசாரணை. தீர்ப்பு ஒத்திவைப்பு.

* நவ., 14 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் இந்து மல்கோத்ரா, கன்வில்கர் ஆகியோர், வழக்கை ஏழு நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி தீர்ப்பு. நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் நாரிமன், சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தனர்.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V.B.RAM - bangalore,இந்தியா
16-நவ-201912:06:10 IST Report Abuse
V.B.RAM சட்டம் மத நம்பிக்கை எல்லாம் விடுங்கள். நான் சாதாரணவன். என் சந்தேகம் என்னவெனில் ஒரு ஆன் நாற்பது நாள் விரதம் இருக்கும்போது எந்த மனைவியும் ( விரதம் இல்லாத நாட்களில் கூட ) கணவனை அழைக்கமாட்டாள் மேலும் தன்னை கட்டுப்படுத்திக்கொள்வாள். ஆனால் ஒரு மனைவி இதேபோல் நாற்பது நாள் விரதம் இருக்கும் போது சத்தியமாக மனசாட்சியுடன் சொல்லுங்கள் ஒரு கணவன் சும்மா இருப்பானா. மேலும் மனைவியை கட்டாயப்படுத்தமாட்டானா. அப்படியே மனைவி முடியாது என்று சொன்னால் அவன் அதையே வெளியேத்தடமாட்டானா. மனைவி ஒருநாள் அதாவது, வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் விரதம் இருப்பது என்பது வேறு.
Rate this:
Cancel
agni - chennai,இந்தியா
15-நவ-201921:33:29 IST Report Abuse
agni இந்த மண்ணின் கோவில்கள் அனைத்தும் இந்த மண்ணின் உயிர், நாகரிகம், ஆன்மிகம்,கலாச்சாரம் இவற்றை தாங்கி நிற்கும் பொக்கிஷங்கள் நம் மண்ணின் முன்னோர்களின் பல தலைமுறைகளின் பல ஆண்டுகள் முயற்சியால் இங்கு உருவானது. கோவில் களை உருவாக்குவதன் நோக்கம் , கடவுள் உருவங்கள்,நிலை,தன்மை அதற்கேற்றவாறு அவற்றை குறிப்பிட்ட விதத்தில் சக்திஅளித்து உருவாக்கி இருப்பார்கள்,அதன் சக்தி,அதிர்வு சிதைவுறாத வகையிலும் பாதிக்காத வகையிலும் வழிபாட்டு முறைகளை உருவாக்கி இருப்பார்கள்,கோவில் உருவாக்கிவர் முதல் இத்தனை காலம் இன்று வரை மக்கள் அதை பின்பற்றி உள்ளார்கள்.பழைமையான கோவில்களின் உருவாக்கம்,உருவாக்கியவர், சக்திநிலை எதுவும் அறியாமல் நீதிமன்றங்கள் கோவில் நடைமுறை,வழிபாடு முறை இவற்றில் தலையிடுவது தவறானது.கோவில்களும்,கோவில்நிலங்களும் அரசியல்,நீதி ,அரசாங்கம் இவர்களின் கையில் சிக்கி சீரழிகிறது .
Rate this:
Cancel
AYYA - Chennai,இந்தியா
15-நவ-201908:36:26 IST Report Abuse
AYYA பக்தர்களின் நம்பிக்கையை கோர்ட்/சட்டம் என்ற பெயரில் தகர்க்கக் கூடாது. சம்பந்த பட்ட வழக்கில் அதற்க்கு உரிய நிபுணர்களை கன்சல்ட் செய்துதான் தீர்ப்பு வழங்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X