கோவை : ''மத்திய அரசு செயல்படுத்தியுள்ள கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தால், நாட்டின் பொருளாதாரத்துக்கு ஆண்டுக்கு, 50 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவது தவிர்க்கப்படும்,'' என்று, மத்திய அரசின் கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் அதுல் சதுர்வேதி தெரிவித்தார்.
ஆரோக்யா பால், அருண் ஐஸ்கிரீம் தயாரிக்கும், 'ஹட்சன் அக்ரோ' நிறுவனத்தின் அதிநவீன மாட்டுத் தீவன தயாரிப்பு ஆலை, பழநி அருகே, மேலக்கரைப்பட்டியில் உள்ளது. இந்த ஆலையை மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு துறை செயலாளர் அதுல் சதுர்வேதி, இணை செயலாளர் மிகிர் குமார் சிங் ஆகியோர் பார்வையிட்டனர்.முற்றிலும் நவீன மயமாக்கப்பட்ட இந்த ஆலையில், தானியங்கள், ஊட்டச்சத்து ஆகியவற்றை கலந்து, 'சந்தோசா' என்ற பெயரில், தீவனமாக தயார் செய்கின்றனர். ஆலையின் திறன், செயல்படும் விதம் பற்றி, 'ஹட்சன்' நிர்வாக இயக்குனர் சந்திர மோகன், அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்தார்.பால் வள நிபுணரான ஜான் ஹென்றி நீஸன், ஹட்சன் நிறுவன செயல்பாடுகள், செயற்கை கருவூட்டுதலில் பின்பற்றும் முறை, மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவனம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி, விளக்கினார். யூரியா சேர்க்கப்படாமல், தீவனம் தயாரிப்பது தங்களது சிறப்பு என்றும் தெரிவித்தார்.
அரசு செயலாளர் சதுர்வேதி கூறியதாவது:விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கத்துடனும், இந்திய பொருளாதாரத்தை, 5 டிரில்லியன் டாலர் மதிப்பு கொண்டதாக மாற்றும் நோக்கத்துடனும் மத்திய அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் வளர்க்கப்படும், 53 கோடி கால்நடைகளுக்கு, கோமாரி நோய், புரூசெல்லா நோய் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. உலகில் வேறு எங்கும் இத்தகைய அதிக எண்ணிக்கையில், தடுப்பூசி போடும் பணிகள் நடந்தது இல்லை.இதற்கென ஐந்து ஆண்டுகளில், 13,343 கோடி ரூபாய் அரசு செலவழிக்கிறது. கோமாரி நோய் பாதிப்பால், நம் நாட்டுக்கு ஆண்டுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பு 50,000 கோடி ரூபாய். இந்த தடுப்பூசிக்காக ஆண்டுக்கு, 2,500 கோடி ரூபாய் செலவழிப்பதன் மூலம், 50,000 கோடி ரூபாயை மீதப்படுத்த அரசு வழி ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டம் மூலம், 5 ஆண்டுகளில் நாட்டில் கோமாரி நோய் முற்றிலும் ஒழிக்கப்படும்.
தற்போது நாட்டில், 30 சதவீதத்துக்கும் குறைவான அளவிலேயே, செயற்கை கருவூட்டும் முறை பயன்பாட்டில் உள்ளது. இதை, அடுத்த, 5 ஆண்டுகளில், 70 சதவீதத்துக்கும் அதிகமாக்க வேண்டும் என்பது திட்டம். இதற்கான பணிகள், செப்டம்பர் மாதம் தொடங்கின. நாட்டில், 50 சதவீதத்துக்கும் குறைவாக செயற்கை கருவூட்டல் செய்யப்படும், 600 மாவட்டங்களை கண்டறிந்து, அவை ஒவ்வொன்றிலும், 100 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.ஒவ்வொரு கிராமத்திலும், 200 கால்நடைகள் வீதம் தேர்வு செய்து, செயற்கை கருவூட்டம் செய்வது அரசின் திட்டம். இது முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது.
இதன் மூலம், திறன் மிகுந்த கால்நடை இனங்களை மேம்படுத்தவும் முடியும். நாடு முழுவதும் கால்நடை இனம் மேம்படுத்த நடக்கும் முதல் முயற்சி இதுதான்.கால்நடை வளர்ப்புத்தொழில் சந்திக்கும் பிரச்னைகள், அவற்றுக்கான தீர்வுகள் குறித்து புதிய யோசனைகளை, இளைஞர்கள், கண்டுபிடிப்பாளர் களிடம் இருந்து வரவேற்கும் வகையில் போட்டிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சிறந்த கண்டுபிடிப்புக்கு முதல் பரிசாக, 10 லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. அத்தகைய கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில், அரசே தொழில் தொடங்கவும் உதவி செய்யும்.கடந்த ஐந்தாண்டுகளில் கால்நடை வளர்ப்பு தொழில் தொடர்ச்சியாக, 8 சதவீதம் வளர்ச்சியடைந்து வருகிறது. மற்ற தொழில் துறைகளை காட்டிலும் இது, அதிகம் வளர்ச்சி பெற வாய்ப்புள்ள தொழில். இந்த துறையில் ஆர்வத்துடன் ஈடுபட தொழில் முனைவோர் முன்வர வேண்டும்.இவ்வாறு, அதுல் சதுர்வேதி தெரிவித்தார்.
ஹட்சன் நிறுவனத்துக்கு பாராட்டு
மத்திய அரசு செயலாளர் அதுல் சதுர்வேதி கூறுகையில், ''ஹட்சன் அக்ரோ புராடக்ட் நிறுவனம், பால் பண்ணைத் தொழிலில் சிறந்த முன்மாதிரி நிறுவனமாக செயல்படுகிறது. பால் சேகரிப்பு, தீவனம் தயாரிப்பு, பால் பொருட்கள் தயாரிப்பில் அதிநவீன வசதிகள், தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர். அவர்களை பின்பற்றி இன்னும் பல தொழில் முனைவோர் இந்த துறையில் வரவேண்டும்.''இங்கு செயல்படுத்தப்படும் மாதிரி திட்டங்கள், நாடு முழுவதும் அனைத்து பால் பண்ணைகளிலும் கட்டாயம் பயன்படுத்தப்பட வேண்டியவை. இதுபோல் பல ஆயிரம் நிறுவனங்கள் உருவாக வேண்டும். அரசு மற்றும் கூட்டுறவுத்துறையால் மட்டும் இந்த துறையில் முதலீடு செய்து கொண்டிருக்க முடியாது. தனியார் துறையினரும் இந்த துறையில் அதிக முதலீடு செய்ய வேண்டும். புதிய நிறுவனங்கள் நிறைய உருவாக வேண்டும்,'' என்றார்.
முன்னதாக, சூலுார் அடுத்த செலக்கரிச்சல் கிராமத்தில் அமைந்துள்ள ஹட்சன் நிறுவனத்தின் பால் குளிரூட்டும் மையத்தை பார்வையிட்ட அரசு செயலாளர், அங்கு பால் சேகரிப்பு, குளிரூட்டுதல், விவசாயிகளுக்கு பணம் வழங்கும் முறை பற்றி கேட்டறிந்தார்.
நெய் சிறந்தது!
அரசு செயலாளர் அதுல் சதுர்வேதி பேசுகையில், ''ஆலிவ் எண்ணெய்தான் மிகவும் சிறந்தது என்று உலகம் முழுவதும் பிரசாரம் செய்கின்றனர். அதிசய எண்ணெய் என்கின்றனர். ஆனால், அதைக்காட்டிலும், சுத்தமான நெய் மிகவும் சிறந்தது; அதிகம் பயன்தரக் கூடியது. சமையல் செய்வதற்கும், உடல் மசாஜ் செய்வதற்கும் ஆலிவ் எண்ணெயை காட்டிலும், சுத்தமான நெய் ஏற்றது. நெய் கொண்டு மசாஜ் செய்தால், உடல் எலும்புகள் வலுப்பெறும். 200 டிகிரியில் சூடுபடுத்தினாலும், நெய் கெட்டுப் போகாது. ஆனால், ஆலிவ் எண்ணெயை ஒரு முறை சூடுபடுத்தி விட்டால், அது ஆரோக்கியமற்றதாக மாறி விடும் என்பதே உண்மை. இதை நம் மக்களுக்கும், உலக நாடுகளுக்கும், நாம் தெரியப்படுத்த வேண்டும்,'' என்றார்.
நாடு முழுவதும் பின்பற்ற உறுதி
ஹட்சன் நிறுவன நிர்வாக இயக்குனர் சந்திரமோகன் கூறுகையில், ''மத்திய அரசின் செயலாளர் சதுர்வேதி மற்றும் அதிகாரிகள், எங்களது தீவன உற்பத்திக் கூடம், பால் குளிரூட்டும் மையம், பால் வினியோகம் செய்யும் உப்பிலி பாளையம் விவசாயி ஒருவரின் பண்ணை ஆகியவற்றை பார்வையிட்டனர். சர்வதேச அளவில் போட்டியிடும் வகையில், பால் உற்பத்தி செலவை குறைப்பது எப்படி என்று அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.''ஹட்சன் நிறுவன பால் சேகரிப்பு முறை, விவசாயிகளுக்கு உதவி செய்யும் திட்டங்கள், அதிக பலன் தரக்கூடிய தீவனம் தயாரிப்பு முறைகளை கேட்டறிந்த அவர்கள், இங்குள்ள அதிநவீன வசதிகளை பாராட்டினர். எங்களது நிறுவன மாடலை, நாடு முழுவதும் பின்பற்றுவதாக, அரசு செயலாளர் உறுதி அளித்துள்ளார். பால் உற்பத்தி செலவை குறைப்பது தொடர்பாக, எங்களது கருத்துக்களை கேட்பதற்காக, டில்லிக்கு வரும்படி அழைத்துள்ளார்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE