சென்னை:தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்க திட்டத்திற்கு, நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு, இழப்பீட்டு தொகை வழங்கப்பட்ட நிலையில், அதற்கான வட்டியாக, 38 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது.
சென்னையின் குடிநீர் தேவைக்காக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, தேர்வாய் கண்டிகை மற்றும் கண்ணன்கோட்டை ஏரிகளை இணைத்து, புதிய நீர்த்தேக்கம் அமைக்க, 2013ல் அரசு முடிவு செய்தது.இதற்காக, 800 ஏக்கர் பட்டா நிலங்கள் தேவைப்பட்டன.விவசாய பட்டா நிலங்களை கையகப்படுத்துவதற்காக, பழைய நில எடுப்பு சட்டத்தின்படி, 2014ல், 840 பேருக்கு, 91 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. நிலத்தின் அப்போதைய சந்தை மதிப்பை விட, கூடுதலாக, 35 சதவீதம் இழப்பீடு விவசாயிகளுக்கு கிடைத்தது.
ஆனால், புதிய நில எடுப்பு சட்டப்படி, இழப்பீடு வழங்க வேண்டும் என, விவசாயிகள் போர்க் கொடி உயர்த்தினர்.இதையடுத்து, கூடுதலாக, 70 கோடி ரூபாய், சில ஆண்டுகள் தாமதமாக வழங்கப்பட்டது. இதனால், இடைப்பட்ட காலத்திற்கான, வட்டி தொகையை வழங்க, விவசாயிகள் நீதிமன்றத்தை அணுகினர்.தற்போது, இழப்பீட்டு தொகைக்கு வட்டியாக, 38 கோடி ரூபாய் வழங்க, அரசு முன்வந்துள்ளது.
இதற்கு, நில எடுப்பு ஆணையர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆகியோர், ஒப்புதல் வழங்கி உள்ளனர்.நிதித்துறை அனுமதி பெற்று, ஒரு மாதத்தில் நில உரிமையாளர்களுக்கு, இந்த இழப்பீட்டு வட்டித்தொகை வழங்கப்பட உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE