இஸ்லாமாபாத்: 'இந்தியாவுக்கு எதிராகப் போராட காஷ்மீரிகளுக்கு, 'ஜிகாத்' பயிற்சி அளித்தோம். அவர்களை நாங்கள், 'ஹீரோ'வாக பார்த்தோம்' என, பாக்., முன்னாள் அதிபர் முஷாரப் கூறியுள்ளார்.
பாக்., முன்னாள் அதிபரான, முஷாரப் அளித்த தேதி குறிப்பிடாத ஒரு பேட்டி அடங்கிய, 'வீடியோ'வை, பாக்., அரசியல் தலைவர் பர்கதுல்லா பாபர், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், முஷாரப் கூறியுள்ளதாவது: கடந்த, 1979ல், ஆப்கானிஸ்தானில் மத தீவிரவாதத்தை நாங்கள் அறிமுகம் செய்தோம். அங்கிருந்து சோவியத் ரஷ்யாவை வெளியேற்றுவதற்காகவும், பாக்.,குக்கு உதவுவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பிறகு, உலகெங்கும் உள்ள முஜாகிதீன்களை வரவழைத்து, பாக்.,கில் பயிற்சி அளித்தோம். அவர்களுக்கு ஆயுதங்களை அளித்தோம். அவர்கள் எங்களுடைய ஹீரோக்கள். ஹக்கானி எங்களுடைய ஹீரோ; ஓசாமா பின் லேடன் எங்களுடைய ஹீரோ.
ஆனால், அதன்பிறகு உலக சூழ்நிலை மாறியது. இவர்களை வில்லன்களாக பார்க்கத் துவங்கினர். அதேபோல், காஷ்மீரில் இருந்து வந்தவர்களை, ஹீரோக்கள் போல் வரவேற்றோம். அவர்களுக்கு பயிற்சி அளித்து ஆதரவும் அளித்தோம். அவர்களை முஜாகிதீன்களாக பார்த்தோம். இந்திய ராணுவத்துக்கு எதிராக போராடுவதற்காக அவர்களுக்கு பயிற்சி அளித்தோம். அதன் பிறகே, லஷ்கர் - இ - தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகள் உருவாகின. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
'ஜம்மு - காஷ்மீரில் வன்முறையைத் தூண்ட, பயங்கரவாதிகளுக்கு பாக்., உதவி வருகிறது' என, இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், அதை பாக்., மறுத்து வருகிறது. இந்நிலையில், பயங்கரவாதிகளுக்கு உதவியதாக, அந்நாட்டின் முன்னாள் அதிபர் முஷாரப் கூறியுள்ளார்.