அமுதத் தமிழ் பிறந்த இடம் பொதிகை மலை. தமிழ் போல் இனிக்கும், தண்ணீர் பெருக்கோடு ஓடி வரும் தாமிரபரணி ஆறு பிறக்கிற இடமும் பொதிகை மலை.
இரண்டும் சேர்ந்து பெருமை சேர்க்கும், தென் பாண்டி நாட்டில், பொதிகை மலைச் சாரலை அடுத்து, வளம் கொழிக்கும் திருநெல்வேலி அருகே இருக்கும் ஊர்கள் பல. அவற்றுள் ஒன்றான ஹரிகேசநல்லுாரில் வாழ்ந்து, காஷ்மீர் முதல், கன்னியாகுமரி வரை, எல்லா மாநில மக்களாலும் போற்றப்பட்டு, புகழ் ஒளி வீசித் திகழ்ந்த, 'காயக சிகாமணி' ஹரிகேசநல்லுார் முத்தையா பாகவதரை, சங்கீத உலகில் அறியாதவர்கள் கிடையாது.
ஹரிகேசநல்லுார் கிராமத்தில், 1877, நவ., 15ம் தேதியன்று, லிங்கம் அய்யர் - ஆனந்தம் அம்மாள் தம்பதிக்கு மகனாக முத்தையா பாகவதர் ஜனனம்.அவருக்கு,7 வயதாகும்போது தந்தை காலமானார். அதன் பின், தாயின் சகோதரர் லக்ஷ்மண சூரி தான், முத்தையாவின் குடும்பத்துக்கு ஊன்று கோலாகத் திகழ்ந்தார்.தாமே குருவாக இருந்து சமஸ்கிருதம், வேதம் முதலியவற்றை முத்தையாவுக்கு போதித்தார். பின், திருவையாறு முத்து கனபாடியின் குருகுலத்தில் தங்க வைத்து, பல்வேறு சாஸ்திர பரிமாணங்களை கற்கச் செய்தார்.இதனால், இசைக்கு பெயர் பெற்ற திருவையாறில், பல ஜாம்பவான்களின் இசைக் கச்சேரிகளை கேட்கும் வாய்ப்பு முத்தையாவுக்கு கிடைத்தது.
கச்சேரிகளை கேட்ட மாத்திரத்திலேயே, பாடல்களைப் பாடும் வல்லமை பெற்றவராகத் திகழ்ந்தார், முத்தையா பாகவதர்.இதை கண்ட பெரியோர், அவரை சாம்பசிவ அய்யரிடம், இசை பயிலும்படி கூறினர். அவ்வாறே முத்தையா பாகவதரும், சாம்பசிவ அய்யரிடம் இசை கற்கத் துவங்கினார்.இந்த சாம்பசிவ அய்யர், சபேச அய்யரின் குரு. சபேச அய்யர் தான், முசிறி சுப்ரமணிய அய்யரின் குரு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசை துறையை துவக்கிய வரும் இவரே,
பத்தாண்டு காலம், சாம்பசிவ அய்யரிடம் முறைப்படி சங்கீதம் பயிலும்போது, சென்னையில் கச்சேரி செய்ய வாய்ப்பு வரவே, சாம்பசிவ அய்யர் தன்னுடன் முத்தையா பாகவதரை அழைத்து வந்தார்.'சங்கீத கலாநிதி'அன்று முதல் கச்சேரிகளை செய்யத் துவங்கிய முத்தையா பாகவதர், திருவிதாங்கூர் மன்னரின் அழைப்பையடுத்து, அங்கு சென்று மிக அழகாக பாடினார். இவரது திறமையை உணர்ந்த மகாராஜா, இவரை ஆஸ்தான வித்வானாக அறிவித்தார். சிறிது நாட்கள் அங்கு இருந்த முத்தையா பாகவதர், பின், தஞ்சையில் உள்ள தாய்மாமா லக்ஷ்மண சூரியுடன் தங்கி இருந்தார்.
கடந்த, 1902 முதல், 1907 வரை, தஞ்சையில் வாசம் அமைந்தது. அந்த சமயத்தில், தஞ்சை ஆபிரகாம் பண்டிதருடன் சேர்ந்து சங்கீத ஆராய்ச்சியில் ஈடுபட்டார். பின், மைசூர் மகாராஜாவின் அழைப்புக்கு இணங்க, அங்கு சென்று அரண்மனையில் பாடினார்.மைசூர் மகாராஜா, அவருக்கு, 'காயக சிகாமணி' என்ற பட்டத்தை வழங்கினார்.1904 முதல்,சங்கீத கச்சேரிகள் மட்டுமல்லாமல், சங்கீத உபன்யாசமும் செய்து வந்தார். தியாகராஜ சரிதம், சதி சுலோசனா, வள்ளி திருமணம் போன்ற அவரது காலட்சேபங்கள் மிகுந்த புகழ் பெற்றவை.
கடந்த, 1907ல், தஞ்சையில் இருந்து தன் தாய்மாமா லக்ஷ்மண சூரியுடன், முத்தையா பாகவதர் சென்னைக்கு வந்தார். சென்னை வந்தது முதல், மாறி மாறி பல இடங்களில் கச்சேரிகளையும், கதாகாலட்சேபங்களையும் செய்யத் துவங்கினார்.செல்வந்தர் வீட்டு திருமணங்களிலும், சங்கீத சபைகளிலும் இவரது கச்சேரிகள் அடிக்கடி நிகழ்ந்தன.இதனால்,இவர் புகழின் உச்சிக்கு சென்றார்.
தமிழகம் எங்கும், இவரது பெயரும் புகழும் பரவியது.கடந்த, 1924ல், மதுரையில், 'தியாகராஜ சங்கீத வித்யாலயம்' என்ற இசைப் பள்ளியை துவக்கி, மூன்றாண்டுகள் தொடர்ந்து நடத்தினார். புகழ் பெற்ற மதுரை மணி அய்யர் போன்றோர், இங்கு படித்த மாணவர்கள். 1927ல், தற்போது மியான்மர் என்று அழைக்கப்படும், பர்மா சென்று, ரங்கூன் நகரத்து மக்களுக்கு இசை விருந்து அளித்தார்.
மேலும், 1928ல், சென்னையில் மியூசிக் அகாடமி துவங்கப்பட்டது. இதன் மாநாடுகளில், முதன் முதலில் தலைமை வகித்தவர், ஹரிசேகநல்லுார் முத்தையா பாகவதர் தான்.அகாடமி நடத்தி வந்த சங்கீத கலாசாலையின் முதல்வராகவும் பணியாற்றிய அவருக்கு, 1930ல், 'சங்கீத கலாநிதி' என்ற பட்டத்தை அகாடமி வழங்கியது.
இவரது மாமா, லக்ஷ்மண சூரியின் புதல்வர் தான், புகழ் பெற்ற வழக்கறிஞரும், சங்கீத வித்வானுமான டி.எல்.வெங்கட்ராமன் அய்யர். 1944ல், டி.எல்.வெங்கட்ராமன் அய்யர், 'சங்கீத கலாநிதி' பட்டத்தை வென்றார்.முத்தையா பாகவதர் இசை நுணுக்க விளக்கங்களை, 'சங்கீத கல்பத்ருமம்' என்ற நுாலில் அழகாகவும், ஆழமாகவும் எழுதியுள்ளார். அதற்காக, 1942ல் கேரள கலாசாலை அவருக்கு, டாக்டர் பட்டம் வழங்கியது. இசையில் முதன் முதலில் முனைவர் பட்டவர் பெற்றவர் இவரே.
'லவகுசா'முத்தையா பாகவதர் ஒரு சிறந்த வாக்கேயக்காரர். தமிழ், கன்னடம், தெலுங்கு, வடமொழி ஆகிய நான்கு மொழிகளில் வர்ணம், கிருதி போன்றவற்றை இயற்றியுள்ளார்.விஜய சரஸ்வதி, ஹம்சகமனி, கர்ண ரஞ்சனி, பசுபதி ப்ரியா, புதமனோகரி, கமனப்ரியா, குணரஞ்சனி, ஹம்சதீபகம், கோகிலபாஷிணி, அலங்காரி, வலஜி, சாரங்கமல்ஹார், கவுடமல்ஹார், ஹம்சா நந்தி, நிரோஷ்டா, மாயாப்ரதீபம், ஹரிநடாயனி, நாகபூஷணி, வீணாதாரி, சக்ரப்ரதீபம், விஜயநாகரி, ஊர்மிகா, குருப்ரியா என, 24 அபூர்வ ராகங்களை உருவாக்கியுள்ளார்; 400க்கும் மேற்பட்ட உருப்படிகளை இயற்றியுள்ளார்.
கடந்த, 1934ல் வெளிவந்த, லவகுசா என்ற திரைப்படத்திற்காக, 63 பாடல்களை, மும்பையில் உள்ள, 'ரஞ்சித் ஸ்டூடியோ'வில் இயற்றினார்.மைசூரில் உள்ள சாமுண்டேஸ்வரி அம்பாள் பெயரில், 108 பாடல்கள் இயற்றியுள்ளார். இவரது, 'மாதே மலயத்வஜ பாண்டிய சஞ்சாதே' என்ற கமாஸ் வர்ணம் இன்றளவும் புகழ் பெற்று விளங்குகிறது. நவக்கிரகங்கள் பெயரிலும் இவர் கிருதிகளை இயற்றியுள்ளார்.இத்தகைய புகழ் பெற்ற ஹரிகேசநல்லுார் முத்தையா பாகவதர், திருவனந்தபுரம் சுவாதி திருநாள் அகாடமிக்கு முதன் முதலாக, 1939ல் முதல்வராகப் பொறுப்பேற்று பணியாற்றியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பல சிறப்புகளை பெற்ற முத்தையா பாகவதர், 1945ம் ஆண்டு, ஜூன் மாதம், 30ம் தேதி, தான் வணங்கிய சாமுண்டேஸ்வரியின் திருவடிகளை அடைந்தார். இவருக்கு நேரடி வாரிசு இல்லை. ஆனால், புகழ் பெற்ற எழுத்தாளர் திருமதி சிவங்கரியும், இயலிசை அறிஞர் ஹரிகேசநல்லுார் வெங்கட்ராமனும் இவரது வழித்தோன்றல்களே.ஹரிகேசநல்லுார் முத்தையா பாகவதரின் வாழ்க்கை வரலாற்றையும், இசைப் புலமையையும் அறிய, வித்வான் எச்.வைத்தியநாதன் எழுதிய புத்தகங்கள் முதன்மையாக உள்ளன.
- முனைவர் சவுந்தர்யலஹரி 98841 59927
.maduramsiruvachur@gmail.com
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE