மதுரையில் சிறுமியை கொடூரமாக தாக்கிய தந்தை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரையில் சிறுமியை கொடூரமாக தாக்கிய தந்தை

Added : நவ 15, 2019 | கருத்துகள் (24)
மதுரையில் சிறுமியை கொடூரமாக தாக்கிய தந்தை

மதுரை: சிறுமியை நடுரோட்டில் துாக்கி போட்டு, கழுத்தில் மிதித்து தாக்குதல் நடத்திய தந்தை மீது கொடுக்கப்பட்ட புகாரை, போலீசார் வாங்க மறுத்து, இழுத்தடித்தனர்.

மதுரை, திருமங்கலம் கொடிமரத் தெருவைச் சேர்ந்தவர் அப்துல்சமது, 30; மனைவி மும்தாஜ்பேகம், 28. இவர்களுக்கு, 10 வயதில் மகள், 3 வயதில் மகன் உள்ளனர். குடி போதையில் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த அப்துல் சமது, இரண்டு மாதங்களுக்கு முன், மனைவியை வெட்டியுள்ளார். இதையடுத்து அவர், தனியாக அம்மா வீட்டில் இருந்து வருகிறார்.

நேற்று காலை, 10 வயது மகள், தன் அம்மாவை பார்க்க சென்று, வீட்டிற்கு வந்துள்ளார். இதனால், கோபமான அப்துல் சமது, சிறுமியை தெருவிற்கு இழுத்து வந்து தாக்கியுள்ளார்.அடித்ததில் கீழே விழுந்த சிறுமியின் கழுத்தில் ஏறி நின்றுள்ளார். அருகில் இருந்த டியூப் லைட்டை எடுத்தும் தாக்கியுள்ளார். அங்கு பதிவான, 'சிசிடிவி' காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவின.

அருகில் இருந்தவர்கள், சிறுமியை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள், ஜமாத்தார் உதவியுடன், புகார் செய்ய சென்றபோது, போலீசார் வாங்க மறுத்தனர். வி.ஏ.ஓ., பாண்டியராஜன் அளித்த புகாரையும், போலீசார் வாங்க மறுத்து விட்டனர். தகவலறிந்த, எஸ்.பி., மணிவண்ணன் கடிந்து கொண்டதை அடுத்து, புகாரை பெற்று, போலீசார் விசாரிக்கின்றனர்.

குழந்தை மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அப்துல் சமது, சில மாதங்களுக்கு முன், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரை திருடிச் சென்றபோது, ரோந்து போலீசார் விரட்டி, அவரை கைது செய்தனர். தற்போது, ஜாமினில் உள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X